வன்னியிலிருந்து கால்நடையாக சென்ற மட்டக்களப்பு தளபதிகள்-கிழக்கு மண்ணும் தினக்கதிர் பத்திரிகையும்

728

batticaloa-town-centre

விடுதலைப்புலிகளின் தலைமைக்கும், மட்டக்களப்பு அம்பாறை விடுதலைப்புலிகளின் தலைமைகளுக்கும் இடையில் 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம்தான் பிளவு ஏற்பட்டது என பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இந்த பிளவு பூதாகரமாக வெளி உலகிற்கு தெரியும் வகையில் வெடித்தது 2004 மார்ச்சில் என்றாலும், சுமார் 4 வருடங்களாக முரண்பாடுகளும், பிளவுகளும் தொடர்ந்து வந்திருக்கின்றன. மட்டக்களப்பில் இருந்த ஊடகவியலாளர்களில் சிலர் இதை அறிந்திருந்தனர். பல சந்தர்ப்பங்களில் இந்த முரண்பாடுகள் எம்மையும் பாதித்திருந்தது.

விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தை குழுவில் கருணா ஐரோப்பா உட்பட உலக நாடுகளில் வலம் வந்த வேளையில் இந்த முரண்பாடுகளும், பிளவுகளும் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தன. வன்னிக்கு செல்ல மறுத்த கருணா பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பாவிற்கு சென்ற வேளையில் அவரை அழைத்து செல்வதற்கு நேரடியாக ஹெலிகொப்டர் கரடியனாற்றுக்கு வந்திருந்தது. கிளிநொச்சியிலிருந்து தமிழ்செல்வன் ஆகியோர் புறப்பட கருணா கரடியனாற்றில் இருந்து புறப்பட்டு கொழும்பில் அனைவரும் இணைந்து பேச்சுவார்த்தைக்கென சென்றனர். ஆரம்பத்தில் கிளிநொச்சிக்கு சென்று அங்கிருந்து கொழும்பு சென்ற கருணா இறுதி காலத்தில் கரடியனாற்றிலிருந்தே நேரடியாக கொழும்புக்கு சென்றார்.

பாரிய பிரச்சினையும் பிளவும் வரப்போகிறது என விடுதலைப்புலிகளின் தலைவருக்கு தெரிந்திருந்தும் ஏன் அவர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காது நீளக்கயிற்றில் விட்டிருந்தார் என்பது இன்றும் கேள்விக்குறியாக இருக்கும் விடயம் தான்.
விடுதலைப்புலிகளின் தலைமைக்கும் மட்டக்களப்பில் உள்ள விடுதலைப்புலி தளபதிகளுக்கும் இடையில் 2000ஆம் ஆண்டு முதல் உறவுகள் நல்ல நிலையில் இருக்கவில்லை என்பதை பல சந்தர்ப்பங்களில் அவதானிக்க முடிந்தது.
கருணா மட்டுமல்ல பிற்காலத்தில் கருணாவின் முடிவை எதிர்த்து விடுதலைப்புலிகளுடன் இருந்த கௌசல்யன், கேணல் ரமேஷ், சேனாதி, குயிலின்பன், ரமணன், கரிகாலன், என அனைவருமே வன்னியில் இருந்த விடுதலைப்புலிகளின் தலைமையுடன் முரண்பட்டு நின்றனர். மட்டக்களப்பில் அவர்கள் மேற்கொண்ட சில நடவடிக்கைகளை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட விடுதலைப்புலிகளின் தலைமை விரும்பாத போதிலும் அச்செயல்களை கௌசல்யன், கேணல் ரமேஷ் உட்பட செய்தனர்.

அந்த விடயங்கள் சிலவற்றை இப்பகுதியில் தர உள்ளேன்.

வன்னியிலிருந்து கால்நடையாக சென்ற மட்டக்களப்பு தளபதிகள்

ஜயசிக்குறு முதல் 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 20ல் மீட்கப்பட்ட ஆனையிறவு இராணுவ முகாம் தாக்குதல் வரை மட்டக்களப்பு அம்பாறை படைப்பிரிவான ஜெயந்தன் படைப்பிரிவு முக்கிய பங்காற்றியது. அதன் பின் 2000ஆம் ஆண்டு இறுதியில் கருணா தலைமையில் சுமார் 200பேர் வன்னியிலிருந்து கால்நடையாகவே மட்டக்களப்பிற்கு சென்றனர். அதில் கரிகாலன், விசு உட்பட முக்கிய தளபதிகள் பலரும் காட்டுவழியாக மட்டக்களப்பை சென்றடைந்தனர். பலநாள் காட்டுவழியாக பெரும் ஆபத்துக்களின் மத்தியில் மட்டக்களப்பை அவர்கள் சென்றடைந்தனர்.

அந்த பயணம் கூட சில மனக்கசப்புக்கள், பிளவுகளினாலேயே யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் கருணா தலைமையிலான மட்டக்களப்பு தளபதிகள் சிலரும் போராளிகளும் கால்நடையாக வன்னியிலிருந்து மட்டக்களப்புக்கு சென்றிருந்தனர். ஜெயந்தன் படைஅணி தளபதி ஜெயார்த்தன், தயாமோகன் ஆகியோர் அக்குழுவில் சென்றிருக்கவில்லை.

சமாதான ஒப்பந்தத்திற்கு முன்னைய காலம் என்பதால் அவர்கள் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே அப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.  இராணுவ முகாம்கள், இராணுவ நடமாட்டங்கள் நிறைந்த பகுதிகள் ஊடாகவும் அவர்களின் பயணம் அமைந்திருந்தது. இதில் சில போராளிகளும் உயிரிழந்திருந்தனர்.

அற்புதன் மாஸ்ரர் மீதான தாக்குதல்

சமாதான ஒப்பந்தத்திற்கு முதல் 2001ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி இரவு ( மாவீரர்தினத்தின் போது) தரவையில் மாவீரர் தின நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு தனது ஆயித்தியமலை அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த அற்புதன் மாஸ்ரர் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அற்புதன் மாஸ்ரர் ஒருகாலை இழந்திருந்தார். இத்தாக்குதல் கருணாவின் நேரடி உத்தரவின் பேரிலேயே நடத்தப்பட்டது.
அற்புதன்மாஸ்ரர் பொட்டம்மான் தலைமையிலான புலனாய்வு பிரிவின் மட்டக்களப்பு அம்பாறை பொறுப்பாளராக இருந்தவர். பொட்டம்மான் தலைமையிலான புலனாய்வுப்பிரிவுக்கும், கருணா தரப்பிற்கும் இடையிலான மோதலின் உச்சக்கட்ட வெளிப்பாடாகவே அற்புதன் மாஸ்ரர் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் இரு புலனாய்வுப்பிரிவுகள் செயற்பட்டன. ஒன்று பொட்டம்மான் தலைமையிலான புலனாய்வு பிரிவு. இதற்கு பொறுப்பாளராக அற்புதன் மாஸ்ரர் இருந்தார். கருணாவின் கீழ் உள்ள மட்டக்களப்பு அம்பாறை இராணுவப்பிரிவின் கீழ் இருந்த புலனாய்வுப்பிரிவுக்கு ரமணன் பொறுப்பாக இருந்தார். மட்டக்களப்பில் ரமணன் தலைமையிலான புலனாய்வு பிரிவுதான் பலம் வாய்ந்ததாக இருந்தது.
2001ஆம் ஆண்டு இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் உச்சக்கட்ட போர் நடந்து கொண்டிருந்த காலம். அப்போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடைபெறும் மாவீரர் தின நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு இராணுவத்தினர் தடை விதித்திருந்த காலம்.

வருடாவருடம் இராணுவ நெருக்கடிகள், கெடுபிடிகள் இருந்த போதிலும் மட்டக்களப்பில் இருந்த சில ஊடகவியலாளர்கள் சில மாற்று வழிகளால் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடைபெறும் மாவீரர்தின நிகழ்ச்சிக்கு சென்று வருவது வழக்கம்.

2001ஆம் ஆண்டு மாவீரர் தின நிகழ்ச்சிகளுக்கு நானும், சிவராமும், மனோ இராசசிங்கமும் செல்வதற்கு திட்டமிட்டிருந்தோம். காலையில் புறப்பட்டு மண்முனை ஊடாக கொக்கட்டிச்சோலைக்கு சென்று அங்கிருந்து தரவைக்கு செல்வதற்கு திட்டமிட்டோம். கொக்கட்டிச்சோலை தரவை பாதை என்பது ஆற்று வெள்ளத்தின் ஊடாக நடந்து செல்ல வேண்டிய பயங்கரமான பயணம் அது. கூடவே காட்டுப்பகுதிகளில் இராணுவத்தினர் பதுங்கியிருப்பதும் உண்டு.

மட்டக்களப்பு வதிவிட விலாசத்தை கொண்ட தேசிய அடையாள அட்டை வைத்திருந்ததால் என்னை செல்வதற்கு அனுமதித்த இராணுவத்தினர் சிவராமை தடுத்து வைத்து விட்டார்கள். மனோ இராசசிங்கமும் தனது அரசசார்பற்ற நிறுவன வேலையாக செல்வதாக கூறியதால் விட்டு விட்டார்கள். சிவராமின் தேசிய அடையாள அட்டையில் வதிவிட விலாசம் கொழும்பு என்றே இருந்தது. தனக்கு கொக்கட்டிச்சோலையில் வயல் இருப்பதாகவும் அதை பார்ப்பதற்காகவே அங்கு செல்வதாகவும் சிவராம் இராணுவத்தினருக்கு தெரிவித்தார். எங்கள் மூவரின் அடையாள அட்டையையும் வாங்கி வைத்துக்கொண்ட இராணுவத்தினர் வரும் போது சிவராமுக்கு கொக்கட்டிச்சோலையில் வயல் இருப்பதற்காக அத்தாட்சி கடிதம் ஒன்றை பிரதேச செயலாளரிடம் வாங்கி வர வேண்டும் என்றும் நிபந்தனை போட்டிருந்தனர்.  மறுநாள் பட்டிப்பளை பிரதேச செயலாளரிடம் ஒரு கடிதத்தை பெற்று வந்து கொடுத்த பின்பே எங்கள் இருவரின் அடையாள அட்டையையும் இராணுவத்தினர் தந்தனர்.

நாங்கள் கொக்கட்டிச்சோலையிலிருந்து தரவைக்கு செல்வதற்கான  ஒழுங்குகளை அற்புதன் மாஸ்ரரே செய்திருந்தார். பின்னர் தரவையில் அன்றிரவு நாங்கள் தங்கினோம். அற்புதன்மாஸ்ரர் மாவீரர் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் புறப்பட்டு சென்றார். அப்போதுதான் ஆயித்தியமலைக்கு அருகில் வைத்து அற்புதன் மாஸ்ரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதல் குறித்து கருணா தரப்பும் சரி, வன்னியும் சரி மௌனமே சாதித்தன. ஆனால் இயக்கத்தில் இருந்தவர்களுக்கு இது கருணாவின் உத்தரவின் பேரில் இடம்பெற்ற தாக்குதல் என்று தெரியும்.

சுடுமாறு உத்தரவிட்ட கருணா

2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதை தொடர்ந்து மேமாதம் அளவில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் தளபதிகள், அரசியல்துறை பொறுப்பாளர்கள் ஆகியோருக்கு இருவார கால பயிற்சி கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் இருந்த முக்கிய தளபதிகள், அரசியல் பொறுப்பாளர்கள் கூடிய ஒரு மிகப்பெரிய சந்திப்பாகவும் அது அமைந்திருந்தது.

அந்த கருத்தரங்கில் ஒவ்வொரு துறைசார்ந்தவர்களும் ஒவ்வொருநாள் பயிற்சி வகுப்புக்களை எடுத்தனர். நிர்வாகம், அரசியல், கல்வி, மருத்துவம், அபிவிருத்தி, ஊடகம், சட்டம், என பல துறைகளை சேர்ந்தவர்களும் பயிற்சி வகுப்புக்களை நடத்தினர். கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிர்வாக துறை உயர்அதிகாரிகள், சட்டதுறையை சேர்ந்தவர்களும் ஊடகத்துறை சேர்ந்தவர்களும் வகுப்புக்களை நடத்தினர். ஊடகத்துறை வகுப்புக்களை சிவராமும் நானும் எடுத்திருந்தோம்.  வெவ்வேறு நாட்களில்.

ஊடகத்துறையும் புலனாய்வும் என்ற தலைப்பில் போர் நடவடிக்கைகளின் போது ஊடகங்களை எவ்வாறு அரசுகளும், போராட்ட அமைப்புக்களும் பயன்படுத்தி வந்திருக்கின்றன என்பதே எனது அன்றைய பயிற்சி வகுப்பின் முக்கிய கருப்பொருளாக இருந்தது.

பயிற்சி வகுப்பை முடித்து விட்டு நான் திரும்பிய பின்னர் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பொறுப்பாளர் ரமணனை அழைத்த கருணா இவனை ( துரைரத்தினத்தை) கொஞ்சம் அவதானிக்க வேண்டும். இவன் பொட்டன்ர ஆள். இவன் வன்னிக்கு ஆதரவானவன். இவனை போட வேணும் என சொன்னதாக பின்னாளில் ரணமனே என்னிடம் கூறினார்.

கருணா பிரிந்த பின்னர் வன்னியில் சமாதான செயலகத்தில் ரமணனை நான், நடேசன், தவராசா ஆகியோர் சந்தித்த போது இந்த விடயத்தை கூறினார்.  மிக அவதானமாக இருங்கள் என ரமணன் ஆலோசனை கூறியிருந்தார்.

கருணா பிரிந்த போது அதை எதிர்த்து நின்று அதை முறியடித்தவர்களில் முக்கியமானவர் ரமணனாகும். அவர் பின்னர் வவுணதீவில் இராணுவத்தினரால் சினைப்பர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

கிழக்கு மாகாணத்திலிருந்து முதல் முறையாக வெளிவந்த தமிழ்தினசரி தினக்கதிர் பத்திரிகையாகும். அப்பத்திரிகையை உரிமையாளராக இருந்தவர் மனோ இராசசிங்கம். மன்று என்ற அரசசார்பற்ற நிறுவனத்தை நடத்தி வந்த மனோ இராசசிங்கம் 1995ஆம் ஆண்டில் விடிவானம் என்ற வாரப்பத்திரிகையை ஆரம்பித்தார். அப்பத்திரிகையின் ஆரம்பத்தில் வீ.சு.கதிர்காமத்தம்பி பிரதம ஆசிரியராக இருந்தார். பின்னர் 1996ஆம் ஆண்டின் பின் அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நான் கடமையாற்றினேன்.  ( விடிவானம் பத்திரிகை பற்றி பின்னர் விரிவாக எழுத இருக்கிறேன்)

அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தினக்கதிர் பத்திரிகை வாரப்பத்திரிகையாக ஆரம்பிக்கப்பட்டது. அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நான் பணியாற்றினேன். ஓப்செற் நவீன அச்சு தொழில்நுட்பத்தில் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த முதலாவது பத்திரிகை தினக்கதிர் ஆகும்.

பின்னர் அப்பத்திரிகை தினசரி பத்திரிகையாக வெளிவந்த போது எஸ்.எம்.கோபாலரத்தினம் பிரதம ஆசிரியராக பணியாற்றினார். சில காரணங்களால் நான் அதிலிருந்து வெளியேறியிருந்தேன்.  போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் இராணுவ நெருக்கடிக்குள் இருந்து அப்பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.

சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்துறை பொறுப்புக்களில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டது. மட்டக்களப்பு அம்பாறை அரசியல் பொறுப்பாளராக இருந்த கரிகாலன் நீக்கப்பட்டு கௌசல்யன் அந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார்.  இதுவும் உள்முரண்பாடுகளின் வெளிப்பாடாகத்தான் இடம்பெற்றது.  இந்த மாற்றங்கள் பற்றி தினக்கதிர் தலைப்பு செய்தியாக வெளியிட்டது. அது மட்டுமன்றி அப்பத்திரிகையின் உரிமையாளரான சாந்தி சச்சிதானந்தன் தொடர்ச்சியாக எழுதி வந்த அரசியல் கட்டுரையும் ஒரு காரணமாக இருந்தது. சாந்தி சச்சிதானந்தனின் அரசியல் கட்டுரையை வெளியிடக் கூடாது என அப்பத்திரிகை ஆசிரியரை அழைத்த விடுதலைப்புலிகள் எச்சரித்திருந்தனர். ஆனாலும் சாந்தி சச்சிதானந்தனின் கட்டுரை தொடர்ச்சியாக வெளிவந்தது.

சாந்தி சச்சிதானந்தனின் கட்டுரைகள் கூட மட்டக்களப்பில் இருந்த விடுதலைப்புலி தளபதிகளின் தன்னிச்சையான போக்கு, சிறுவர்களை கட்டாயமாக படைக்கு சேர்ப்பது உட்பட பல விடயங்களை சுட்டிக்காட்டி வெளிவந்தன.

2002ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நள்ளிரவு வேளையில் மட்டக்களப்பு நகரில் திருமலை வீதியில் இருந்த தினக்கதிர் அலுவலகத்திற்குள் புகுந்த விடுதலைப்புலிகள் அங்கிருந்த பத்திரிகைகளுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்த கணணிகள் மற்றும் பெறுமதியான பொருட்களை ஏற்றிச்சென்றனர். மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த கௌசல்யன் தலைமையில் வந்த குழுவினரே தினக்கதிர் பத்திரிகை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். கருணாவின் நேரடி உத்தரவின் பேரிலேயே கௌசல்யன் குழுவினர் இதனை செய்திருந்தனர்.

இதனை கண்டித்து கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. அப்போது கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்த நானும், செயலாளர் தவராசாவும் உட்பட எமது சங்கத்தை சேர்ந்த சிலருமே அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதனை விடுதலைப்புலிகளே செய்தனர் என பின்னர் அறிந்ததால் பெரும்பாலானவர்கள் ( எமது உறுப்பினர்கள் நடேசன் உட்பட) அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இருந்த போதிலும் சொற்பமானவர்களின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தோம்.

எங்களுக்கு கூட உடனடியாக இதை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. அன்று மாலை தான் விடுதலைப்புலிகளே இதை செய்தனர் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இத்தாக்குதலை கண்டித்து நாம் ஆர்ப்பாட்டம் செய்த போது அதில் அப்பத்திரிகையின் அப்போது ஆசிரியராக இருந்த ருஷாங்கன் கலந்து கொள்ளவில்லை.

இது தொடர்பாக பின்னர் ஒருமுறை வன்னியில் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களை சந்தித்த போது மட்டக்களப்பில் வெளிவந்த ஒரேஒரு பத்திரிகையையும் தடுத்து விட்டீர்களே என கேட்ட போது தினக்கதிர் பத்திரிகை மீதான தாக்குதலுடன் எங்களுக்கு உடன்பாடு இல்லை என சொன்னார்.

2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி பகல் 10மணியளவில் மட்டக்களப்பு நகரில் இருந்த தமிழச்சு அலுவலகத்திற்குள் புகுந்த விடுதலைப்புலிகள் அங்கிருந்த இயந்திரம், கணணிகள், உட்பட ஒரு குண்டுசி முதற்கொண்டு விடாது அனைத்தையும் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். மட்டக்களப்பு நகர அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த சேனாதி, துணை அரசியல்துறை பொறுப்பாளர் கிருஷன்,  குயிலின்பன் ஆகியோரே நேரடியாக சென்று ஊழியர்களை வெளியேற்றிவிட்டு அனைத்தையும் எடுத்து சென்றனர். கருணா நேரடியாக கௌசல்யனுக்கு  உத்தரவிட்டிருந்ததாகவும், இந்த உத்தரவிற்கு அமையவே மட்டக்களப்பு நகரப் பொறுப்பாளர் சேனாதி தலைமையிலான குழுவினர் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன்போது எமது விசேட படப்பிடிப்பாளரும் செய்தியாளருமாகிய  ச.பிரகாஸ் கருணா குமுவால் கடத்தப்ட்டார் அதன்பின் என்ன ஆனார் என்பது தெரியாது

சில நாட்களின் பின்னர் வன்னியில் அப்போது தலைமைச்செயலகத்தில் இருந்த மார்ஷலை ( இளந்திரையனை) சந்தித்தேன். அப்போது நான் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றிற்கு தலைவராக இருந்தேன். அப்போது இளந்திரையன் என்னிடம் கேட்டது ஆச்சரியமாகவும், விடுதலைப்புலிகளின் தலைமைக்கும் மட்டக்களப்பில் உள்ள விடுதலைப்புலிகளுக்கும் இடையில் முரண்பாடுகளும், மோதல்களும் முற்றி வருவதை உணர முடிந்தது.
ஏன் அண்ணை நீங்கள் தமிழச்சு அச்சகம் தாக்கப்பட்டதை கண்டிக்கவில்லை என மார்ஷல் என்னிடம் கேட்டார். நான் சொன்னேன் உங்களுடைய ( விடுதலைப்புலிகள்) ஆட்கள் தான் அதை செய்தார்கள். நாங்கள் கேட்டதற்கு அது எங்களுடைய அச்சகம்தான். அதுதான் எடுத்து சென்றோம் என்றார்கள். நீங்கள் அதை கண்டிக்கவில்லை என்கிறீர்கள் என்றேன். அது கருணாவின் தனிப்பட்ட முடிவு என மார்ஷல் சொன்னார். உங்களுடன் இருந்த பத்திரிகையாளர் யசியின் அச்சகத்தை தாக்கியதற்கு நீங்கள் கண்டனம் தெரிவித்திருக்கலாம் என மார்ஷல் சொன்னார்.

இரண்டு பக்கத்திலும் அடிவாங்கும் மேளத்தின் நிலையில் மட்டக்களப்பில் இருந்த பத்திரிகையாளர்கள் இருந்தனர்.
சமாதான ஒப்பந்த காலத்தில் இந்த உள்முரண்பாடுகள், வளர்ந்து வந்த நிலையில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் மட்டக்களப்பிற்கு வந்திருந்தார். சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தியில் கிளிநொச்சியிலிருந்து கரடியனாற்றிற்கு வந்திருந்தார்.

தமிழ்செல்வன் தங்கியிருந்த நாளில் கொக்கட்டிச்சோலையில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தை சேர்ந்த பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தார். இந்த சந்திப்பில் கருணா, ரமேஷ், உட்பட மட்டக்களப்பு அம்பாறையில் உள்ள அத்தனை தளபதிகள், அரசியல்துறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

அந்த சந்திப்பில் பல விடயங்கள் பற்றி பேசப்பட்டது. விடுதலைப்புலிகள் இராணுவ நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறார்களே ஒழிய மக்களை அரசியல்மயப்படுத்தும் வேலைகளில் ஈடுபடவில்லை போன்ற பல குறைபாடுகளை நாம் முன்வைத்தோம்.

சமாதான ஒப்பந்தத்தின் பின் கிளிநொச்சி வேகமாக வளர்ந்து வரும் அதேவேளை மட்டக்களப்பில் ஒரு முன்னேற்றமும் இல்லை. விடுதலைப்புலிகளின் தலைமை மட்டக்களப்பை பாராமுகமாக இருக்கிறதா என சிவராம் காரசாரமாக சில விடயங்களை கூறினார். மட்டக்களப்பில்தான் போராளிகள் பலர் மாவீரர்களாகியிருக்கிறார்கள். தமிழ்செல்வனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலும் சில விடயங்களை கூறினார். தமிழ்செல்வன் வழமையான தனது சிரிப்புடன் சிவராமின் குற்றச்சாட்டுக்களை சமாளித்துக்கொண்டார்.

பின்னர் எங்கள் எல்லோருக்கும் இரவு விருந்து இடம்பெற்றது. உணவு உண்டபின் நாம் பேசிக்கொண்டிருந்த போது கருணா சிவராமை தனியாக அழைத்து சென்று பேசிக்கொண்டிருந்தார். தமிழ்செல்வனுடன் சிவராம் காரசாரமாக பேசியதால் கருணா சிவராமை தனியாக அழைத்து ஏசுகிறாரோ என நினைத்துக்கொண்டோம்.

சந்திப்பு முடிந்து இரவு 11மணிக்கு பின்னர் நாம் மண்முனை படகு ஊடாக வந்து கொண்டிருந்த போது என்ன கருணா கடும் ஏச்சு தந்தானோ என சிவராமை பகிடியாக கேட்டோம்.

சிவராம் சிரித்து விட்டு சொன்னான்……….அவன் ஏன் ஏச, தமிழ்செல்வனுக்கு குடுத்தது காணாது என கருணா சொன்னான். தமிழ்செல்வனுக்கு ஏசினால் கருணாவுக்கு சந்தோஷம் தானே…….

சிவராமின் பதில் எமக்கு ஆச்சரியமாக இருந்தது.
2003ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஆறுக்கும் மேற்பட்ட மாவீரர் இல்லங்களில் நடைபெற்றது. பிரதான நிகழ்வு தரவையில் இடம்பெற்றது.
மாவீரர் நாள் ஏற்பாடுகள் தொடர்பாக மட்டக்களப்பு நகரில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய மட்டக்களப்பு அம்பாறை ஊடகத்துறை பொறுப்பாளர் கிரிஷன் மாவீரர்நாள் நடக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் இரு ஊடகவியலாளர் படி சகல இடங்களுக்கும் செல்வதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தை கேட்டிருந்தார்.

அதன் படி ஒவ்வொரு இடத்திற்கும் தலா இரு ஊடகவியலாளர்களை அனுப்புவதற்கு ஏற்பாட்டை செய்தோம். ஆனால் நடேசன் தான் கிளிநொச்சியில் நடைபெறும் மாவீரர்நாள் நிகழ்ச்சிக்கு தான் செல்லப்போகிறேன். இங்கு வரமாட்டேன் என கூறிவிட்டான். இது கருணா, ரமேஷ், கிரிஷன் உட்பட மட்டக்களப்பில் இருந்த விடுதலைப்புலிகளுக்கு பிடிக்கவில்லை.

பின்னர் ஒருநாள் நான் ரமேஷை சந்தித்த போது ரமேஷ் கூறிய விடயம் அதிர்ச்சியாக இருந்தது. நடேசண்ணை நினைக்க கூடாது கிளிநொச்சியில நடப்பதுதான் மாவீரர் நிகழ்ச்சி என்று. இங்கும் மாவீரர்நாள் நிகழ்ச்சி நடக்கிறது. இங்கும் மாவீரர் கல்லறைகள் தான் இருக்கு என்றதை நடேசண்ணையட்டை சொல்லுங்கோ.  அது ஒரு சிறிய விடயம். ஆனால் இவர்கள் அதை பிரதேச வேறுபாட்டுடன் நோக்குகிறார்களே என மனதிற்குள் நினைத்து கொண்டேன்.

இவை எல்லாம் வன்னி மட்டக்களப்பு என்ற முரண்பாடுகளும் பிளவுகளும் அதிகரித்து வருவதைத்தான் எம்மால் உணர முடிந்தது.

சமாதான ஒப்பந்த காலத்தில் தமிழ் பத்திரிகையாளர்களை இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தமிழ்செல்வன் சந்தித்து வந்தார். வன்னிக்கு வெளியில் இருக்கும் முக்கியமான தமிழ் ஊடகவியலாளர்கள் சந்திப்பது வழக்கம். அவ்வாறான ஒரு சந்திப்புக்கு சென்ற வேளையில் சந்திப்பு முடிந்த பின் வேறு சில விடயங்கள் பற்றி பேசுவதற்காக தமிழ்செல்வன் என்னை சந்தித்தார்.  அப்போது முரண்பாடுகள் வளர்ந்து வருவது பற்றியும் மட்டக்களப்பில் கட்டாய ஆட்சேர்ப்பால் பலரும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள் என்றும் சொன்னேன்.
தமிழ்செல்வன் வழமையான சிரிப்போடு அதெல்லாம் சமாளிக்கலாம் என சொன்னார்.

TPN NEWS

SHARE