வட-கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் தொடருமானால் பாரிய விளைவை அரசு சந்திக்க நேரிடும்…

921

இலங்கைத் தீவினில் வாழும் சிறுபான்மை இனமக்களின் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்வதற்காக மக்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்ற தன்மையினை ஆர்ப்பாட்டங்கள், சத்தியாக்கிரகங்கள், பேரணி கள், போன்றவற்றின் ஊடாகத் தெரிந்து கொள்ளலாம். தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக அணிதிரண்டு வடமா காணசபையை தமிழ்த் தலைமைகளி டம் கொடுத்திருந்தாலும் மக்களுக்காக வழங்கிய வாக்குறுதிகளை தமிழ அரசி யல் தரப்பு இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறதே தவிர அவற்றை நிறைவேற்றமுடியாத கையாலாகாத நிலை யில் இருக்கின்றது என்பது மனவருந்தத் தக்கது.

இன்று பெருமளவிலான தமிழ்மக்கள் கொன்றொழிக்கப்பட்டும், காணாமல் போயுமுள்ள நிலை யில் இருக்கும் சிறியளவிலான எண்ணிக்கையையுடைய மக்கள் பரம்பல் இன்று சுருங்கிவருகின்றது. திட்டமிட்ட நிகழ்ச்சிநிரல்களுக்கூடாக இலங்கை அரசு தமிழ்மக்களின் பூர்வீகக் காணிகளை அபகரித்து வருகின்றது. படைகளின் தேவைக்காகவும், சிங்களக் குடியேற்றங்களுக்காகவும் என இரண்டுவிதமான காரணிகளினடிப்படையில் காணி அபகரிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்று மக்கள் தமது சொந்தக்காணிகளுக்கு உரிய ஆதராங்களைப் பெற்றுக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுவதை பிர தேச செயலகங்களில் தினமும் நிற்கும் மக்களைக் கொண்டு நாம் அறியலாம்.

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை, உறையுள் என்பன உள்ளடங்குகின்றன. இவற்றில் உணவு, உடை என்பதற்கு அப்பால் உறை யுள் என்ற விடயம் நிலத்துடனும், மனித வாழ்வியலுடனும் பின்னிப் பிணைந்தது. நிலமின்றில் நாகரீகமில்லை. உல கில் தோன்றி நாகரீகங்கள், பண்பாடுகள் எல்லாம் ஒரு நிலத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருப்பதை வரலாறு நமக்குணர்த்துகின்றது. சிந்துவெளி நாகரீகம், மொஹஞ்சதாரோ நாகரீகம், ஹரப்பா நாகரீகமாக இருந்தாலும் சரி கிரேக்க நாகரீ கம், ரோம நாகரீகமாக இருந்தாலும் சரி அந்நாகரீகங்களெல்லம் அவை தோன்றிய நிலங்களின் பெயர்களை அடிப்படையாக வைத்தே இன்றுவரை அழைக்கப்படுகின்றன. ஆகவே நிலத்துக்கும். மனிதனுக்கும் இடையி லான சம்மந்தம் என்றும் பிரிக்கமுடியாதது.

நிலத்தினை அடிப்படையாகக் கொண்டே ஒரு இனத்தின் மொழி, கலாச்சாரம், பண்பாடு என்பன தீர்மானிக்கப்படுகிறது. உருவாகிறது. ஆகவே ஒரு மக்கள் கூட்டத்தின் நிலத்தின் மீதான உரிமையைப் பறிப்பதென்பது அவர்களது வாழும் உரிமையைப் பறிப்பதற்குச் சமமாகும். அதுவே இன்று இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில் நில அபகரிப்பு என்பது குறுகியகால செயற்பாடு அல்ல. மிக நீண்ட காலமாக நிலஅபகரிப்பு தமிழர் மத்தியில் நடைபெற்று வருகின்றது. நிலப்பரம்பலை உடைத்து மக்களை சிறுசிறு குழுமங்களாகப் பிரித்துவைத்திருக்கும் நிலைப்பாட்டை இலங்கைப் புறவுருவப்படத்தில் தமிழ்மக்களின் இன்றைய பரம்பலைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகளான தமிழர்கள் 2500 வருடங்களுக்கும் மேலான சரித்திரத்தைக் கொண்டுள்ளனர். தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் மரபுவழித் தாயகமா கும். சிங்களவர்களுக்கு சார்பாக எழுதப்பட்ட மகாவம்சமோ அல்லது இலங்கைத் தமிழரின் சரித்திரத்தை விபரிக்கும் எந்த ஒரு வரலாற்று நூலுமோ கிழக்கிலங்கையையோ, வன்னிப் பகுதி யையோ அல்லது யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியத்தையோ எந்த ஒரு சிங்கள அரசனும் ஆண்டதாக கூறவில்லை.

குறிப்பிட்ட ஒரு சமூகக் குழுமம் தன்னை ஒரு தேசிய இனமா கப் பிரகடனப்படுத்திக் கொள்வதற்கு அக்குழுமத்திற்குத் தனித்துவமான மொழி, வரலாறு, இலக்கியம், கலை கலாசார பின்னணி என்பவற்றுடன் தொடர்ச்சியான நிலப்பரப்பும் அந் நிலப்பரப்புடன் வரலாற்றுத் தொடர்பும் இருத்தல் வேண்டும் என்று மேற்குலக இனவியல் வரலாற்றாசிரியர்கள் வரையறுத்துள்ளனர். இதிலிருந்தே தாயகக் கோட்பாடு உருவாகியது. இக்கோட்பாட்டை உடைத்து தமிழர்களை சிறுமைப்படுத்தி இனப்பரம்பலை சீர்குலைக்கவே இணைந்திருந்த வடகிழக்கின் எல்லைக் கிராமமான மணலாற்றை சிங்களக்கிராமமாக 1980இல் இலங்கையரசு முதன்முதலில் மாற்றியது. ஆனால் 1949 முதல் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கும் முயற்சியில் இலங்கையரசு முனைப்புக்காட்டி வந்தது.

தமிழர் தாயகத்தில் கிழக்கு மாகாணத்தில் நிறுவப்பட்ட முதலாவது பாரிய சிங்களக் குடியேற்றம் 1949 கல்லோயாக் குடியேற்றமாகும். இதனை ஆரம்பித்து வைத்தவர் இலங்கையின் முதற் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க. அடுத்து 1956முதல் ஏற்பட்ட இனக்கலவரங்கள் தமிழர்களின் நிலங்களை துவம்சம் செய்தது.

1956 ஐத் தொடர்ந்து 1958, 1977, 1978, 1981, 1983 என தமிழர் தாயகத்திலும் தென்னிலங்கையிலும் மலையகப் பகுதியிலும் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட கலவரங்கள் தமிழர்களுக்கு உரிமையான நிலங்களையும் சொத்துக்களையும் அபகரிப்பதற்காக இன அழிப்பை நோக்காகக் கொண்டு ஆயுதப்படைகளின் உதவியுடன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டன. எல்லைக் கிராமங்களிலும் சிங்களவர் மத்தியிலும் வாழ்ந்த தமிழர்கள் இக்கலவரங்களின் போது நடந்த படுகொலைகளைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்டார்கள்; நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

1983 கலவரத்தை தொடர்ந்து தமிழர்கள் பெருமளவில் நாட்டைவிட்டு வெளியேறி மேற்கு நாடுகளுக்கு புகலிடம் தேடிச் சென்றனர். 1983 இல் இலங்கையின் தலைநகரில் தொடங்கப்பட்ட தமிழர்களுக்கெதிரான வன்முறையில் 3000 இற்கும் அதிகமான தமிழர்கள் உயிரோடு எரித்தும் வெட்டியும் கொல்லப்பட்டார்கள். பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இக்கலவரம் மலையகத்திற்கும் அனுராதபுரம் பொல நறுவை முதலான தமிழர் பிரதேசங்ளுக்கும் பரவியது. இலங்கையை பிரித்தானியர் கைப்பற்றியபோது அனுராதபுரத்தில் தமிழர்களே பெரும்பான்மையாக இருந்தனர். 1983 கலவரத்துடன் தமிழர்கள் முற்றாகவே அனுராதபுரத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இலங்கை சுதந்திரமடைந்த ஒரு சில ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்களின் சதவீதம் 3 மடங்கால் அதிகரித்தது. 1961 இல் 7002 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 4500 சதுர கிலோமீற்றர் நிலமானது பிரித்தெடுக்கப்பட்டு அம்பாறை என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. 15000 சிங்களக் குடும்பங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்டார்கள். 2007 இல் உள்ள தரவுகளின்படி அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகையில் 60 சதவீதமாக இருந்த தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் 30 சதவீ தமான நிலத்தையே உரிமையாகக் கொண்டிக்க சனத்தொகையில் 30 சதவீ தமான சிங்களவர்கள் மாவட்டத்தின் 70 சதவீதமான நிலத்தை உரிமையாகக் கொண்டிருக்கின்றமையக் காணலாம்.

இப்படியாக 1949 இல் தொடங்கி 2014 இன்றுவரை பார்க்கையில் இலங்கைத் தீவில் தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்யுமளவுக்கு (நுவாniஉ ஊடநயniபெ) நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் ஒரு புறம் வடகிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழினம் 1949 இலிருந்து தனது நிலத்தை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தாலும் இராணுவ ஆக்கிரமிப்பாலும் படிப்படியாக இழந்து வர மறுபுறம் ஏறத்தாழ 250 வருடங்களாக அரை அடிமைகளாக வாழும் மலை யகத் தமிழினம் அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களாலும் திட்டமிட்ட இனக் கலவரங்களாலும் தமது பூர்வீக நிலத்தின் மீதான இருப்பையும் உரி மையும் இழந்து வருகிறது. கிழக்கு மாகாணத்தில் இன்று தமிழினம் தனது இருப்பை நிலத்தின் மீதான உரிமையை முழுமையாக இழந்துள்ளது. கிழக்கில் தமிழர்கள் தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

2009 மே மாதத்தில் விடுத லைப் புலிகள் இயக்கத்தின் ஆயுத பலம் அழிக்கப்பட்ட பின்னர் வடபகுதி யில் குறிப்பாக வன்னிப் பெருநிலப்பரப்பில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலம் சிங்கள இராணுவத்தாலும் சிங்களக் குடியேற்றத்தாலும் தொடர்ச்சியாகப் பல்வேறு வழிகளில் சூறையாடப்பட்டு வருகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 29 ஆயிரத்து 311 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் வவுனியா மாவட்டத்தில் 110 ஏக்கர் நிலமும் அபகரிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுள முனை ஆண்டான்குளத்தில் தனி யார் ஒருவருக்குச் சொந்தமான 94 ஏக்கர், திருக்கோணம்பட்டி 26 ஏக்கர் வன்னிசியார் வயல்வெளி 5 ஏக்கர், விண்ணன்கம் வயல்வெளி 18 ஏக்கர், மருதடிக்குளவழி 48 ஏக்கர், அத்தான் கடவை 124 ஏக்கர், ஆலடிக்குளம் 74 ஏக்கர், சாமிப்பிலக்கண்டல் 143 ஏக்கர் ஈரக்கொழுந்தன் வெளி 71 ஏக்கர், படலைக்கல்லு 48 ஏக்கர் , நித்தகைக்குளம் 48 ஏக்கர் , செம்மலப்புளியமுனை 276 ஏக்கர் , நீராவி 163 ஏக்கர் , உலாத்துவெளி 15 ஏக்கர் , நீராவிவயல் வெளி 20 ஏக்கர் , வட்டுவன் 10 ஏக்கர் ஆகிய தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்களக் குடியேற்றங்களுக்காக அபகரிக்கப்பட்டுள்ளன .

இதேபோல் வட்டுவாகல் 600 ஏக்கர் , விமானப்படைக்கென ஒலுமடு அம்பகாமம் பகுதியில் 8000 ஏக்கர் , அம்பகாமம் ஏனைய காணி 500 ஏக்கர் , ஒட்டுசுட்டான் பிரதேச சபை உப அலுவலகம் , நூல்நிலையம் ஆயுள்வேத வைத்தியசாலை உள்ள இடங்கள் 2 ஏக்கர் , ஒட்டுசுட்டான் பழைய சந்தைக்காணி 1 ஏக்கர், ஒட்டுசுட்டான் முந்திரிகைத்தோட்டம் 15 ஏக்கர், ஒட்டுசுட்டான் இராணுவமுகாம் 10 ஏக்கர் புதுக்குடியிருப்பு பொதுவிளையாட்டு மைதானம் 2 ஏக்கர் , பழைய சந்தைக்காணி சனசமூக நிலையம், பொதுமலசல கூடம் 1 ஏக்கர், பொன்னம்பலம் வைத்தியசாலை இருந்த காணி 2 ஏக்கர், பிரதேச செயலகத்திற்கு முன்காணி 10 ஏக்கர் தேவிபுரத்தில் சிவசாமி என்பவரின் காணி 2 ஏக்கர், இரணைப்பாலை வீதி தேவிபுரத்தில் நவமணிப்பிள்ளையார் கோவில் உள்ள பகுதி 30 ஏக்கர், 10 பண்ணைகள் உள்ளடங்கலாக 1000 ஏக்கர் திட்டத்தில் கென்பாம், டொலர்பாம் ஆர்.வி.ஜி. கம்பனி காக்காபோட், சிலோன்தியேட்டர்ஸ் , நாவலர் பண்ணை இவர்கள் உள்ளிட்ட 10 பேருடைய 10,000 ஏக்கர் காணியும் அபகரிக்கப்பட்டுள்ளது .

இதேபோல் கொக்குத்தொடுவாய் மண லாறு 3417 ஏக்கர் , கேப்பாபிலவில் தனியார் காணி 526 ஏக்கர் , சீனியாமோட்டையில் ஒரு பகுதி 10 ஏக்கர் , கேப்பாபிலவில் ஏனைய காணி 2000 ஏக்கர் , ஒதியம லையும் அதனை அண்டிய பகுதிகளும் 3000 ஏக்கர் உள்ளடங்கலாக 29 ஆயிரத்து 311 ஏக்கர் நிலம் முல்லைத்தீவில் அபகரிக்கப்பட்டுள்ளது .

மணலாறு பிரதேசம் வெலி ஓயா என்றபெயரில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்ட பிரதேசமாகக் காணப்படுகின்றது. கரைதுறைப்பற்று மற்றும் ஒட்டுசுட்டான் ஆகிய இரு பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக மணலாறு பிரதேச செயலர் பிரிவு காணப்படுகின்றது. கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குள் ஜனகபுர கிரிபன்வௌ, அகட்டுஹால்வௌ கல்யாணபுர, சம்பத்நுவர ஆகிய கிராமங்களும் ஒட்டுசுட்டான் பிரதேச செய லர் பிரிவிற்குள் கஜபாபுர , நவகல்யாணபுர அத்தாவட்டுநுவௌ , நிக்கவௌ ஆகிய பகுதிகளும் சிங்களவர் குடியேற்றப்பட்ட பிரதேசமாகக் காணப்படுகின்றன .

இதில் கஜபாபுர என்னும் கிராமம் எமது பழைய சிலோன் தியேட்டர்ஸ் சுமார் 300 புதிய குடியேற்றங்கள் 2010 ஆம் ஆண்டிற்குப் பின்பு செய்யப்பட்டுள்ளன இவர்களுக்கு தலா ஏக்கர் குடியிருப்புக்காணியும் ஒரு ஏக்கர் விவசாயக் காணியும் வழங்கப்பட்டுள்ளது இப்பிரதேசம் தமிழர்களின் விவசாய நிலங்களாகும் . தனிக்கல்லு , உடங்கா போன்ற குக்கிராமங்கள் இதனுள் அடங்கும் வயல்வெளிகளாகும் .

இதேபோன்று நிக்கவௌ என்னும் இடத்தில் 450 புதிய குடியேற்றங்களும் கல்யாணபுரவில் 400 புதிய குடியேற்றங்களும் கிரிபன்வௌ எனப் பெயர் சூட்டிய இடத்திலிருந்து சூரியனாறுக்கு செல்லும் வழியில் 400 புதிய குடியேற்றங்களும் 2010 இற்குப் பின் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன .

இதில் கஜபாபுர என சிங்களப் பெயரிடப்பட்ட தற்பொழுது ஒதியமலைக் கிராமத்தை ஆக்கிரமித்து உள்ளது . இது மகாவலி எல் வலயம் எனக் குறிப்பிடப்பட்டு சிங்களக் குடியேற்றம் செய்யப்படுகின்றது . இதேபோல் யாழ் . மாவட்டத்தில் வலி . வடக்கில் 24 கிராம அலுவலர் பிரிவுகளில் 6500 ஏக்கர் தமிழ் மக்களுடைய நிலம் அபகரிக்கப்பட்டள்ளது . 12 பாடசாலைகள் , ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி , 25 இந்துக் கோவில்கள் , 15 கிறிஸ்தவ தேவாலயங்கள் , மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை , காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை , காங்கேசந்துறை மீன்பிடித் துறைமுகம் இவை அனைத்தும் தற்பொழுது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன .

சுமார் 81.5 மீற்றர் நீளமான கடற்கரையோரங்களும் 144,5 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பகுதியும் அதியுயர்பாதுகாப்பு வலயத்தினால் விழுங்கப்பட்டுள்ளன .

சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட 24 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இன்னமும் அகதிமுகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர் .

வவுனியா பிரதேச செயலர் பிரிவில் சேமமடுவில் இருந்து கொடிவைத்தகல்லுக்கு வரும் வழியில் சுமார் 350 புதிய குடியேற்றங்களுக்கு காணிகள் தற்பொழுது சுத்தப்படுத்தப்படுகின்றன . இவர்களுக்கு சுமார் 1000 ஏக்கர் விவசாயக் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன .

இதேபோல் நெடுங்கேணி வடக்கில் கரப்புக்குத்தி 10 ஏக்கர் , கனகராஜன்குளம் பெரியகுளம் 25 ஏக்கர் , மருதோடை 15 ஏக்கர் , ஒலுமடு ஓடைவெளி 20 ஏக்கர் , புளியங்குளம் இராமனூர் 15 ஏக்கர் , கனகராஜன்குளம் குறிசுட்டகுளம் 10 ஏக்கர் , குளவிசுட்டான் வேலன்குளம் 15 ஏக்கர் ஆகிய நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது . வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவில் மதியாமடுவுக்கும் நயினமடுவுக்கும் இடையில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் எமது மக்கள் கால்நடைகளின் மேய்ச்சல் தரையாக பாவித்த 500 ஏக்கர் நிலம் சிங்களத் தொழிலதிபருக்கு 100 வருடக்குத்தகைக்கு வழங்கப்பட்டு காணி முழுவதும் கையளிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் தரவுகளை படடியற்படுத்துவதிலும் அறிக்கைகள் விடுவதிலும் வடமாகாணசபை தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறது. புலம்பெயர் நாடுகளில் கூட மேடைப்பேச்சுக்களில் இவற்றைக் குறித்துப் பேசும் தமிழ்அரசியல்வாதிகள் தமிழ்க்களின் இருப்பைத் தகக்வைத்துக் கொள்ளவதற்கு ஏற்ற நடவடிக்கையை உடனடியாக எடுக் வேண்டும். இல்லையெனில் தமிழ்மக்ள் அரசுக்கு எதிராக கிளர்நதெழவேண்டிய நிலை உருவாகும். அது சர்வதேச அளவில் கொண்டுசெல்லப்படுமாயின் இலங்கை அரசாங்கத்துக்கு அது தொடர் சங்கடங்களை ஏற்படுத்தும் என்பதிலும ;சந்தேகமில்லை. ஆகவே இப்போது எதிர்நொக்கும் பிரச்சினைகளையே சமாளிப்பதில் விழிபிதுங்கி நிற்கும் அரசாங்கம் தமிழ்மக்களுக்கு சொந்தமாக நிலத்தை அபகரிப்பதில் கரிசனை காட்டாது எல்லா மக்களும் தனது நாட்டின் பிரஜைகளே. அனைவருக்கும் தமது சொந்த நிலத்தில் வாழும் சுதந்திரம் உள்ளது என்பதை உணர்ந்து கொண்டால் சரி.

– அநாமிக்கா –

 

 

 

SHARE