விம்பிள்டன் டென்னிஸ்: கிவிடோவா 2–வது முறையாக ‘சாம்பியன்’ பவுச்சார்ட்டை பந்தாடினார்

479

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, கனடாவின் பவுச்சார்ட்டை வீழ்த்தி 2–வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

கிவிடோவாவுக்கு மகுடம்கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் உயரிதும், கவுரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இரண்டு வார காலமாக லண்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவும், கனடாவின் எவ்ஜின் பவுச்சார்ட்டும் மோதினர்.

ஒரு செட்டை கூட இழக்காமல் முதல்முறையாக இறுதிசுற்றை எட்டிய வளர்ந்து வரும் நட்சத்திரம் 20 வயதான பவுச்சார்ட், இறுதிப்போட்டியிலும் கலக்குவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

இடக்கை ஆட்டக்காரர் கிவிடோவாவின் அதிரடி ஷாட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய பவுச்சார்ட், போராட்டமின்றி ஒரேயடியாக சரண் அடைந்து போவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மணிக்கு அதிகபட்சமாக 113 மைல் வேகம் வரை சர்வீஸ் போட்டு தாக்கிய கிவிடோவா 6–3, 6–0 என்ற நேர் செட்டில் 55 நிமிடங்களில் பவுச்சார்ட்டை வீழ்த்தி கோப்பையை வசப்படுத்தினார்.

ரூ.18 கோடி பரிசு2011–ம் ஆண்டு கிவிடோவா முதல் முறையாக விம்பிள்டனை வென்ற போது இதே போன்று தான் மரிய ஷரபோவாவை (ரஷியா) துவம்சம் செய்தார். இந்த முறை பவுச்சார்ட்டை சக்கையாக பிழிந்து எறிந்து விட்டார். 24 வயதான கிவிடோவா விம்பிள்டனை தவிர வேறு எந்த கிராண்ட்ஸ்லாமும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் ரூ.18 கோடி பரிசுத்தொகையை அள்ளிய கிவிடோவா, நாளை வெளியாகும் புதிய தரவரிசையில் 6–வது இடத்தில் இருந்து 4–வது இடத்திற்கும் முன்னேறுகிறார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ கனவு சிதைந்த போதிலும் பவுச்சார்ட்டுக்கு ரூ.9 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. இறுதிப்போட்டிக்கு வந்ததன் மூலம் அவர் தரவரிசையில் 13–வது இடத்தில் இருந்து முதல் முறையாக டாப்–10க்குள் நுழைகிறார். அவர் புதிய தரவரிசையில் 7–வது இடத்தை பிடிக்கிறார். இதன் மூலம் பெண்கள் தரவரிசை வரலாற்றில் சிறந்த தரநிலையை எட்டும் கனடா வீராங்கனை என்று பெருமையை அவர் பெறுகிறார். இதற்கு முன்பு அந்த நாட்டை சேர்ந்த கார்லிங் பாசெட் செகுசோ அதிகபட்சமாக தரவரிசையில் 8–வது இடம் பிடித்திருந்தார்.

பெடரர்–ஜோகோவிச் இன்று மோதல்ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 4–ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், 2–ம் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

7 முறை விம்பிள்டன் உள்பட 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெடரர் வென்றிருந்த போதிலும், அவர் கடைசியாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று 2 ஆண்டுகள் ஆகி விட்டன. 32 வயதான பெடரரின் கதை முடிந்து போய் விட்டதாகசொன்னவர்களின் வாயை அடைக்க மகுடத்தை வென்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.

2011–ம் ஆண்டு விம்பிள்டன் உள்பட 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருப்பவர் ஜோகோவிச். அவருக்கு எதிராக இதுவரை 34 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ள பெடரர் அதில் 18–ல் வெற்றியும், 16–ல் தோல்வியும் கண்டிருக்கிறார்.

SHARE