அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இரண்டு பில்லியன் ரூபாய் பணத்தை வழங்க தயாராக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியுள்ளார்.
பணம் வழங்கப்பட உள்ள விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சின் ஊடாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே.சீசனிடம் விசாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் இவ்வாறு தலையீடு செய்வதை அரசாங்கம் அனுமதிக்காது என உத்தியோகபூர்வமாக அமெரிக்கத் தூதரகத்திற்கு அறிவிக்குமாறும் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அடுத்து நடைபெற உள்ள தேர்தலுக்காகவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த பணத்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விடயம் சம்பந்தமாக இலங்கையின் ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் பதிலளித்துள்ள அமெரிக்கத் தூதுவர் சீசன், இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு அமெரிக்கா பணம் வழங்குவதாக வெளியான செய்திகளை மறுப்பதாக கூறியுள்ளார்.
அவ்வறான எந்த திட்டத்தையும் அமெரிக்கா முன்னெடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சி நிதியுதவி வழங்கி வரும் மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் கடந்த வாரம் நுகேகொட பிரதேசத்தில் உள்ள பிரபல விகாரையான நாலந்தாராமயவில் நடைபெற்றுள்ளது.