ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு

374
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கிடையே நடைபெற்று வரும் கடும் சண்டையில் சுமார் 1900 பாலஸ்தீனியர்களும், இஸ்ரேல் தரப்பில் 67 பேரும் பலியாகியுள்ள நிலையில் மனித நேய அடிப்படையில் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் செய்ய இருதரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

போர் நிறுத்த நேரம் தொடங்கிய உடனே காசாவில் முகாமிட்டுருக்கும் இஸ்ரேல் ராணுவத்தின் படைகள் அனைத்தையும் இஸ்ரேல் திரும்பப் பெற்றது.

5-ம் தேதி தொடங்கிய இந்த போர் நிறுத்தம் இன்று முடிவடைந்ததையடுத்து காசாவில் இருந்து இஸ்ரேல் நகரங்களை நோக்கி ஹமாஸ் போராளிகள் ஏவுகணைகளை வீசி தாக்கினர். ஆனால் முன்கூட்டியே போர் நிறுத்தத்தை மீறி தாக்கியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

இந்நிலையில், ஹமாஸ் போராளிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

இதனை உறுதி செய்த இஸ்ரேல் ராணுவம், காசா பகுதியில் உள்ள தீவிரவாத பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்தது. பாலஸ்தீன பிராந்தியத்தில் இஸ்ரேல் வீரர்கள் யாரும் நுழையவில்லை என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

வடக்கு காசாவில் உள்ள ஜபாலியாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசியதாக பாலஸ்தீன உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.

SHARE