அதிரடி ஆட்டத்தால் அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா வீழ்ந்தது வங்கதேசம்

338
உலகக்கிண்ண காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதியில் தென் ஆப்ரிக்க அணி இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இன்று வங்கதேச அணியுடன் மோதுகிறது.

இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இந்திய அணி 75 ஓட்டங்களை எட்டிய போது 30 ஓட்டங்களில் தவான் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோஹ்லி வெறும் 3 ஓட்டங்கள், ரஹானே 19 ஓட்டங்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நிதானமாக விளையாடிய ரோகித்சர்மா 70 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இதனையடுத்து ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வங்கதேச அணியின் பந்துவீச்சை பின்னி எடுத்தது.

இந்திய அணி 38.1 ஓவரில் 186 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

சில நிமிடங்களில் மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரோகித் ஷர்மா சதம் கடந்து 137 ஓட்டங்கள் எடுத்தார். இது தான் உலகக்கிண்ணத்தில் ரோகித் ஷர்மாவின் முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ரெய்னா அரைசதம் கடந்து 65 ஓட்டங்கள் எடுத்தார்.

50 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்கள் குவித்தது.

இதனையடுத்து வங்கதேச அணி 303 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கியது.

வங்கதேச அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பால் 25 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார். கேயாஸ் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து சவும்யா சர்க்காரும் மக்மதுல்லாவும் இணைந்து நிதானமாக ஓட்டங்களை சேர்த்தனர். எனினும் இந்த ஜோடியும் நிலைக்கவில்லை.

மக்மதுல்லா 21 ஓட்டங்கள் எடுத்த போது முகமது ஷமி பந்தில் தவானிடம் பிடிகொடுத்தார்.

அடுத்து சவும்யா சர்க்காரும் முகமது ஷமி பந்தில் டோனியிடம் பிடிகொடுத்தார். தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 193 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இந்திய அணி 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

SHARE