அம்பாறை, நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

345

அம்பாறை, நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் சிறந்த சேவையாற்றிவரும் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையை தரமுயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை மிக நீண்ட காலமாக விடுக்கப்பட்டு வந்தது. புதிய அரசில் சுகாதார இராஜாங்க அமைச்சராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸனலி பதவியேற்ற பின்னர் இது தொடர்பான கோரிக்கையை வைத்தியசாலை அபிவிருத்தி சபையும், பொதுமக்களும் அமைச்சரிடம் முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹஸனலி எடுத்த முயற்சியின் பயனாக நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகத் தற்சமயம் தரமுயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வகையிலும், 01.04.2015 முதல் அமுலுக்கு வரும் வகையிலும் நிந்தவூர் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக (தரம் – டீ) சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது. கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையை நிர்வாக அலுவலகமாகக் கொண்டு தரமுயர்த்தப்பட்ட நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக டாக்டர் ஆகில் அஹமட் சரிபுத்தீன் பொறுப்பை ஏற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 1932 ஆம் ஆண்டு மத்திய மருந்தகமாக ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் வைத்தியசாலை, கிராமிய வைத்தியசாலை, சுற்றியல்கூறு வைத்தியசாலை, மாவட்ட வைத்தியசாலை எனப் பரிணாம வளர்ச்சி கண்டு இன்று ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்ந்துள்ளது.

 

 

 

SHARE