533
பீஜிங்கில் புதிய விமான நிலையம் அமைக்க சீன அரசு முடிவு

மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் விதமாக வணிக,வர்த்தகத் துறைகளில் வளர்ந்து வரும் சீனா அதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தவேண்டிய அவசியத்தில் உள்ளது. கடந்த 1958ல் கட்டப்பட்ட தலைநகர் பீஜிங்கில் உள்ள சர்வதேச விமான நிலையம் அதனுடைய கொள்ளளவுத் திறனுக்கு அதிகமான பயணிகளை அங்கு கையாண்டு வருகின்றது.

80 மில்லியன் மக்களை சமாளிக்கும்விதமாகக் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை கடந்த ஆண்டு 83 மில்லியன் மக்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.  சீனாவில் உள்ள மொத்த விமான நிலையங்களும் சேர்ந்து கடந்த வருடம் 754மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளன.

இது அதற்கு முதல் வருடத்தைவிட 11 சதவிகிதம் அதிகமென்றும், கடந்த 5 வருடங்களுக்கு முன்னால் இருந்ததைவிட 86 சதவிகிதம் அதிகமென்றும் கூறப்படுகின்றது. வரும் 2015-ம் ஆண்டில் பீஜிங் விமான நிலையத்தில் மட்டுமே 113 மில்லியன் பயணிகள் வருகை இருக்குமென்றும் 2020-ம் வருடத்தில் இது 142 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ஏற்படும் நெரிசலையும், தாமதத்தையும் தவிர்க்க அடுத்த இருபது ஆண்டுகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை புது விமானம் சீன வான்வெளியில் பறக்க விடப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீஜிங், ஷாங்காய், குவாங்சூ போன்ற விமான நிலையங்களில் ஏற்படும் தாமதங்களும், விமானப் பயணங்களின் பற்றாக்குறையும் மக்களிடையே அதிருப்தியையும், சில நேரங்களில் அங்கு கலவரத்தையும் தோற்றுவிப்பதாக அமைகின்றன.

கடந்த பிப்ரவரியில் சின்ஷெங் சர்வதேச விமானநிலையத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நீண்ட தாமதத்தினால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிலையத்தில் இருந்த கம்ப்யூட்டர்களையும், நாற்காலிகளையும் உடைத்தெறிந்து ரகளையில் ஈடுபட்டனர்.

ஒரு பயணி நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள் சென்று அங்கிருந்த ஊழியரையே தாக்கத் துணிந்ததாக பத்திரிகை செய்தி தெரிவித்தது. இத்தகைய பிரச்சினைகளைத் தீர்க்கும்விதமாக பீஜிங்கின் தெற்கில் ஹெபெய் மாகாணத்தின் அருகில் 14 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் ஒரு புதிய விமான நிலையத்தை அமைக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் ஆண்டுக்கு 72 மில்லியன் பயணிகள் பயணிக்கவும், 2 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்படவும் முடியும் என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்துள்ளது.

 

SHARE