தமிழர்களுடனான உறவுகளைப் பொறுத்தவரையில் இணைந்து செயற்பட விரும்பாத அச்சுறுத்தும் வகையிலான இராணுவ தலைமை ஒன்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது:-
வடமாகாண ஆளுநராக ஜ.ஏ.சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பது வாக்குறுதி மீறப்பட்ட மற்றொரு சம்பவமாக உள்ளது என கடுமையாகச் சாடியுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழர்களுடனான உறவுகளைப் பொறுத்தவரையில் இணைந்து செயற்பட விரும்பாத அச்சுறுத்தும் வகையிலான இராணுவ தலைமை ஒன்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகவே அரசின் செயற்பாடுகள் உள்ளன என்பதை இது புலப்படுத்துகின்றது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடமாகாண ஆளுநர் சந்திரசிறியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், மீண்டும் அவரையே ஆளுநராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமித்திருப்பது குறித்துக் கேட்டபோதே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பில் அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது:
“புதிய ஆளுநர் குறித்து கடந்த ஜனவரி 2 ஆம் திகதி ஜனாதிபதி எனக்கு வாக்குறுதியளித்திருந்தார். சந்திரசிறியின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த உடனடியாகவே இராணுவப் பின்னணியைக் கொண்டிராத ஒருவரை ஆளுநராக நியமிப்பதாக ஜனாதிபதி அப்போது வாக்குறதியளித்திருந்தார்.
உத்தரவுகளை கண்மூடித்தனமாகப் பின்பற்றக்கூடிய ஒருவரை தன்னுடைய அதிகாரிகள் மட்டத்திலிருந்து ஜனாதிபதி தேடியிருக்கலாம். அவுஸ்திரேலியாவிலுள்ள தன்னுடைய குடும்பத்தவர்களுடன் இணைந்துகொள்வதை எதிர்பார்த்திருந்த சந்திரசிறி ஜனாதிபதிக்கு உதவுவதற்கு வரவேண்டியவராக இருந்துள்ளார்.
வாக்குறுதி மீறப்பட்ட மற்றொரு சம்பவமாக இது அமைந்துள்ளது. தமிழர்களுடனான உறவுகளைப் பொறுத்தவரையில் இணைந்து செயற்பட விரும்பாத அச்சுறுத்தும் வகையிலான இராணுவ தலைமை ஒன்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகவே அரசாங்கம் செயற்படுகின்றது என்பதையும் இது புலப்படுத்துகின்றது.”