வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகள் தொடர்பில் சுரேஸ் எம்.பி

454

தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை மற்றும் சர்வதேச நகர்வுகளுடன் தொடர்புடைய விடயங்களை வட மாகாண சபையில் தீர்மானங்களாக நிறைவேற்றுவதும், அவை பற்றிப் பேசப்படுவதும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினாலும், கட்சியின் தலைமையினாலும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் நகர்வுகளை மலினப்படுத்துவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 11வது அமர்வில் எம்.கே.சிவாஜிலிங்கம் ஐ.நா சர்வதேச விசாரணையினை மையப்படுத்தியதாக 3 பிரேரணைகளை சபைக்கு சமர்ப்பித்திருந்தார்.

எனினும் குறித்த பிரேரணைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் முடிவெடுக்க உள்ள நிலையில் அவற்றை சபைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என பேரவை தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

விடயம் தொடர்பாக கருத்துக் கேட்டபோதே பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கும், சாட்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் எமது கட்சி, குழு ஒன்றிணை நியமித்துள்ளதுடன், அந்தக் குழு பல முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

மேலும் குறித்த சர்வதேச விசாரணை உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் மீது வீழ்த்தப்பட்டிருக்கும் சர்வதேச அழுத்தங்களுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளின் தலைமைகள் மற்றும் நாடாளுமன்ற குழு மேற்கொண்டிருந்த முயற்சிகளே காரணமாக அமைந்திருக்கின்றன.

இவற்றை விடவும் மேலதிகமாக தென்னாபிரிக்க சமாதான முயற்சிகள், தமிழகத்தில் உருவாகியிருக்கும் அரசியல் மாற்றங்கள், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றனர்.

அத்துடன், அவை தொடர்பில் பல்வேறு நகர்வுகள் சர்வதேச மட்டத்திலும், உள்ளக ரீதியாகவும் தொடர்ந்தும் நடைமுறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே அவை தொடர்பாக பிரேரணைகளை கொண்டுவருவதும், அப்பட்டமாக பேசுவதும் வெளியே முன்னெடுக்கப்படும் நகர்வுகளை மலினப்படுத்துவது உண்மை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதனையும், தமிழ் மக்கள் தங்களுடைய தாயக பூமியில் தம்மை தாமே ஆளும் ஆட்சி அதிகாரத்துடன் சுதந்திரமாக வாழவேண்டும் என் இலக்குடனேயே செயற்பட்டு வருகின்றோம்.

எனவே மாகாணசபையில் தீர்மானங்களை நிறைவேற்றுவதனையும், பேசுவதனையும் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் கருதிவிடக் கூடாது.

நாம் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், தமிழ் மக்களுடைய அமோக ஆதரவுடன் நாம் என்ன நோக்கத்திற்காக அல்லது இலக்கிற்காக ஜனநாயக வழியில் போராடிக் கொண்டிருக்கின்றோமோ, அந்த இலக்கை அல்லது நோக்கத்தை அடைவதில் பல சிக்கல்களை அது உருவாக்கிவிடும் என்பதையே கூறவருகின்றோம்.

இந்தக் கருத்தில் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்காது என நாம் திடமாக நம்புகின்றோம்.

மேலும் வடமாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக முதலமைச்சர் வேட்பாளர் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் நாம் கட்சியின் தலைமைப் பீடத்திற்கு,முதலமைச்சரை முதன்மையாகக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக ஒரு ஆலோசனைக் குழு ஒன்றை உருவாக்கவேண்டும் என வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தோம்.

அந்தக் கோரிக்கை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததுடன், அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அது பின்னர் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. ஆனால் அவ்வாறு ஒரு அமைப்பை உருவாக்கினால் இரு தரப்பும் ஒரு நோக்கத்திற்காகப் பயணிப்பவர்கள் என்ற அடிப்படையில், பிரச்சினைகள், செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களை நாங்களே பேசி செயற்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

சமகாலத்தில் இவ்வாறான பிரச்சினைகளும் எழுந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவ்வாறான குழு ஒன்றினை உருவாக்கி எதிர்காலத்தில் மிகச்சிறந்த செயற்பாடுகளையும், ஒரு முன்மாதிரியினையும் நாம் வெளிப்படுத்தியிருக்க முடியும்.

எனவே அவ்வாறானதொரு பொறிமுறையினை உருவாக்குவதற்கு நாங்கள் எதிர்காலத்திலாவது முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பதே எங்களுடைய கருத்து என்றார்.

 

SHARE