அடைமொழியை மாற்றிய சரத்குமார்: இனி சுப்ரீம் ஸ்டார் இல்லை.. புரட்சித் திலகம்!

559

சரத்குமார், சுப்ரீம் ஸ்டார் என்கிற அடைமொழிக்குப் பதிலாக இனி புரட்சித் திலகம் என்ற அடைமொழியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.

காமெடி நடிகர்கள் வடிவேலு தொடங்கி பெரிய நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் என்று எல்லோருக்கும் தங்களது பெயருக்கு முன்னால் அடைமொழி இருக்கும். அதேபோல் நடிகர் சரத்குமாருக்கும் சுப்ரீம் ஸ்டார் என்கிற பட்டம் இருக்கு. ஆனால் தற்போது இந்தப் பட்டத்தை நடிகர் சரத்குமார் துறந்துள்ளார். அதற்கு பதிலாக புரட்சித் திலகம் என்கிற பட்டத்தை பயன்படுத்த இருக்கிறார்.

நான்கு ஆண்டுக்குப் பிறகு சரத்குமார் நாயகனாக நடிக்கும் படம் ‘சண்டமாருதம்’. இப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மேஜிக் பிரேம்ஸ் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார்.

இப்படம் இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள சிவன் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவில் நடிகர்கள் சரத்குமார், ராம்கி, அருண்விஜய், அருள்நிதி, ஸ்ரீகாந்த், நடிகைகள் நிரோஷா, ஸ்ரீப்ரியா, ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, டி.சிவா, ஏ.எல்.தேனப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுவரை தன்னுடைய படங்களில் சுப்ரீம் ஸ்டார் என்ற அடைமொழியுடன் வந்த சரத்குமார், இந்த படத்தின் மூலம் புரட்சி திலகம் என்ற அடைமொழியுடன் வருகிறார். இதற்கு முன் புரட்சித் திலகம் என்ற பட்டப் பெயரைப் பயன்படுத்தி வந்தவர் கே பாக்யராஜ்.

புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என அழைக்கப்பட்ட எம்ஜிஆரின் கலையுலக வாரிசு என்ற முறையில், அவரது பட்டப்பெயர்களின் பாதியை எடுத்து புரட்சித் திலகம் எனப் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் புரட்சித் திலகம் பட்டத்தைப் தற்போது சரத்குமாரும் பயன்படுத்த ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE