13வது திருத்தச்சட்டம் குறித்து பேசப்பட்ட விவகாரத்தை மூடிமறைக்க முயன்ற மகிந்த.

426

Sri Lankan President Mahinda Rajapakse waves to the media after he handed in his applications for the January 26, 2010 presidential elections, in Colombo

13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் அதற்கு அப்பால் செல்லவும் வேண்டும் என்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை சிறிலங்கா செவிமடுக்கும் என்று நம்புவதாக இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்றுமாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா விவகாரம் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

“13வது திருத்தம் தொடர்பான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் பிரதிபலிப்பு என்ன? கடந்த 25 ஆண்டுகளாக இதனை நடைமுறைப்படுத்துவது குறித்து இருநாட்டு அரசாங்கங்களும் பேச்சுக்களை நடத்தி வருகின்றன. இதுவரை ஒன்றுமே நடக்கவில்லை.

சிறிலங்கா அதிபரின் பிரதிபலிப்பு எப்படியிருந்தது?

அவர் திருத்தத்தில் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளாரா அல்லது இன்றைய சந்திப்பில் ஏதேனும் சில சாக்குப்பாக்குகளைக் கூறிவிட்டுச் செல்கிறாரா?”என்று செய்தியாளர் ஒருவர் இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங்கிடம் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த அவர், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்கா அதிபருடன் 13வது திருத்தம் குறித்து கலந்துரையாடினார்.

இந்த விவகாரம் குறித்து அவர்கள் நீண்ட கலந்துரையாடலை நடத்தினர். சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் நலனுக்கு 13வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது முக்கியம் என்றும், அதற்கு அப்பாலும் செல்ல வேண்டியது அவசியம் என்றும் நாம் எமது தரப்பில் சிறிலங்கா அதிபரிடம் கேட்டுக் கொண்டோம்.

எனவே, இந்தியப் பிரதமரிடம் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையை செவிமடுத்து, சிறிலங்கா பொருத்தமான நடவடிக்கையை எடுக்கும் என்று நாம் நம்புகிறோம்.”என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா மூடிமறைக்க முயன்றதைப் போட்டுடைத்தார் சுஜாதா சிங்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்திய விவகாரத்தை, சிறிலங்கா அதிபர் செயலகம் மூடி மறைத்து விட்டது.

நேற்றுக்காலை புதுடெல்லியில் இருநாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்புத் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்த அறிக்கையில், நரேந்திர மோடியுடனான சந்திப்பில், நல்லிணக்க முயற்சிகள், மீள்கட்டுமான. புனர்வாழ்வு நடவடிக்கைகள், மீனவர்கள் விவகாரம், மற்றும் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகள் குறித்தே பேசப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

13வது திருத்தச்சட்டம் குறித்து ஒரு வார்த்தையேயும் அதில் கூறப்பட்டிருக்கவில்லை.

ஆனால், நேற்று புதுடெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை நரேந்திர மோடி வலியுறுத்தியதை இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் போட்டுடைத்து விட்டார்.

இதனால், 13வது திருத்தச்சட்டம் குறித்து பேசப்பட்ட விவகாரத்தை மூடிமறைக்க முயன்ற சிறிலங்காவின் முயற்சி தோல்வி கண்டுள்ளது.

SHARE