, 5:
கமல்ஹாசன்-கவுதமி ஜோடியாக நடித்துள்ள படம், ‘பாபநாசம்’. இது, ‘திரிஷ்யம்’ என்ற மலையாள படத்தின் தழுவல். ஜீத்து ஜோசப் டைரக்டு செய்திருக்கிறார். ஜார்ஜ் பயஸ், ராஜ்குமார், ஸ்ரீபிரியா ராஜ்குமார், சுரேஷ் பாலாஜி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில், கமல்ஹாசன், கவுதமி மற்றும் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், கமல்ஹாசன் பேசியதாவது:-
“ஏதோ ஒற்றை ஆளாக இந்த படத்தை நான் மட்டும் உருவாக்கியதுபோல், எல்லோரும் என்னைப்பற்றியே பேசினார்கள். அது சரியல்ல. சினிமா என்பது ஜனரஞ்சகம் மட்டுமல்ல, ஜனநாயகமும்கூட. சினிமா ஒரு கூட்டு முயற்சி. எல்லோரும் சேர்ந்து செய்தால்தான் சிறப்பாக வரும். ‘பாபநாசம்’ படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த படம் 3 மொழிகளில் வெற்றிபெற்ற படம். அதை எங்கள் கையில் ஒத்திகை பார்க்க தந்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்தவுடன், படக்காட்சிகளை திரையிட்டு பார்த்தேன். அப்போது ஒரு நல்ல நடிகையை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. அந்தளவுக்கு கவுதமி மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இதை நான் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக சொல்லவில்லை. நிஜமாகவே கவுதமி திறமையான நடிகை.
எம்.எஸ்.பாஸ்கர், என்னை அடிக்கடி கடவுள் என்று அழைக்கிறார். நான் கடவுளே இல்லை என்று சொல்பவன். ‘அன்பே சிவம்’ ரூட்டில் அவர் அப்படி சொல்கிறாரோ என்று விட்டுவைத்திருக்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
அதன்பிறகு, கமல்ஹாசனிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு கமல்ஹாசன் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இந்த படத்தின் கதைக்களமாக திருநெல்வேலியை தேர்ந்தெடுத்தது ஏன்?
பதில்:- ‘பாபநாசம்’ என்ற தலைப்பு வைத்ததால், திருநெல்வேலியை தேர்வு செய்தோம். இதில், நெல்லை தமிழ் பேசி நடித்திருக்கிறேன்.
கேள்வி:- நெல்லை தமிழ் பேசி நடிப்பதற்கு சுலபமாக இருந்ததா?
பதில்:- எப்படி சுலபமாக இருக்கும்? அது புது மொழி. ஆனாலும் பொது மொழி. சுருதியோடு பேச எழுத்தாளர்கள் ஜெயமோகன், சுகா ஆகிய இருவரும் கற்றுக்கொடுத்தார்கள்.
கேள்வி:- அடுத்த படத்திலும் கவுதமி நடிப்பாரா?
பதில்:- அதுபற்றி கவுதமி முடிவு செய்வார்.
கேள்வி:- பொதுவாக உச்சநடிகர்கள் தங்களுக்கு ஜோடியாக உச்சநடிகைகளைத்தானே தேர்ந்தெடுப்பார்கள். நீங்கள் கவுதமியை தேர்ந்தெடுத்தது ஏன்?
பதில்:- என்னைப்பொறுத்தவரை கவுதமி உச்சநடிகைதான்.
கேள்வி:- ‘பாபநாசம்’ படம், பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டும் கதையம்சம் கொண்ட படம். தற்போது சமூகத்தில் அதுபோல் செல்போன்களில் படம் எடுத்து மிரட்டும் நிலை உருவாகியிருக்கிறதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- நீங்கள் சொல்வது, கார் வாங்கினால் கடத்திக்கொண்டு போய்விடுவார்கள் என்பதுபோல் இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவற்றை நல்லவைகளுக்கு மட்டும் பயன்படுத்தவேண்டும். என்னைப்பொறுத்தவரை என் அனுமதியில்லாமல், என்னை செல்போனில் படம் எடுப்பது அத்துமீறல். அது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் செயல்.
கேள்வி:- ஹெல்மெட்’ அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறதே?
பதில்:- ‘ஹெல்மெட்’ அணியவேண்டும் என்பதை அறிவுரையாக சொல்லவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. கால்களை பாதுகாக்க செருப்பு அணிகிறோம். அதுபோல், தலையை பாதுகாக்க ‘ஹெல்மெட்’ அணியவேண்டும் என்ற புத்தி வேண்டாமா?, அதையும் அரசு சொல்லித்தான் தெரியவேண்டுமா?
மேற்கண்டவாறு கமல்ஹாசன் கூறினார்.
பேட்டியின்போது, பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், எழுத்தாளர் சுகா, இசையமைப்பாளர் ஜிப்ரான், நடிகர்கள் டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், படஅதிபர்கள் ஜார்ஜ்பயஸ், ராஜ்குமார், ஸ்ரீபிரியா ராஜ்குமார், சுரேஷ் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தார்கள்