வடக்குக்கும், தெற்குக்கும் பாலமாக அமையக்கூடிய விக்னேஸ்வரன்- மனோ கணேசன்

473
விக்னேஸ்வரன் ஒரு தமிழர் என்பது எதிர்க்கட்சிகளுக்கு தடையாக இருக்காது!- பொதுவேட்பாளர் தொடர்பில் மனோ கணேசன்
வடக்குக்கும், தெற்குக்கும் பாலமாக அமையக்கூடிய விக்னேஸ்வரன், பதவிக்கு வந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அகற்றி இந்த நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகத்தை நிலைநாட்டுவார் என நாம் நிச்சயம் நம்பலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக எதிர்கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசியல் ஆய்வாளர் நண்பர் குசல் பெரேரா கூறியுள்ளார்.

இப்போது இங்கே பாராளுமன்ற உறுப்பினர் நண்பர் சுமந்திரன் அதை வழிமொழிந்து விட்டு, விக்னேஸ்வரனை எதிரணி பொது வேட்பாளராக்கும் இந்த யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், அதற்கான காரணத்தை ஐக்கிய தேசிய கட்சி, ஜேவிபி, ஜனநாயக கட்சி ஆகிய பெரும்பான்மை கட்சிகள் பகிரங்கமாக கூற வேண்டும் என கேட்டுள்ளார்.

அவரது கேள்வி சரி. அதற்கான விடையை இந்த எதிரணி கட்சிகள் வழங்கும் என் நான் நம்புகிறேன்.

விக்னேஸ்வரன் ஒரு தமிழர் என்பது எதிர்கட்சிகளுக்கு அவரை பொது வேட்பாளாராக ஏற்றுக்கொள்ள தடையாக இருக்காது என்றும் நான் நம்புகிறேன்.

இந்த நாட்டில் ஜனாதிபதி பதவி சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரித்துடையது அல்ல என்ற மாயை மாற்றப்படவேண்டும்.

வடக்குக்கும், தெற்குக்கும் பாலமாக அமையக்கூடிய விக்னேஸ்வரன், பதவிக்கு வந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அகற்றி இந்த நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகத்தை நிலைநாட்டுவார் என நாம் நிச்சயம் நம்பலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இந்த அரசு இன்று ஒரு திரைப்படத்தை திரையிட்டுள்ளது. இதற்கு கதை, வசனம், திரைக்கதை, இயக்கம் எல்லாமே மேலிடம்தான். ஜனாதிபதி தேர்தல் என்றும், இல்லையில்லை பாராளுமன்ற தேர்தல் என்றும் தனது உள்வீட்டு பங்காளி கட்சிகளை போட்டு குழப்புவதே இந்த முழுநீள படத்தின் நோக்கம். இப்படத்தில் அண்ணன் வந்து ஜனாதிபதி தேர்தல் என்கிறார். தம்பி வந்து பாராளுமன்ற தேர்தல் என்கிறார்.

இந்த அரசு எந்த தேர்தல் நடத்தினாலும் இனிமேல் தோல்வி நிச்சயம். அது இந்த அரசுக்கு தெரியும். அரசின் உள்ளே இருக்கும் சிலர் இந்த மூழ்க போகும் கப்பலில் இருந்து தப்பியோட முயல்கிறார்கள்.

கசினோவை காரணம் காட்டி நாங்கள் இந்த பாவத்துக்கு உடன்பட மாட்டோம் என சொல்கிறார்கள். இந்த அரசு செய்த முதல் பாவம் கசினோ அல்ல. கடைசி பாவமாகவும் இது இருக்க போவது இல்லை. இந்த உள்வீட்டு குழப்பம் காரணமாகவே அரசு தலைமை இந்த குழப்பமான கருத்துகளை சொல்கிறது.

நாங்கள் எந்த ஒரு தேர்தலுக்கும் தயார். இன்றைய நிலையில் இந்த அரசு பாராளுமன்ற தேர்தலை நடத்தினால், அதன்பிறகு நடத்தப்படும் ஜனாதிபதி தேர்தலுக்கு, அரசாங்க வேட்பாளருக்கு போஸ்டர் ஒட்ட ஒரு காகம் கூட எஞ்சி இருக்காது. ஆகவே சமிக்ஞை விளக்கை இடதுபுறம் காட்டிவிட்டு, வலதுபுறம் இந்த அரசாங்கம் திரும்பலாம்.

கிராமங்களில் சொல்வதுபோல தங்கையை காட்டிவிட்டு, தமக்கையை மணம் பேசும் நபர்கள் இவர்கள். இந்த நாட்டிலே இன்று சுமார் 5,000 சீனர்கள் இருக்கின்றதாக தகவல். ஆனால், நாங்கள் கொண்டை கட்டிய சீனர்கள் அல்ல என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

பாராளுமன்ற தேர்தல் எங்களுக்கும் தேவைதான். ஆகவே முடியுமானால் உடனடியாக பாராளுமன்ற தேர்தலை நடத்தும்படி நான் இந்த அரசுக்கு சவால் விடுக்கிறேன்.

ஏனென்றால் இந்த அரசு வீட்டுக்கு போகும் காலம் வந்து விட்டது. மனித உரிமைகள் மீறப்படுகின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.

கடந்த காலங்களில் தமிழ் பொதுமக்களை வெள்ளை வானில் வந்து கடத்தினார்கள். ஒரு உயர் போலிஸ் அதிகாரி கடத்தல், கப்பம், படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இன்று சிறையில் இருக்கிறார்.

இப்போது நேற்று முதல்நாள் குருநாகலையில், வெள்ளை வானில் வந்து தெருவில் நின்ற இரண்டு போலிஸ்காரர்களையே கடத்திக்கொண்டு போய் விட்டார்கள். அந்த அளவுக்கு இந்த நாட்டில் இன்று சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து போய் விட்டது.

போலிஸ் பேச்சாளர் அந்த கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட போலிஸ்காரையும், போராடி தப்பி வந்த போலிஸ் அதிகாரியையும் குறை சொல்கிறார். அவர்கள் கடமைக்கு செல்லும்போது ஆயுதங்களை எடுத்து செல்லவில்லை என்பது இவரது குற்றச்சாட்டு. இது இவர்களது போலிஸ் திணைக்கள பிரச்சினை. அதை அங்கு விசாரியுங்கள். ஆனால் அதை சொல்லி, போலிஸ்காரர்களே கடத்தி செல்லப்பட்டுள்ள பாரதூரமான நடந்த பெரிய விடயத்தை மறைக்க பார்க்காதீர்கள்.

பொது மக்களை பாதுகாக்க முடியாத இந்த அரசின் கீழுள்ள போலிஸ், குறைந்த பட்சம் தங்கள் போலிஸ் அதிகாரிகளையாவது பாதுகாக்க வேண்டும். இதை போலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண உணரவேண்டும்.

 

SHARE