பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் காரணமாக அண்மைக்காலமாக நாட்டில் இனவாத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் புலனாய்வுப் பிரிவினரே இச்செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இயங்கும் விசேட புலனாய்வுப் பிரிவு தொடர்பான தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.
பொதுபல சேனா அமைப்பினருடன் அரசாங்கத்துக்குள்ள தொடர்பு வெளிப்பட்டுள்ள நிலையில், சிறுபான்மையின மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களும் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக அரசாங்கம் தற்போது கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இதனையடுத்து பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச கடும் சினமடைந்துள்ளார்.
நேற்று இரவு அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சந்திரா வாகிஷ்ட, சட்டமா அதிபர் ஆகியோரை அழைத்து திட்டித்தீர்த்துள்ளார்.
மங்கள சமரவீரவை உடனடியாக தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யுமாறு அவர் சீறியுள்ளார்.
தற்போதைய நிலையில் அரசமைப்புச் சட்டத்தின் தேசிய பாதுகாப்பு இரகசியங்கள் தொடர்பான 1955/32 பிரிவின் கீழ் மங்கள சமரவீரவைக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பான இறுதிக்கட்ட ஆலோசனை தற்போது பாதுகாப்பு அமைச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர வெளியிட்ட தகவல் நாட்டை வீழ்த்தும் சதித்திட்டத்திற்கு பக்கபலம் வழங்குவது என ஜாதிக ஹெல உறுமய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண சபை உறுப்பினரும், அதன் ஊடகப் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக நடவடிக்கை குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர, கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், புலனாய்வுப் பிரிவின் தலைவர்களின் பெயர்களை வெளியிட்டமையானது நாட்டுக்கும் நாட்டின் தேசிய பாதுகாக்கும் செய்த பாரிய துரோக செயல் என நாங்கள் வலியுறுத்தி கூறுகிறோம்.
மங்களவின் அரச துரோக செயலுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் – ஜாதிக ஹெல உறுமய
நாட்டின் தேசிய பாதுகாப்பை நோக்கமாக கொண்டு செயற்படும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளின் பெயர்களை வெளியிட்டு, அளுத்கமவில் ஏற்பட்ட மோதலான நிலைமை குறித்து தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் திசை திருப்ப மங்கள சமரவீர நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தெளிவான பச்சை துரோக செயல் என்று கருதும் ஜாதிக ஹெல உறுமய அவரது செயலை வன்மையாக கண்டிக்கின்றது.
மங்கள தனது தகவல் மூலமாக நாட்டுக்கு எதிரான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில், அந்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சர்வதேச சக்திகளுக்கு பக்கபலத்தையும் ஊக்கத்தையும் வழங்கியுள்ளார்.
இலங்கை அரச பாதுகாப்பு பிரிவுகளின் புலனாய்வு அதிகாரிகள் இனவாத, மதவாத மோதல்களை உருவாக்கும் பின்னணியில் இருப்பதாகவும் பல்வேறு பௌத்த அமைப்புகள் ஊடாக பாதுகாப்பு தரப்பு சிறுபான்மை இனங்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து, அதனை திட்டமிட்டு, வழிநடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சுமத்தியுள்ள இந்த குற்றச்சாட்டின் ஊடாக மங்கள சமரவீர, நாட்டை சர்வதேச ரீதியில் மேலும் இறுக்கி, சிக்க வைத்துள்ளார்.
அளுத்கம சம்பவங்களுக்கு புதிய தோற்றத்தை ஏற்படுத்தி, சர்வதேச ரீதியில் நாட்டையும் அரசாங்கத்தையும் அசௌகரியத்திற்கு உள்ளாகி, மங்கள சமரவீர மேற்கொண்டு வரும் துரோத்தனமாக செயல்களுக்கு எதிராக சகல தேசப்பற்றுள்ள சக்திகளும் அணித்திரள வேண்டும்.
போர் நிறுத்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட காட்டிக் கொடுப்பு மீண்டும் எம் நினைவுக்கு வருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அந்த காட்டிக் கொடுப்பு காரணமாக புலனாவுப் பிரிவினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளை நாம் இன்னும் மறக்கவில்லை.
இதனால், இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக தகவல் மற்றும் அரச இரகசியங்களை வெளியிட்டமை குறித்து விசாரணை ஒன்றை நடத்தி, மங்கள சமரவீரவின் அரச துரோக தகவல் வெளியீட்டு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்துமாறு அரசாங்கத்தையும் இந்த விடயம் சம்பந்தமாக பொறுப்புக் கூறவேண்டியவர்களையும் வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.