அசலங்கா அதிரடி., அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!

10

 

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3-1 என தொடரை வென்றது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 2-1 என முன்னிலை வகித்த நிலையில், 4-வது ஒருநாள் போட்டி கொழும்பில் இன்று நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இலங்கை அணியும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கை வெற்றி பெறும் முனைப்பில் அவுஸ்திரேலிய அணியும் களமிறங்கின.

டாஸ் வென்ற அவுஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து, முதலில் துடுப்பாடிய இலங்கை அணியில், டாப் 3 வீரர்களான டிக்வெல்லா(1), நிசாங்கா(13) மற்றும் குசால் மெண்டிஸ்(14) ஆகிய மூவரும் அணியின் எண்ணிக்கை வெறும் 34 ரன்களாக இருந்தபோதே 10 ஓவர்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் அசலங்காவும் தனஞ்செயா டி சில்வாவும் இணைந்து பொறுப்புடன் விளையாடி 4-வது விக்கெட்டுக்கு 99 ஓட்டங்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த தனஞ்செயா டி சில்வா 60 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் தசுன் ஷனாகா 4 ஓட்டங்களுடன் நடையை கட்டினார். வெல்லாலகே 19 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய அசலங்கா சதமடித்தார். 106 பந்தில் 110 ஓட்டங்கள் அடித்து 48-வது ஓவரின் 4-வது பந்தில் அசலங்கா ஆட்டமிழக்க, 49 ஓவரில் 258 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை. அசலங்காவின் பொறுப்பான ஆட்டத்தால் தான் இலங்கை அணி 258 ஓட்டங்களையாவது அடித்தது.259 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய அவுஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆட, மறுமுனையில் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர்.

அபாரமாக விளையாடிய டேவிட் வார்னர் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஒரே ஒரு ஓட்டத்தில் சதத்தை தவறவிட்டார். பாட் கம்மின்ஸ் 35 ஓட்டங்கள் அடித்து கடைசி வரை போராடி பார்த்தார். ஆனால் அவரும் 35 ஓட்டங்கள் அடித்து 49-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

50 ஓவரில் 254 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலிய அணி ஆல் அவுட்டாக, 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3-1 என ஒருநாள் தொடரை வென்றது.

SHARE