அகதிகளுக்கு குடியேற்ற அனுமதி தருவதில் மூன்றாம் இடம் வகிக்கும் பிரான்ஸ்

310
வெளிநாடுகளிலிருந்து தஞ்சம் கோரி வருபவர்களுக்கு அனுமதி வழங்கும் ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் மூன்றாவது இடத்தை வகிப்பதாக சமீபத்திய புள்ளி விபரம் ஒன்றில் தெரியவந்துள்ளது.சர்வதேச அளவில் போரும், உள்நாட்டு யுத்தங்களும் வளர்ந்து வரும் இந்த காலத்தில், பிரான்ஸ் நாடு அடைக்கலம் என வந்த சுமார் 20,640 அகதிகளுக்கு கடந்தாண்டு குடியேற்ற அனுமதி வழங்கியுள்ளது.

இது கடந்த 2013ம் ஆண்டை ஒப்பிடுகையில் 27 சதவிகிதம் அதிகமாகும்.

மேலும், ஒவ்வொரு ஆண்டிற்கும் அகதிகளை அனுமதிக்கும் சதவிகிதம் அதிகரித்து கொண்டே செல்வதாக Eurostat வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து உள்நாட்டு யுத்தங்களால் பாதிக்கப்பட்டு தஞ்சம் கோரி வருபவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பிரான்ஸ் மிகுந்த அக்கறை எடுத்து வருகிறது.

சிரியா நாட்டிலிருந்து 2015 அகதிகளுக்கும் இலங்கையிலிருந்து 1,685 அகதிகளுக்கும் பிரான்ஸ் குடியேற்ற அனுமதி வழங்கியுள்ளது.

கடந்தாண்டு பிரான்ஸில் குடியேற சுமார் 68,500 அகதிகள் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், இவர்களில் 78 சதவிகிதத்தினர் விண்ணப்பங்கள் சட்ட ரீதியாக நிராகரிக்கப்பட்டன.

மீதமுள்ள 14,815 அகதிகளுக்கு பாதுகாப்பு அந்தஸ்த்திலும், 5,825 அகதிகள் மேல்முறையீடு செய்து விண்ணப்பம் செய்ததாலும் குடியேற்ற அனுமதியை பிரான்ஸ் வழங்கியுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளில் குடியேற அனுமதி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

மேலும், ஐரோப்பிய நாடுகளில் அதிக எண்ணிக்கையில் அகதிகளுக்கு குடியேற்ற அனுமதி வழங்குவதில் ஜேர்மனி முதல் இடத்திலும், சுவீடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE