406
தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் 24 மணி நேரம் நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு
இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகளும் நேற்று 12 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டனர். உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த குறுகிய நேர போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், போர் நிறுத்தம் அமலில் இருந்த 12 மணி நேரத்தில் காஸா பகுதியில் இருந்து 130-க்கும் மேற்பட்ட பிணங்களை ஐ.நா.அதிகாரிகள் வெளியேற்றினர். இவற்றில் பெரும்பாலான பிரேதங்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி, சின்னாபின்னமாகி கிடந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இடிபாடுகளுக்குள் மேலும் பல பிணங்கள் சிக்கியிருப்பதாகவும் அவற்றை அகற்ற உதவிடும் வகையில் போர் நிறுத்தத்தை மேலும் சில மணி நேரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து, இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் முன்னர் அறிவித்தது.

பின்னர், இன்று அதிகாலை ஒளிபரப்பான இஸ்ரேல் அரசின் தொலைக்காட்சி செய்தியின்படி மனிதநேய அடிப்படையில் இன்று (ஞாயிறு) இரவு வரை மேலும் 24 மணி நேரத்துக்கு தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது.

SHARE