பனிப்பாறைகளின் மர்மங்கள்

559

 

பனி என்றாலே ஒருவித மெல்லிய குளிர்ச்சி நமக்குள் தோன்றும். அந்த மெல்லிய பனி பிரமாண்டமான பாறையாக உயர்ந்து நிற்கும்போது மிரட்சியும் வியப்பும்  கைகோர்த்துக் கொள்ளும். மேற்கத்திய நாடுகளிலும் சீனா, அண்டார்டிகா பகுதிகளிலும் பனி நிகழ்த்தும் மாயாஜாலம் உலகப் பிரசித்தம். அந்த வகையில் உலகின்  மிகச் சிறந்த பனிப்பாறை அதிசயங்கள், ரசித்து வியக்க உங்களுக்காக….

அர்ஜென்டினா – பெரிட்டோ மாரினோ கிளேசியர்

அர்ஜன்டினோ ஏரியின் மீது உருவாகும் பனிப்பாறையை குளிர்காலத்தில் பார்ப்பது த்ரில் அனுபவம். காரணம் அதன் பிரமாண்டம் அப்படி. இந்த ஏரியின் மீது  உள்ள பனிப்பாறை 5 கிலோமீட்டர் நீளமும் 170 மீட்டர் கனமும் சுமார் 73 மீட்டர் உயரமும் கொண்டது. இதன் மீது நடக்கலாம், ஓடலாம், டிரெக்கிங் போகலாம்!  அருகில் சொகுசு கப்பலில் பயணித்தபடி, இந்த பனிப்பாறையில் இருந்து ஒரு பகுதி உடைந்து, தனி ஐஸ் வீடுகள் போல் மிதப்பதை கண்குளிர ரசிப்பது ஒரு அலாதி  அனுபவம். இந்த பனிப்பாறை ஆண்டுதோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அருகிலுள்ள ஆண்டெஸ் மலைத் தொடரிலிருந்து பனி உருகி, வழிந்து வந்து இந்த  ஏரியில் கலப்பதுதான் காரணம். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஏரியில், அணை கட்டியது போல் நடுவே முழுவதும் பனியாக உருமாறி, பிறகு கொஞ்சம்  கொஞ்சமாக அவை உருகி, சரிந்து விழுவது காணக் கிடைக்காத காட்சி. 2008ல் உலகம் இந்த அதிசயத்தைக் கண்டு களித்தது.

உறைந்த பனியில் ஓவிய வட்டங்கள்

ஜிம்டேனவன் என்ற ஓவியருக்கு மணல் மற்றும் தரையில் பிரமாண்ட ஓவியங்களை வரைவது பழக்கம். 2010ல் ஒரு மாறுதலுக்கு சைபீரியாவின் பைகால்  ஏரிக்குச் சென்றார். அப்போது ஏரி நீர் உறைந்து கிடந்தது. இந்த பைகால் ஏரிக்கு உலகின் மிகப் பெரிய உள்நாட்டுத் தண்ணீர் ஏரி என்ற கௌரவம் உண்டு.  ஜிம்டேனவன், 23 கிலோ மீட்டர் தூரத்திற்கு படத்தில் உள்ளது போல் வட்டங்கள், வட்டத்திற்குள் ஓவியங்கள் என உருவாக்கினாராம். ஆக, இது உலகின் மிக  நீண்ட பனி ஓவியமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்து – ஐஸ் குகை

வெந்நீர் ஊற்றுகளுக்கு பேர் போன இடம் ஐஸ்லாந்து. அது மட்டுமல்ல, அந்தப் பகுதியில் காணப்படும் பிரமாண்ட பனிப்பாறைகளைக் குடைந்து, பல நூறு மீட்டர்  தூரத்திற்கு வளைந்த உட்கூரைகள், வெடிப்புகள், பள்ளங்களை உருவாக்கி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறார்கள். இந்த உள் குகைகளில் சிலர் மலை ஏறுவது  போல, ஏறி இறங்கி உற்சாகம் பெறுகிறார்கள். லாங்ஜோகுல் கிளேசியரில் இருக்கும் குகை தனித்துவமானது.

ஜப்பான் – ஜாவோ ஆன்சென்

ஜப்பானில் கி.பி.110ல் கண்டுபிடிக்கப்பட்ட பழைய வெந்நீர் ஊற்று இன்றும் பிரசித்தம். இதே ஜப்பானில், ஜாவோ ஆன்சென் ஸ்கை ரிசார்ட் அருகே சென்றால்,  பனியில் அச்சுறுத்தும் அதிசயங்களைக் காணலாம். படத்தில் அச்சுறுத்தும் பாணியில் தனித் தனியாக எழும்பி நிற்கும் பனிப்பாறைகள் உண்மையில் ஆமோர் ஃபீர்  மரங்கள்தான்! குளிர் காலத்தில் இவற்றின் மீது பனி கொட்டி, இவற்றை இப்படி ஆக்கி விடுகின்றன. பல மாதங்களுக்கு இவை இப்படியே இருப்பதுதான் ஆச்சரியம்.  உண்மையில் இது ஒரு பேய் உலவும் காடு என்றே கற்பனை செய்யலாம்.

பனிப்பாறை மீது வண்ணக்கோடுகள்

பனிப்பாறைகள் பற்றி நாம் பொதுவாகத் தெரிந்து வைத்திருப்பது அவை வெள்ளை வெளேரென்று இருக்கும். சூரியனின் ஒளிக்கதிர்கள் அதன் மீது படும்போது  ஜொலிக்கும் என்பதுதான். ஆனால் சில இடங்களில் வெள்ளைக்கு பதில் நீலம், சாம்பல், கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் கூட பனியைப் பார்க்க முடியும்.

இவை எப்படி சாத்தியம்? 

இந்த பனிப்பாறைகளின் மீது, தூரத்திலிருந்து பறந்து வரும் எரிமலை சாம்பல், அழுக்குகள், மற்ற இடங்களிலிருந்து அடித்து வரப்பட்ட  தூசுகள் எல்லாம் தங்கி இருக்குமாம்! இவற்றின் மீது ஐஸ் படியும்போது, சூரிய கிரணம் பட்டு அவை வழக்கமான வெள்ளைக்கு பதிலாக சாம்பல், கருப்பு மற்றும்  மஞ்சள் கோடுகளாகத் தெரியுமாம்! அண்டார்டிகாவுக்கு ஆய்வுக் கப்பலில் சென்ற நார்வே நாட்டு மாலுமி ஒய்வின்ட்டான் சென்ஞன், இதனை போட்டோ எடுத்து  உலகிற்குக் காட்டி இருக்கிறார். சில பனிப்பாறைகளில் இடைவெளிகள் வழியே, நீர் சென்று கொண்டிருக்கும். இப்படி நீர் செல்லும் பாதைகள் சூரிய கிரணம்  படும்போது, நீலக்கோடுகளாக ஜொலிக்கும்!

SHARE