இலங்கை காணிப் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பில் கேள்வி எழுப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளக இடம்பெயர்வாளர்களின் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி சாலோகா பியானி (Chaloka Beyani) இலங்கை இடம்பெயர் மக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.
ஏற்கனவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 26ம் அமர்வுகள் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
இ;ந்த அமர்வுகளின் போது பியானி, இலங்கை உள்ளக இடம்பெயர்வாளர் குறித்து கேள்வி எழுப்பவுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்தும் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவதாக பியானி தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னர் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வாழ்வோரின் எண்ணிக்கை மற்றும் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றப்படாதோர் தொடர்பில் சரியான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இடம்பெயர் மக்களுக்கு நிரந்தரமான ஓர் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பியானி கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீள்குடியேற்றப்பட்ட அல்லது மீள்குடியேறிய மக்களின் பல்வேறு அடிப்படைத் தேவைகள் இதுவரையில் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்வாதாரம், சமூக நலன் மற்றும் நிரந்தர வீடுகள் போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கவனிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த வலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து இடம்பெயர் மக்களினதும் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர் மக்கள் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்