லண்டனில்அரவிந்தன் பாலகிருஷ்ணனுக்கு 30 வருட சிறைத் தண்டனை

290

Arvintn

லண்டனின் ஸ்ரெதம் பகுதில் வசிக்கும் அரவிந்தன் பாலகிருஷ்ணன் என்னும் 75 வயதுடைய நபர் இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் தனது சொந்த மகளை வீட்டில் அடைத்து வைத்திருந்த குற்றத்துக்காகவும் அவருக்கு 30 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட் வழிபாட்டுத் தலைவரான அரவிந்தன் பாலகிருஷ்ணன் மாவோயிஸ்ட் சிந்தனைகளை பின்பற்றும் இரண்டுபேரிடம் தன்னை ஒரு கடவுள் என்றும் தன்னிடம் சக்தியுள்ளதாகவும் கூறி அவர்களை பாலியல் வல்லுறவு செய்துள்ளதாகவும் தனது சொந்தமகளை வீட்டில் அடைத்து வைத்திருந்ததாகவும் நீதிமன்றில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

Southwark கிரவுன் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கில் அரவிந்தன் பாலகிருஷ்ணன், பெண்கள் மீது 6 தடவைகள் அநாகரீகமான முறையில் தாக்குதல் நடத்தியதாகவும் 4 தடவைகள் வல்லுறவுக்குள்ளாக்கியதாகவும் இரண்டுதடவைகள் உடல்ரீதியாக தாக்கியதாகவும் அவர்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

நீதிமன்றால் குற்றவாளியென கண்டுபிடிக்கப்பட்டு அரவிந்தன் பாலகிருஷ்ணனுக்கு 30 வருட கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதி டெபோரா ரெய்லர் (Deborah Taylor) நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருந்த அரவிந்தன் பாலகிருஷ்ணனைப் பார்த்து அவருக்கு கடுமையான சிறைத்தண்டனை வழங்குவதாக தெரிவித்தார்.

இதேவேளை அரவிந்தன் பாலகிருஷ்ணனின் மகளது பெயர் சட்டநோக்கம் கருதி வெளியிடப்படவில்லை. தீர்ப்புக் குறித்து கருத்து தெரிவித்த மகள் கூறுகையில்: இந்த தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. அத்துடன் எனக்கு விடுதலை கிடைத்து விட்டதாக நான் உணர்கின்றேன். எனினும் முடிவில் அவர் என்றைக்கும் எனது தந்தையே என்றும் குறிப்பிட்டார்.

அரவிந்தன் பாலகிருஷ்ணன் 1963 இல் சிங்கப்பூரில் இருந்து லண்டனுக்கு கல்விகற்க வந்து அதன்பின்னர் 1970இல் மாவோயிஸ்ட் வழிபாட்டு நிலையம் ஒன்றை நிறுவியதாக கூறப்படுகின்றது.

1983 இல் சியன் டேவிஸ் (Sian Davies) என்னும் பெண்ணை திருமணம் செய்து பெண்குழந்தை பிறந்ததாகவும் ஆயினும் அந்த பெண்குழந்தை கல்வி கற்க பாடசாலைக்குச் செல்லவோ அல்லது வெளியில் ஏனைய சிறுவர்களோடு பழகவோ அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

மேலும் 1996 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று சியன் டேவிஸ் மாவோயிஸ்ட் வழிபாட்டு நிலைய 2 ஆம் மாடியில் இருந்து ஜன்னலால் கீழே விழுந்தபோது கடுமையான காயங்களுக்குளாகி சில மாதங்களுக்குப்பின்னர் மரணமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணனின் மகள் மாவோயிஸ்ட் வழிபாட்டு நிலையத்தில் இருந்து வெளியே தப்பி வந்து பொலிஸ் நிலையத்துக்கு சென்றபோதும் அன்றையநாள் வங்கி விடுமுறை என்பதனால் பொலிசாரால் மீண்டும் தந்தையிடமே ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

SHARE