ஹக்கீம் முஸ்லிம் தீவிரவாதத்திற்கு முஸ்லிம்களை உசுப்பேற்றப்படுகின்றாரா? -ஜிகாத் பூச்சாண்டி காட்டும் முஸ்லிம் அரசியல்வாதிகள்

436
முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை அரசு அடக்கத் தவறினால் தீவிரவாதம் தலைதூக்கலாம். பௌத்த தீவிரவாதச்  சக்திகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்குவதற்கு அரசு தவறுமானால் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் தடுக்க முடியாது போகலாம் எனவும் அது சர்வதேசத்திற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கொழும்பில் ஹக்கீம் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைக் கூட்டி இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையிலுள்ள அனைத்து வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் ஹக்கீம் கூட்டிய வெளிநாட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.

haheem-600x450

ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளதாவது

பேருவளை. தர்கா நகர் சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசின் கண்டு கொள்ளாத போக்கு நீடிக்குமானால் அது இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு உதவுவதாகவே அமைந்து விடும். அவ்வாறான நிலைமை நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாகவே அமையும்.

பௌத்த இனவெறியாட்டதிற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கத் தவறி வருவதாகவும், அது இனவாதத்திற்கு மேலும் தூபமிடுவதாகவும் அமைந்து காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள ஹக்கீம், அரசாங்கம் இப்படியான செயல்பாடுகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

இல்லாவிட்டால் அவை முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமியத் தீவிரவாதத்தை தூண்டுவதாக அமையுமெனவும், அப்படி ஏற்படுமானால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்குமெனவும், அத்துடன் இஸ்லாமியத் தீவிரவாதம் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதம் உருவாகலாம் என்றும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்து பற்றி முஸ்லிம்கள் மிகவும் அவதானமான இருக்க வேண்டும்.

முஸ்லிம்கள் மீது ஏன் இந்தத் தாக்குதல்

இந்த பௌத்த நாட்டில் 10 வீதம் கொண்ட முஸ்லிம்கள் மூன்றாவது இனமாகவும் இரண்டாவது சிறுபான்மை இனமாகவும் உள்ளார்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்த மோதல்களால் சிங்களச் சிப்பாய்களும், தமிழ் போராளிகளும் ஏனைய மண் மீட்பு போராளிகளும் செத்து மடிய, நாடு முழுவதும் முஸ்லிம் வாலிபர்கள் எவ்விதமான சேதாரங்களுமின்றி கெட்டியாகவும் கட்டியாகவும் உள்ளார்கள்.

இதுதான் பௌத்த இனவாதிகளின் கண்களுக்கு குத்தி விட்டது. இன்னும் குத்திக் கொண்டுள்ளது. ஆனாலும் பௌத்த இனவாதிகளுக்குப் பின்னால் அரசின் உயர் மட்டம் உள்ளது என்பது உலகம் அறிந்த உண்மை.

அத்துடன் யுத்த சூழ்நிலையால் கடந்த காலங்களில் சுமார் 5 இலட்சம் தமிழ் வாலிபர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். வெளிநாடுகளில் அடைக்கலம் அடைந்து விட்டார்கள். இன்னும் வெளியேறிக் கொண்டுள்ளார்கள். அதனால்தான் 8 வீதம் இருந்த முஸ்லிம்கள் இன்று 10 வீதமாக உயர்ந்துள்ளார்கள்.

அரசாங்கம் கடைசியாக நாடு முழுவதும் இருந்து பெறப்பட்ட குடிசன மதிப்பீட்டுக் கணக்கின் மூலமாக முஸ்லிம்களின் இந்த அதிகரிப்பை கண்டு கொண்டுள்ளது. இப்போது இலங்கையில் முஸ்லிம்களின் பிறப்பு வீதம். கல்வி வீதம், வியாபார வீதம், சனத் தொகை வீதம் அதிகரித்துக் கொண்டு செல்வதைக் கண்டு கொண்டுள்ளது.

இந்தக் காரணங்களுடன் கடந்த காலங்களில் மு.கா தலைவர், ஜனாதிபதி மீதும் அவரது குடும்பத்தின் மீதும் பகிரங்கமாகவும் காரசாரமாகவும் ஒரு பொதுத் தேர்தல், ஒரு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஒரு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் உட்பட மூன்று தேர்தல்களில் பொது மேடைகளில் ஐ.தே.கவுடன் இணைந்து கொண்டு ஐ.தே.க.வை வெல்ல வைக்கலாம் என்ற நப்பாசையுடன் ஹக்கீம் ஜனாதிபதியை உண்டு இல்லை என்று போட்டுத் தாக்கி விட்டார்.

கடந்த காலங்களில் ஹக்கீம் அரசுக்கு எதிராக பொது மேடைகளில் பேசிய பேச்சுக்கள் அத்தனையும் அரசிடம் உள்ளது. அவைகளுக்காகப் பழி தீர்க்கவே இப்போது முழு முஸ்லிம்களும் பழி தீர்க்கப்பட்டு வருகின்றார்கள் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.

ஹக்கீம் ஜனாதிபதி முதல் முறுகல்

ஹக்கீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான முதன் முதலாவது முறுகல் 2005ம் ஆண்டு ஏற்பட்டது. 2005ம் ஆண்டு பிரதமராக இருந்த மஹிந்தர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுகின்றார்.

தனது வெற்றிக்காக வடக்கில் புலிகளுடன் மஹிந்தருக்கு ஆதரவு வேண்டி ஜனாதிபதியின் தற்போதையச் செயலாளர் லலித் வீரதுங்க, எம்பிக்களான மங்கள சமரவீர காலம் சென்ற சூரியாராச்சி ஆகியோரை வடக்கிற்கு அனுப்பி புலிகளுடன் பேச்சுவார்த்தை செய்தனர். அதில் மஹிந்தர் வெற்றியும் கண்டார்.

அப்போது மு.கா தலைவர் ஹக்கீமுக்கு மஹிந்தர் நேரடியாக தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்தி தங்களுடன் தான் பேச வேண்டும் அதற்கான நேரத்தையும் காலத்தையும் தெரிவு செய்து தாருங்கள் என்று மஹிந்தர் ஹக்கீமிடம் கேட்ட போது ஹக்கீம் மஹிந்தரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு தான் பேச விருப்பமில்லை என்று முகத்தில் அறைந்தால் போல் மஹிந்தரின் வேண்டுதலை முற்றாக தட்டிக் கழித்தார் ஹக்கீம் என்ற உயர் மட்டத் தகவல் உள்ளது.

மஹிந்தர் ஹக்கீமிடம் பேச இருந்த விடயம் 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தருக்கு மு.கா வின் ஆதரவை எதிர்பார்த்தார். ஆனால் அப்போது ஹக்கீம் அணி ஐ.தே.க. வுக்கு ஆதரவு அளித்திருந்தது. ஆனாலும் ஹக்கீமின் ஆதரவு இன்றி மஹிந்தர் பெரு வெற்றியடைந்தார். அன்று முதல் அதாவது 2005ம் ஆண்டு முதல் மஹிந்தர் ஹக்கீம் முறுகல் இன்னும் உள்ளது.

காரணம் கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போதும் ஹக்கீம் ஐ.தே. க. வுக்கே ஆதரவு அளித்தார். ஹக்கீம் மீது கொண்ட கோபம் இன்னும் இருக்கலாம். ஒரு பெரும்பான்மைக் கட்சியின் வேட்பாளர் தன்னுடன் பேச வேண்டும் என்று கேட்டால் அதற்கு மறுப்புத் தெரிவித்துத் தட்டிக் கழிப்பது அரசியல் சாணக்கியமா. அந்த சாணக்கியமற்ற செயலால்தான் இன்று ஒட்டு மொத்த முஸ்லிம்களும் பல இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றார்கள். அரசின் அந்தக் கோபத்தை இன்னும் முஸ்லிம்கள் அனுபவித்து வருகின்றார்கள். இன்னும் பல அனுபவங்களையும் எதிர்காலத்தில் பெறலாம்.

ஜிகாத் பூச்சாண்டி காட்டும் முஸ்லிம் அரசியல்வாதிகள்

hakeem2

கடந்த காலங்களில் வடகிழக்கில் புலிகளின் ஆதிக்கக் காலங்களில் மு.கா அணியினர் பல்வேறு சம்பவங்களில் தங்களது நாடாளுமன்ற உரைகளின் போது முஸ்லிம்களாகிய நாங்களும் ஜிகாத் ஆரம்பிப்போம், ஆயுதம் தூக்குவோம் என்று பல தடவைகள் உரையாற்றியுள்ளார்கள். அந்த உரைகளின் பதிவுகள் கன்சாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புலிகள் தங்களது ஆதிக்கக் காலங்களில் அரசாங்கத்துக்கு தண்ணி காட்டிய காலங்களில் மு.கா எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் நாங்களும் ஜிகாத் ஆரம்பிப்போம், ஆயுதம் தூக்குவோம் என்று நாடாளுமன்றத்தில் பூச்சாண்டி காட்டி வந்தார்கள். ஆனாலும் அந்தப் பூச்சாண்டிகளை ஒரு போதும் அரசாங்கம் கண்டு கொள்ளவும் இல்லை. கணக்கில் எடுக்கவும் இல்லை.

அப்படித்தான் ஜிகாத் ஆரம்பித்தாலும் அந்த ஜிகாத் அமைப்புக்கான தலைவர் பதவிக்காக பலர் அடிச்சுக் கொண்டு செத்திருப்பார்கள். மற்றவர்கள் காட்டிக் கொடுத்து எட்டப்பர் வேலை பார்த்துக் கொண்டு அரசாங்கத்திடம் நல்ல வெகுமதியைப் பெற்றிருப்பார்கள்.

இப்படியாக எந்தப் பக்கம் உழைப்பு உள்ளது என்றும் அரை அமைச்சு கிடைக்குமா முழு அமைச்சு கிடைக்குமா என்று அலையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மத்தியில் ஜிகாத் என்ற வார்த்தைக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் சம்பந்தமே கிடையாது என்பதுதான் உண்மை.

முஸ்லிம்களுக்கு சிந்தனைபூர்வமான தலைமைத்துவம் தேவை

முஸ்லிம்களுக்குத் தேவையானது சிந்தனைபூர்வமான தலைமைத்துவம் என்ற கருத்திற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.பேரினவாதிகளின் பலமும் அவர்களின் சக்திகளும் அதிகரித்துள்ள நிலையில் முஸ்லிம் அரசியல் என்பது மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். இன்று முஸ்லிம்களுக்குத் தேவையானது உணர்ச்சிபூர்வமான அரசியல் அல்ல. முஸ்லிம் வாலிபர்களை உசுப்பேற்றும் அரசியல் அல்ல என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்களும் ஜிகாத் ஆரம்பிப்போம் என்று பூச்சாண்டி காட்டும் அரசியலும் அதன் தலைமைத்துவமும் அல்ல. சிந்தனைபூர்வமான அரசியலும் அதன் தலைமைத்துவமும்தான் முஸ்லிம்களுக்குத் தேவையானது. உணர்ச்சிபூர்வமான அரசியலும், உசுப்பேற்றும் அரசியலும் முஸ்லிம்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கின்றோம். முஸ்லிம்களுக்குத் தேவைப்படுவது உணர்ச்சிபூர்வமான செயல்படும் தலைமைத்துவம் அல்ல .சிந்தனைபூர்வமாகச் செயல்படும் தலைமைத்துவமே.

சிந்தனைபூர்வமான தலைவரை வலியுறுத்தும் அமைச்சர் பசீர் சேகுதாவுத்

இன்று முஸ்லிம் சமுதாயத்திற்கு தேவையாக இருப்பது சிந்தனைபூர்வமான ஒரு தலைமைத்துவமே. சிந்தனைபூர்வ தலைமைத்துவம்தான் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு தேவையாக இருக்கிறது.

உணர்ச்சிபூர்வமான தலைமைத்துவம் என்பது இந்த காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு வழிகாட்டுவதற்கு எவ்விதமான பொருத்தமுமற்றது. உணர்ச்சிபூர்வமான செயல்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்காதவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு அமைச்சர் பசீர் சேகுதாவுத் கடந்த மாதம் மடவளை மதீனா தேசியக் கல்லூரியில் நடைபெற்ற வை.எம்.எம்.ஏ பேரவை மாநாட்டில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

அவரது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

முஸ்லிம் அரசியல் தலைமைகள் கூட்டுமொத்த சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கவேண்டும். தனித்துச் செயல்படுவதால் முஸ்லிம்கள் ஒன்றும் செய்ய முடியாது. தனித்தொரு சமுதாயமாக நின்று முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. அதற்கான வரலாறும் கிடையாது. அமைச்சர் பசீர் சேகுதாவுத்தின் கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிந்திக்கப்பட வேண்டியது. ஆழ்ந்து நோக்கப்பட வேண்டியது.

அத்துடன் அமைச்சரின் கருத்து பற்றி முஸ்லிம் சமுதாயம் சிந்திக்க வேண்டும். முஸ்லிம் சமுதாயம் பிழையான வழிகளில் இட்டுச் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

முஸ்லிம் தீவிரவாதம் என்பது முஸ்லிம்களின் அழிவுக்கான பாதை

முஸ்லிம் தீவிரவாதம் உருவாகும், முஸ்லிம் அடிப்படைவாதம் உருவாகும் என்று மு.கா தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ள கருத்தானது முஸ்லிம் சமுதாயத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

இந்த நாட்டின் 10 வீதம் கொண்ட மூன்றாவது இனமான முஸ்லிம் சமுதாயம் யாரை நம்பிக் கொண்டு எந்த அடிப்படையில் தீவிரவாத்தை கையிலெடுக்க முடியும். முஸ்லிம்கள் மத்தியில் இருந்து முஸ்லிம் தீவிரவாதம் ஒன்று உருவாகுமானால் அதை முளையிலேயே இரும்புக்கரம் கொண்டு அழிக்கப்பட வேண்டும். கிள்ளி எறியப்பட வேண்டும்.

ஏற்கனவே பாகிஸ்தான் பயங்கரவாதம் இலங்கையில் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இலங்கை முஸ்லிம் வாலிபர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளின் மூளைச் சலவை மூலமாக பாகிஸ்தான் பயங்கரவாதம் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றது. அதனால் இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவுக்கு எதிரான சக்திகளாக பேரினவாதிகள் கூக்குரல் விடுவார்கள். அதனால் இந்தியாவின் கோபத்திற்கு முஸ்லிம்கள் ஆழாகக் கூடாது.

இதன் ஆதாரமாக கண்டிப் பகுதியைச் சேர்ந்த சாகிர் ஹூசைன் கடந்த மார்ச் மாதம் சென்னையில் பிடிபட்டுள்ளார். மற்றும் பௌத்த இனவாதிகள் முஸ்லிம்கள் மத்தியில் ஜிகாத் உள்ளது, முஸ்லிம் தீவிரவாதம் உள்ளது என்று விசம் கக்கி வருகின்றார்கள்.

இப்படியான நிலையில் மு.கா தலைவர் வெளிநாட்டு ஊடகவியாளர்களை அழைத்து முஸ்லிம் தீவிரவாதம் உருவாகும் என்று தெரிவித்துள்ள கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதா. அவரின் கருத்தை முஸ்லிம் சமுதாயம் ரசிக்கின்றதா. அல்லது விரும்புகின்றதா.

இன்று உலகம் முழுவதும் முஸ்லிம் பயங்கரவாதம் என்று இருக்கின்ற நிலையில் மு.கா தலைவரின் கருத்து கண்டிக்கப்பட வேண்டியதா அல்லது வரவேற்கப்பட வேண்டியதா என்று முஸ்லிம் சமுதாயம் சிந்திக்க வேண்டும்.

மு.கா தலைவரின் கருத்து முஸ்லிம் வாலிபர்களை தீவிரவாத்திற்கு இட்டுச் செல்லும் கருத்தாக இல்லையா. முஸ்லிம் பயங்கரவாதத்தை வரவேற்கும் கருத்தாக இல்லையா. மு.கா தலைவரின் கருத்து இந்த நாட்டில் முஸ்லிம் பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தும் கருத்தாக இல்லையா.

10 வீதம் கொண்ட முஸ்லிம்கள் முஸ்லிம் பயங்கரவாத்தைக் கையிலெடுத்துக் கொண்டு எதைச் சாதிக்கப் போகின்றார்கள். எந்த இலக்கை அடையப் போகின்றார்கள். முஸ்லிம் ஈழம் பெறவா?.அரசைப் பயம் காட்டிச் சாதிககும் எண்ணமா அல்லது நிம்மதியாக இருக்கின்ற முஸ்லிம்கள் தங்களை அழித்துக் கொள்ளவா. முஸ்லிம் தீவிரவாதம் என்றால் அதன் மறுபக்கம் முஸ்லிம்கள் அழிந்து விட்டார்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

10 வீதம் கொண்ட முஸ்லிம்கள் மத்தியில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் வாலிபர்கள் சிங்களச் சிறைகளில் சித்திரவதை செய்யபப்பட்டு அரை உயிர்களுடன் அடைபட்டுக் கிடப்பார்கள் என்பதை ரெட் அலட் செய்கின்றோம். மற்றது முஸ்லிம் பயங்கரவாதம் ஒன்று உருவாக்க கூடாது. ஆனால் அப்படி உருவாக வேண்டும் என்றாலும் அதற்கும் தமிழ் மக்களின் உதவி இல்லாது அதுவும் முடியாது.

புலிகளின் வீழ்ச்சியில் இருந்து முஸ்லிம்கள் படிப்பினை பெறவேண்டாமா

உலகில் முதலாவது கெரில்லா தாக்குதல் காரர்கள் தமிழ் விடுதலைப் புலிகள். வாய் பேச்சில் வீரம் காட்டாது செய் அல்லது செத்து மடி என்ற வீரத்துடன் கெரில்லா தாக்குதல் என்றால் என்ன என்பதை செயல்வடிவில் செய்து காட்டிவிட்டுச் சென்றுள்ளார்கள். ஒரு நேரான உறுதியான கட்டுக் கோப்புடன் தங்களது பயணத்தை ஆரம்பித்தவர்கள். இது வரலாறு. விடுதலையின் வீரவரலாறு.

அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை பன்னாட்டுப் படைகள் மற்றும் யுத்த தாங்கிகள் மூலமாக அழித்த அரசு முஸ்லிம் பயங்கரவாத்தை அழிப்பதற்கு அவ்வளவு காலம் எடுக்காது. மூட்டைப் பூச்சு நசுக்குவது போன்று நசுக்கி விடுவார்கள். புலிகளின் படிப்பினை முஸ்லிம்களுக்கு நல்ல உதாரணமாகும். நல்ல படிப்பினையாகும். ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் முஸ்லிம் தீவிரவாத்தை ஊக்குவிப்பார்கள்.

அடுத்தவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கும், உணர்ச்சிபூர்வமான வார்த்தைகளுக்கும், உசுக்பேற்றும் வார்த்தைகளுக்கும் முஸ்லிம்கள் மயங்கிவிட வேண்டாம். ஏற்கனவே பெருத்த சந்தேகத்தின் மத்தியில் தமிழ் முஸ்லிம் மக்கள் வடகிழக்கில் இராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள நிலையில் முஸ்லிம்கள் முஸ்லிம் தீவிரவாதத்தில் அள்ளுண்டு போனால் அழிந்து போவீர்கள்.

01706

முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது அரசியல் வியாபாரத்திற்காக, பதவிக்காக எதையும் செய்வார்கள், பேசுவார்கள். அதற்காக முஸ்லிம்கள் மயங்கி விடாதீர்கள். ஏற்கனவே நாரேத் தக்பீர் என்ற வார்த்தையில் அள்ளுண்டு மயங்கி எங்கிருந்தோ வந்தவருக்கு பல்லாக்குத் தூக்கிக் கொள்வதன் மூலமாக இன்னும் மீள முடியாமல் உள்ளீர்கள். இந்த நிலையில் முஸ்லிம் தீவிரவாதத்தில் அள்ளுண்டு போவீர்களாயின் நீண்டகாலம் கம்பி எண்ணிவீர்கள் என்பதை மீண்டும் மீண்டும் ஞாபகமூட்டுகின்றோம்.

குறிப்பாக நாரேத் தக்பீர் என்ற வார்த்தையில் மயங்கும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள்தான் முஸ்லிம் தீவிரவாதத்தையும் அது சம்பந்தமாக உசுப்பேற்றும் அரசியல்வாதிகளையும் இனம் கண்டு உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள். தப்பித்துக் கொள்ளுங்கள்.

ஏற்கனவே கிழக்கில் பல ஊர்களில் இன்னும் நீதிமன்றம் பொலிஸ் நிலையம் என்று அலைந்து திரிகின்றீர்கள். இந்த நிலையில் முஸ்லிம் தீவிரவாதம் என்ற உசுப்பேற்றல் உங்களை அழித்து விடும்.

-எம்.எம்.நிலாம்டீன்-

TPN NEWS

 

SHARE