ரஷியாவுடன் இணைக்கும் முயற்சி: உக்ரைன் கிழக்குப் பகுதியில் 11ஆம் தேதி பொது வாக்கெடுப்பு?

509

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவதற்காக ஸ்லாவ்யான்ஸ்க் நகருக்கு தெற்கே முக்கிய சாலையில் பீரங்கி வாகனங்களுடன் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள்.

உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனெட்ஸ்க் பிராந்தியத்தை ரஷியாவுடன் இணைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்த பிரிவினைவாதிகள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்கும்படி ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் உக்ரைன் அரசு விடுத்த கோரிக்கையை கிளர்ச்சியாளர்கள் நிராகரித்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

டொனெட்ஸ்க் பிராந்திய மக்களிடம், “”தொழில் நகரான டொனெட்ஸ்க் பிராந்தியத்தை சுதந்திரக் குடியரசாக அறிவித்துக் கொள்ளலாமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு அந்தப் பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே பொது வாக்கெடுப்பில் லட்சக்கணக்கானோர் வாக்களிக்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை இரு நாள்களுக்குள் கிளர்ச்சியாளர்களால் செய்து தர முடியுமா? என்று சந்தேகம் எழுந்துள்ளதாக அங்குள்ள அமைப்புகள் கூறுகின்றன.

எனினும், கிளர்ச்சியாளர்கள் தரப்பில் கூறுகையில்,””பொது வாக்கெடுப்பு சட்டத்துக்கு உள்பட்டு நடத்தப்படும். 15,000 தன்னார்வலர்கள் தேர்தல் பணிக்கு உதவுவர். 30 லட்சம் பேர் பொது வாக்கெடுப்பில் பங்கேற்கும் தகுதியுடன் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

டொனெட்ஸ்க் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காலினா கிரையுகாநோவா என்பவர் கூறுகையில், “”தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் தேசபக்தர்களாகிய நாங்கள் கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நிம்மதியற்ற வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறோம்” என்றார்.

உக்ரைன் அரசு எடுத்த ராணுவ நடவடிக்கையில் 30-க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்த வாக்கெடுப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் தூண்டுதல்-உக்ரைன் அச்சம்: இதனிடையே, உக்ரைன் பிரதமர் ஆர்சென் யாட்சென்யூக் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“உக்ரைனில் பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும். அந்நாட்டில் இம்மாதம் 25ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுவது வரவேற்கத்தக்கது’ என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கூறியிருப்பது குறித்து கவலை கொண்டுள்ளேன். ஏனெனில், அவர் சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றாகவும் உள்ளது. அவரது அறிவிப்புக்குப் பிறகு வெள்ளிக்கிழமையன்று பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கும்படி சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டேன் என்று யாட்சென்யூக் கூறினார்.

இரண்டாம் உலகப்போரின் வெற்றி விழாக் கொண்டாட்டத்தையொட்டி உக்ரைனில் தனது ஆதரவு கிளர்ச்சியாளர்களை தூண்டும் நடவடிக்கையில் ரஷியா ஈடுபடலாம் என்ற அச்சத்தில் அதிகாரிகளுக்கு யாட்சென்யூக் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவதற்காக ஸ்லாவ்யான்ஸ்க் நகருக்கு தெற்கே முக்கிய சாலையில் பீரங்கி வாகனங்களுடன் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள்.

SHARE