யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று காலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆரம்பமானது
. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஈபிடிபியினருக்கும் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது மகேஸ்வரி நிதியத்தின் மணல் அகழ்வு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
வடமராட்சி கிழக்கு – அம்பன் பகுதியில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வால் இயற்கையான நாவற்காடுகள் மற்றும் சவுக்கங்காடுகள் அழிக்கப்படுவதாகவும் அவர்கள் விசனம் வெளியிட்டனர். குறித்த பகுதியில் மணல் அகழ்வதற்கான மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதியினை மகேஸ்வரி நிதியம் பெற்றிருக்கவில்லை என வடமாகாண சுற்றாடல் அமைச்சர் குற்றம்சாட்டினார்.
இதன்போது எழுந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மகேஸ்வரி நிதியத்தின் மூலம் மணல் அகழ்ந்து கொள்ளையடிக்கின்றீர்கள் என குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து த.தே.கூ. – ஈ.பி.டி.பி. கட்சியினரிடையே கடுமையான வாய்த்தர்க்கம் மூண்டது. பின்னர் கூட்டத்தில் ஓரளவு அமைதி திரும்பி கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது.
இதனையடுத்து, மணல் அகழ்வுக்குப் பெற்ற அனுமதி குறித்த ஆவணங்களை நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறும் கூட்ட அமர்வில் சமர்ப்பிக்குமாறு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.
இந்த நிலையில், மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் சந்திரகுமார் எம்.பி. ஆகியோருக்கிடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டு முறுகல் நிலை ஏற்பட்டது.
கஜதீபனைப் பார்த்து தறுதலை வாத்தி என சந்திரகுமார் திட்ட, பதிலுக்கு அவரும் சந்திரகுமாரை தறுதலை எம்.பி. எனத் திட்டினார். இருவரும் ஒருவரை ஒருவர் ஏக வசனங்களில் திட்டித் தீர்த்துக்கொண்டனர்.
மகேஸ்வரி நிதியத்தின் மணல் அகழ்வு தொடர்பாக பேச எழுந்த கஜதீபனை சந்திரகுமார் திட்டடியதை அடுத்தே இருவரும் தனியாக மோதிக்கொண்டனர்.
மேலும், யாழ். – கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டம், சமூகமயப்படுத்தப்பட்ட கிராமிய நீர்வழங்கல், சுகாதாரத் திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், குறித்த திட்டம் தாமதமடைவதற்கான காரணங்கள் குறித்து அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டதுடன், திட்டம் தாமதமடையும் பட்சத்தில் அதற்குரிய நிதி திரும்பும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி இரணைமடு நீர் வழங்கல் திட்டத்தை நாம் தடுத்து நிறுத்துவோமேயானால் எமது தலையில் நாமே மண்ணை வாரி போட்டதாக அமையுமெனவும், இதை அரசியலாக்க வேண்டாம் எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இதன்போது தெரிவித்தார்.
இதனிடையே படைத்தரப்பால் சுவீகரிக்கப்படும் காணிகளின் எல்லைகளின் வரையறைகள் தமக்கு தெரியாது என வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
இதற்கு அவையோரால் குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மட்டுமல்ல முதலமைச்சரும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை அமைச்சர்கள் உட்பட உறுப்பினர்களும், நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.