இங்கிலாந்து கேப்டன் கூக்கை நீக்குமாறு சொன்னது தவறு: வாகன்

398

 

இந்தியாவுக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி 95 ரன்னில் தோற்றது.

இதைத்தொடர்ந்து இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் கூக்கை நீக்க வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வலியுறுத்தி இருந்தார்.

கூக் அதற்கு முன்பு ஆஸ்திரேலியா, இலங்கை அணியிடம் தோற்று இருந்ததால் வேறு கேப்டனை நியமிக்குமாறு அவர் தெரிவித்து இருந்தார்.

ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூக் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியில் தொடர்ந்து நீட்டித்தது. இதன் பயனாக இந்தியாவுக்கு எதிராக சவுத்தம்டனில் நடந்த 3–வது டெஸ்டிலும், மான்செஸ்டரில் நடந்த 4–வது டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

5 டெஸ்ட் கொண்ட இந்த தொடரில் கூக் தலைமையிலான இங்கிலாந்து அணி 2–1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதற்கிடையே இங்கிலாந்து கேப்டன் பதவியில் இருந்து கூக்கை நீக்குமாறு தான் சொன்னது தவறானது என்று மைக்கேல் வாகன் ஒப்புக்கொண்டு உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–

2 வாரத்துக்கு முன்பு கூக்கை இங்கிலாந்து கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமிக்குமாறு தெரிவித்தேன். ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவர் மிகுந்த நம்பிக்கை வைத்து அவர் பின்னால் நின்றது. தற்போது நான் சொன்னது தவறாகிவிட்டது. அந்த கேள்விக்கே இடமில்லாமல் போய்விட்டது. கேப்டன் பதவியில் கூக் நீடிப்பது சரியான முடிவு தான்.

3–வது டெஸ்டில் கூக் சிறப்பாக விளையாடி 95 ரன்கள் எடுத்தது சிறப்பானது. 15 ரன்னில் அவர் அடித்த பந்தை ஜடேஜா கேட்ச் பிடிக்க தவறினார். அதில் கூக்குக்கு அதிர்ஷ்டம் இருந்தது.

ஒரு வேளை ஜடேஜா கேட்ச் பிடித்து இருந்தால் இங்கிலாந்தின் நிலை மோசமாகி இருக்கலாம்.

இவ்வாறு மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

 

SHARE