வெளிச்சத்துக்கு வருகிறது, வாழ்க்கை ரகசியங்கள்!

533

நடிகை பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை சினிமாவாக உருவாகுவதாக ஒரு பரபரப்புத் தகவல் பாலிவுட்டில் உலா வருகிறது. அது உண்மையாக இருந்தால் அவரது வாழ்க்கை ரகசியங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படி வெளிச்சத்துக்கு வருவது அவரது பொதுவாழ்க்கைக்கு ஏற்றமாக இருக்குமா? இறக்கமாக இருக்குமா?

‘நடிகை அல்லவா, அவரது புகழுக்கான விஷயங்களை மட்டும் படத்தில் சேர்ப்பார்!’ என்று ரசிகர்கள் சொல்லாமல் சொல்வது ஒருபுறம் இருந்தாலும், இதுபற்றி பிரியங்கா சோப்ரா என்ன சொல்கிறார்?!

“என்னைப் பற்றி ஒரு சினிமா உருவாவதற்கு நான் தடை ஒன்றும் போடப்போவதில்லை. ஆனால் அது சரியான நேரத்தில் உருவாக்கப்பட வேண்டும்” என்கிறார்.

பிரியங்கா மாடலிங் துறையில் அடியெடுத்துவைத்து அழகுப்போட்டிகளில் பங்கேற்றவர். பின்பு அவரை இந்தி சினிமா வரவேற்றது. கதாநாயகியாக உச்சத்தில் இருக்கிறார். அவர் மாடலிங் செய்த காலத்தில் இருந்தே அஸீம் மெர்ச்சன்ட் என்பவர் அவருக்கு நண்பராக இருக்கிறார். பிரியங்காவின் வாழ்க்கை ரகசியங்கள் அனைத்தையும் அறிந்த அவர்தான் பிரியங்கா பற்றிய படத்தை உருவாக்கப் போகிறாராம்.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்த ‘வான்டட்’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்த அஸீம், தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.

“என்னைப் பற்றி ஒரு படம் எடுக்குமளவு நான் பெரிய ஆளாகி விட்டேனா என்று நினைக்கும்போது எனக்கு சந்தோஷத்தில் தலை, கால் புரியவில்லை. சீரியசாக சொல்ல வேண்டுமென்றால், என்னைப் பற்றி படம் உருவாக்குமளவு நான் பெரிய ஆளில்லை” என்று அடக்கமாகச் சொல்கிறார் பிரியங்கா.

“அந்த படத்தை யார் தயாரிக்க போகிறார்கள் என்பதெல்லாம் உண்மையிலேயே எனக்குத் தெரியாது. நான் வாழ்க்கையில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. வேண்டுமானால், எனது 40 வயதில் என்னைப் பற்றி ஒரு படம் உருவாக்கலாம். காரணம், நான் அப்போது, சாதிக்க நினைத்தவற்றைச் சாதித்திருப்பேன்” என்கிறார்.

பிரியங்கா பற்றி உருவாகும் படத்தில், அவரது மாடலிங் நாட்கள், அவரது முன்னாள் மேலாளர் பிரகாஷ் ஜாஜுவுடன் அவர் நடத்திய சட்டப் போராட்டம் ஆகியவை முக்கிய இடம் பிடிக்கும் என்று தெரிகிறது. பிரியங்காவை ஏமாற்றியதற்காக பிரகாஷ், இரண்டு மாதங்களை சிறையில் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர், பிரியங்காதான் தனக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று குற்றஞ்சாட்டினார். இருவரும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டியது பெரும் பரபரப்பை உருவாக்கியது.

‘அந்த விஷயங்களும் திரையில் இடம்பிடிக்கப் போகிறதாமே?’ என்று கேட்டால் பிரியங்காவின் முகம் சிவக்கிறது.

“என்னைப் பற்றி ஒருவர் சினிமா தயாரிக்கப் போகிறார் என்பது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி தரும் விஷயம். ஆனால் நீங்கள் இந்த கேள்வியை கேட்பது எனக்கு தாங்க முடியாத ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. காரணம், அந்தப் பிரச்சினையின்போது நானும், எனது குடும்பத்தினரும் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். எனது வாழ்வின் வலி மிகுந்த ஒரு பகுதியை வெளிச்சமிட்டுக் காட்ட நினைப்பது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மனரீதியாக அது ரொம்பவே தொந்தரவான விஷயம்” என்கிறார் படபடப்பாக.

தற்போது பிரியங்காவே ஒரு சுயசரிதைக் கதையில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். அதாவது, உலக குத்துச்சண்டை சாம்பியன் மேரி கோமாக அவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.

“மேரி கோமின் நிஜவாழ்க்கைக் கதையில் நான் நடிக்கிறேன். அதன் ஒவ்வொரு காட்சி படம்பிடிக்கப்      படும்போதும் மேரி கோம் உடனிருந்து கவனிக்கிறார், குறிப்பிட்ட சூழல்களில் தனது உணர்வுகள் எப்படி இருந்தன என்று விளக்குகிறார். அது எனக்கு ரொம்பவே உதவியாக இருக்கிறது” என்று கூறி முடிக்கிறார், பிரியங்கா சோப்ரா

SHARE