இதற்கு தங்களுடைய ஆட்சேபணையைத் தெரிவிக்கும் விதமாக உலகநாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இருப்பினும், ஐரோப்பிய நாடுகளின் எரிவாயுத் தேவைகளில் 30 சதவிகிதத்தையும், உக்ரைனுக்கான 50 சதவிகிதத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ரஷ்யா இவற்றை நிறுத்திவிடுவதான அச்சுறுத்தலை விடுத்துள்ளது.
இங்கிலாந்திற்கும் ரஷ்யா சிறிதளவேயான எரிவாயு விநியோகத்தை அளிக்கும்போதும் இதனை நிறுத்துவதென்பது அங்கும் மிகப் பெரிய விலை மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது. கடந்த 2006-ம் ஆண்டில் உக்ரைன் வழியாக ஆஸ்திரியா,
பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி, போலந்து ஆகிய நாடுகளுக்கான எரிவாயு சப்ளையை நிறுத்தியபோது இந்நாடுகளின் தேவைகளில் 30 சதவிகிதம் குறைந்தது. எனவே அரசியல் பேரங்களுக்கான அச்சுறுத்தலாக எரிவாயு விநியோகத்தை ரஷ்யா கட்டுப்படுத்துவதை சமாளிக்கவும், பிற்காலத்திலும் இத்தகைய நெருக்கடிகள் தோன்றாதிருக்கவும் ஐரோப்பிய நாடுகள் திட்டம் தீட்டிவருகின்றன.
அடுத்த மாதம் இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கேமரூனும், பிற ஜி7 நாடுகளின் தலைவர்களும் உக்ரைனுக்கான குளிர்கால எரிவாயுத் தேவைகளை ரஷ்யா நிறுத்தினால் உதவும்வண்ணம் ஒரு அவசரத் திட்டத்தில் கையெழுத்திட உள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஐரோப்பா முழுவதும் பல புதிய திரவ இயற்கை எரிவாயு மையங்களை உருவாக்கவும் உதவி அளிக்கும் திட்டங்கள் தயாரிக்கப்படும். மேலும், உலகின் மேற்குப் பகுதியிலிருந்து கிழக்கிற்கு எரிவாயு சப்ளை செய்யப்படும் வட ஆப்பிரிக்கா வழித்தடங்கள் அதிகரிக்கப்படும்.
ஜப்பானிலும், புகுஷிமா பேரழிவிற்குப்பின் மூடப்பட்ட அணுஉலைகள் சில மீண்டும் உற்பத்தியைத் தொடங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு நாடும் தனது எரிபொருள் தேவைக்கு ஒரே சப்ளையரை சார்ந்திருப்பது கூடாது.
அதே போல் தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காகவோ, பாதுகாப்பிற்காகவோ ஆற்றல் அச்சுறுத்தலை பயன்படுத்தக்கூடாது என்ற தெளிவான நடைமுறையை இந்தமுறை ஜி7 நாடுகள் முடிவு செய்துள்ளதாக மூத்த அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.