அமெரிக்க பிணைக் கைதியின் தலையை துண்டிப்பதாக தீவிரவாதிகள் மிரட்டல்

391

சிரியாவில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து பிணைக்கைதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் சிறை பிடித்துள்ளனர். இவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அந்நாடுகளை மிரட்டுவதற்காக பிணைக் கைதியின் தலையை துண்டித்து படுகொலை செய்கின்றனர்.

கடந்த மாதம் அமெரிக்கா பத்திரிகை அதிபர் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் கோட்லாப் மற்றும் இங்கிலாந்து சமூக சேவகர் டேவிட் ஹெய்ன்ஸ் ஆகியோரை தலை துண்டித்து கொன்றனர். இவர்களை தொடர்ந்து மற்றொரு இங்கிலாந்து பிணைக் கைதி ஆலன் ஹென்னிங்ஸ் என்பவரையும் சமீபத்தில் ஈவு இரக்கமற்று தலை துண்டித்து கொலை செய்தனர்.

இவர்களின் படுகொலை காட்சிகளை சமூக வலை தளங்களில் வீடியோவாக வெளியிட்டு உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மற்றொரு அமெரிக்க பிணைக் கைதியின் தலையை துண்டிக்க போவதாக வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

தீவிரவாதிகளின் அடுத்த இலக்காக கருதப்படும் அமெரிக்க பிணைக் கைதியின் பெயர் பீட்டர் கஸ்சிக். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் ஒரு சமூக சேவை அமைப்பை உருவாக்கியுள்ளார்.

அதன் மூலம் சிரியாவில் உள் நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். தொடக்கத்தில் லெபனானில் இருந்தார். அங்கிருந்து சிரியா அகதிகள் முகாமில் தங்கியிருந்தவர்களுக்கு உதவிகள் புரிந்தார்.

கிறிஸ்தவரான இவர் அங்குள்ள மக்களின் அன்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தனது பெயரை அப்துல் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்.

இவரை கடந்த 2013–ம் ஆண்டு அக்டோபர் 1–ந்திகதி ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைக் கைதியாக பிடித்தனர். இங்கிலாந்து சமூக சேவகர் ஹென்னிஸ் கொலை செய்யப்பட்ட வீடியோவின் கடைசி பகுதியில் இவர் சம்பந்தப்பட்ட காட்சி இடம் பெற்றிருந்தது.

இதற்கிடையே தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் மற்றொரு இங்கிலாந்து பிணைக் கைதி ஜான் கேண்ட்லியை விடுதலை செய்ய கோரி அவரது தந்தை பால் கேண்ட்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE