அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் பலி

514
அமெரிக்காவில் காரை ஓட்டிக்கொண்டே ஒரு மர்ம நபர் தெருவில் போவோர் வருவோரை எல்லாம் கண்மூடித்தனமாக எந்திர துப்பாக்கியால் சுட்டார். இதில் 6 பேர் பலியானார்கள்.

இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

அமெரிக்காவின் சாந்தா பார்பரா நகர் அருகேயுள்ள இஸ்லா விஸ்டா நகரில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் அமைந்து உள்ளது. இது கடற்கரையையொட்டி பகுதியாகும். இங்கு நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் ஒரு கறுப்பு நிற மர்ம நபர் சொகுசு கார் ஒன்றில் படுவேகமாக வந்தார்.

பல்கலைக்கழக வளாகம் அருகே வந்தபோது அந்த நபர் காரை ஓட்டிய நிலையிலேயே தன்னிடமிருந்த எந்திர துப்பாக்கியால் தெருக்களில் போவோர், வருவோரை நோக்கி கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார். இதனால் தெருக்களில் நடமாடியவர்கள் உயிர் பிழைப்பதற்காக அலறியடித்துக்கொண்டு அங்கும் இங்குமாக ஓடினார்கள்.

எனினும் மர்ம நபர் சுட்டதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து ரோந்து படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்த 6 நிமிடங்களில் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தனர். பிறகு, அவர்கள் சினிமா பட பாணியில் மர்மநபரை காரில் துரத்தி சென்றனர். அப்போது மர்ம நபர் போலீசாரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ரோந்து படையினரும் திருப்பி சுட்டனர். இதில் கார் நிலைகுலைந்து சாலையோரம் நின்றிருந்த மற்றொரு வாகனம் மீது வேகமாக மோதி நின்றது.

ரோந்து போலீசார் அந்த கார் அருகே சென்று பார்த்தபோது தலையில் குண்டு பாய்ந்த நிலையில் இளைஞர் ஒருவர் பிணமாக கிடந்தார். மேலும் அவர் அருகே தானியங்கி துப்பாக்கி ஒன்றும் கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டாரா? அல்லது ரோந்து போலீசார் நடத்திய தாக்குதலில் இறந்தாரா? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து சாந்தா பார்பரா கவுன்டி ஷெரீப் பில் பிரவுன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலையாகும். இந்த சம்பவம் குறித்த திரட்டிய வீடியோ பட ஆதாரங்களை ஆய்வு செய்து வருகிறோம். அதன்பின்னரே மர்ம நபரின் வெறிச்செயலுக்கான காரணம் தெரியவரும். தன்னை நிராகரித்த பெண்ணை பழிவாங்க முடியாத ஆத்திரத்தில் இந்த கொடூரச் செயலில் அவர் ஈடுபட்டிருக்கலாம்’’ என்று தெரிவித்தார்.

இதனிடையே பல்கலைக்கழக மாணவர் பிராட் மார்டின் இந்த சம்பவம் குறித்து கூறும்போது, ‘‘எனது பெண் தோழியின் அருகில் திடீரென்று காரை நிறுத்திய மர்மநபர் அவளது முகத்துக்கு நேராக துப்பாக்கியை நீட்டியுள்ளார். அதிர்ச்சியில் உறைந்த பெண்தோழி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அப்போது அவருக்கு பின்னால் படபடவென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. எனது பெண் தோழி இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை’’ என்று பதற்றத்துடன் கூறினார். மர்ம நபர் தாக்குதல் நடத்திய பகுதியில் வசிப்போரில் 3-ல் 2 பங்கினர் மாணவ–மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE