மொசூல் நகரில் இருந்து சதாம்உசேன் ஆதரவாளர்களை வெளியேற்றிய போராளிகள்

391

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் போராளிகள் கை ஓங்கியுள்ளது. வடக்கு மற்றும் மேற்கு ஈராக்கில் உள்ள மொசூல், திக்ரித், கிர்குக், பலூஜா, பாய்ஜா உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ளன.

சிரியா மற்றும் ஈராக்கில் பிடித்த பகுதிகளை ஒன்றிணைத்து ‘இஸ்லாமிய நாடு’ என்ற புதிய நாட்டை போராளிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் இஸ்லாமிய நாடு பகுதியில் உள்ள மொசூல் நகரில் தங்கியிருந்த முன்னாள் ராணுவ அதிகாரிகள் 25 முதல் 60 பேரை சுற்றி வளைத்து பிடித்து சென்றனர். இவர்கள் முன்னாள் அதிபர் சதாம்உசேனின் ஆதரவாளர்கள்.

அவரது ‘பாத்’ கட்சியை சேர்ந்தவர்கள். அதே நேரத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரியையும் திடீரென பிடித்து சென்று விட்டனர். பிடித்து செல்லப்பட்ட அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.

‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ போராளிகள் சன்னி பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களால் குறிவைத்து கடத்தப்பட்டுள்ள சதாம் உசேன் ஆதரவாளர்களும் சன்னி பிரிவு முஸ்லிம்கள்தான். தற்போது ஈராக்கை ஷியா பிரிவினர் ஆட்சி செய்து வருகின்றனர்.

இந்த அரசை அகற்றவே போராளிகளுக்கு சதாம் உசேன் ஆதரவாளர்கள் மற்றும் சன்னி பிரிவு தீவிரவாதிகள் ஆதரவு அளித்தனர். இவர்களின் உதவியுடன்தான் மொசூல் உள்ளிட்ட நகரங்களை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ போராளிகள் பிடித்து புதிய இஸ்லாமிய நாடு உருவாக்கினார்கள்.

தற்போது மொசூல் பகுதியில் தங்களுக்கு எதிரிகள் அல்லது போட்டி பிரிவுகள் இருக்கக்கூடாது என்பதற்காக அதை அழிக்க இந்த நடவடிக்கையில் போராளிகள் ஈடுபட்டுள்ளதாக அந்த மாகாண கவர்னர் அதீல் நுஜைபி தெரிவித்துள்ளார்.

அதன்மூலம் மக்கள் தங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். மேலும் அவர்கள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளனர் என்றும் அவர் கூறினார்

SHARE