அரசாங்கமே புலிகளை உருவாக்கிக் காட்டுகிறது

613

ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட உள்ள பிரேரணை, மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றை இலக்கு வைத்து ராஜபக்ஷ அரசாங்கம் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பான புதிய பிரசாரங்களை ஆரம்பித்துள்ளது.

இந்த புதிய பிரசார தந்திரோபாயத்தின் அடிப்படையில் நேற்று அதிகாலை யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள 200 கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டு 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பில், இராணுவத்தின் விசேட அதிரடிப்படைப் படைப்பிரிவு, இராணுவப் புலனாய்வுப்பிரவு, யாழ் நகர இராணுவ கட்டளை படைப் பிரிவினருடன் 500 பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்களின் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குகின்றனர். இவர்களில் 179 பேர் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் புலனாய்வுப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மன்னார் – சிலாவத்துறையில் பிறந்த வட்டுக்கோட்டையில் வசித்து வரும் 7923244690 என்ற அடையாள அட்டையை வைத்துள்ள கருப்பன் மாணிக்கநாதன் என்ற 35 வயதான நபர் கைது செய்யப்பட்ட பின்னர், கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக அரசாங்கம் கூறவுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

மாணிக்கநாதன் என்பவர் நேற்று முன்தினம் (22) மாலை கைது செய்யப்பட்டார். அன்றைய தினம் நள்ளிரவு சில மணித்தியாலங்களுக்குள் இராணுவமும் பொலிஸாரும் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு 200க்கு மேற்பட்டோரை கைது செய்ததன் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் செயற்பட தொடங்கியுள்ளது என்று காண்பிக்க அரசாங்கத்திற்கு இருக்கும் அவசரத்தை புரிய வைத்துள்ளது.

இந்த நிலையில், அரசாங்கம் உருவாக்கியுள்ள புதிய விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவிக்க உள்ளது. கந்தநாலயன் என்ற மாணிக்க காந்தன் என்பவரையே அரசாங்கம் புலிகளின் புதிய பிரதித் தலைவராக உருவாக்கியுள்ளது.

இவருடன் 9 பேர் கைது செய்யப்பட்டதாக அவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவிக்கவுள்ளது.

புதுக்குடியிருப்பு, யாழ்ப்பாணம், வவுனியா, மானிப்பாய், சிலாவத்துறை ஆகிய பிரதேசத்தில் புலிகள் இரகசியமான இயங்கி வருவதாகவும் புலம்பெயர் தமிழர்கள் ஏற்கனவே ஆயுதங்களை வழங்கியிருப்பதாகவும் அவை காட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன எனவும் கைது செய்யப்பட்டுள்ள புலிகளின் புதிய பிரதித் தலைவர் விசாரணைகளில் தெரிவித்தார் என அறிவிக்கப்பட உள்ளது.

அத்துடன் தமது அமைப்பின் புதிய தலைவர் கோபி என்பவர் என்று இவர் கூறவுள்ளார்.

காட்டில் மறைத்து வைக்கப்பட்டு கண்டுப்பிடிக்கப்பட உள்ள ஆயுதங்களை ஏற்கனவே இலங்கை பாதுகாப்பு படையினர் காடுகளில் மறைத்து வைத்துள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் யாழ் நகரம் மற்றும் காலரண்களுக்கு பொறுப்பான கட்டளை அதிகாரி மேஜர் ஆர்.சீ.டி. பத்திரண என்பவரால் காட்டில் ஆயுதங்களை மறைத்து வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆயுதங்களை காட்டுக்கு எடுத்துச் செல்ல இராணுவத்தின் 5081 இலக்கத்தை கொண்ட டபிள் கெப் வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் கிளிநொச்சி உட்பட காட்டுப் பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.

கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், 30 கிளைமோர் குண்டுள் காடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் சில அதிகாரிகள் மூலமாக பல ஆயுதங்கள் காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விடயங்கள் தொடர்பான தகவல்கள் அரச புலனாய்வு சேவையின் மாவட்ட பிரிவுகளில் இருந்து அதன் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காலப்போக்கில் இவ்வாறான சூழ்நிலைகள் நிலவுமாகவிருந்தால் தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதமேந்திப்போராடும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதில் எந்தவிதசந்தேகமுமில்லை. இதற்கு உறுதுணையாக செயற்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை வைத்தே அமெரிக்க அரசு பிரபாகரன் தலைமையில் அல்லாது மற்றுமொரு போராட்டத்தை உருவாக்க முயற்சித்துவருகிறது.

பல தரப்பட்ட மக்களினதும் அரசியல் வாதிகளினதும் கருத்தின் படி ஜெனிவாவை திசைதிருப்பவே அரசாங்கம் இவ்வாறு புலிகள் என்ற புலிகள் உள்ளனர் என்ற நாடகத்தை நடத்திக்காட்டுகிறது. புலி வருகிறது புலி வருகிறது என்று கூறி உண்மையில் புலி வந்தால்தான் அதனது விளைவு எவ்வாறிருக்கும் என்பதை பொறுத்திருந்தால்த்தான் தெரியும்.

 

SHARE