கடந்த சில வாரங்களாக கொஸ்லந்த மண்சரிவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் உதவிகளுக்கு அப்பால் அரசியற் கட்சிகள்; அனைவரும் இப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு தமது அனுதாபங்களை தெரிவிப்பதற்காகவும், தமது அரசியலை பலப்படுத்திக்கொள்வதற்காகவும் பல்வேறு அறிக்கைகளையும் மலையகத்தில் மறைந்துள்ள மறைக்கப்பட்டுள்ள பல விடயங்கள் தொடர்பாகவும் 50வருடங்களுக்கு பின்னர் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது என்று குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்ற அதேவேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது அவ்வாறான நிலைப்பாட்டில் இல்லை. தமிழ் பேசும் மக்கள் என்ற வகையிலும், இலங்கை பிரஜைகள் என்ற வகையிலும், வடகிழக்கில் மலையக மக்கள் செறிந்துவாழ்கின்றார்கள் என்ற காரணத்தினாலும் இம்மக்களுடைய பிரச்சினைகள் குறித்து நாம் முற்கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தோம். தற்பொழுது இவ்வனர்த்த விடயமானது அதற்கொரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது எனலாம். அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் கூறுவதானது, வடகிழக்கு அபிவிருத்திப்பணிகளை செய்யாது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் இப்பகுதியில் வந்து அனுதாபங்களை தெரிவிப்பதையும், எதிர்ப்பினை வெளியிடுவதையும் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்ற தோரணையில் அவருடைய நீண்ட பேச்சுக்கள் அமையப்பெற்றது.
உண்மையில் இதுவரையில் ஒட்டுமொத்தத்தில் மலையக மக்கள் மலையகத்தினைச் சார்ந்த ஒருசில அரசியல்வாதிகளினால் ஏமாற்றப்பட்டுவந்துள்ளார்கள் என்பது உண்மையான விடயம். நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இவ்வனர்த்தத்திற்கும், அப்பகுதிவாழ் மக்களுக்கும் பொறுப்புக்கூறவேண்டிய கடமைப்பாடு உள்ளது.
பொதுவாகச்சொல்லப்போனல் அரசினால் முன்னெடுக்கப்படும் நிவாரணங்கள் குறிப்பிட்ட ஓரிரு வாரங்களில் நிறைவடைந்து அதன் பின்னர் அம்மக்களின் நிலை வழமைக்குத் திரும்பிவிரும். அனர்த்தத்தின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலேயே இருக்கும். எம்மைப்பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர காணி, வீடு, கல்வி இவை ஒழுங்கான முறையில் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். இவ்வனர்த்தத்திலிருந்து அவர்கள் மீண்டுவரும் வரையிலும் அரசு இதயசுத்தியுடன் நடந்துகொள்ளவேண்டும். இதற்கு முன்னர் இருந்த மலையக அரசியல்வாதிகள் இம்மக்களுக்கான விடிவு தொடர்பில் சரியான முறையில் சிந்திக்கத்தவறியதன் காரணமாகவே இன்றும் இந்த மக்கள் அடிமைத்தனத்திற்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். தேர்தல் காலங்களில் மாத்திரம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இம்மக்களை ஏமாற்றிவந்த வரலாறே மலையத்தினைப்பொறுத்தவரையிலும் காணப்படுகிறது.
அங்கிருக்கும் புத்திஜீவிகள் அப்பிரதேசங்களை விட்டு வெளியேறி நல்ல நிலையில் இருக்கின்றார்களே தவிர, குறிப்பாக அப்பிரதேசங்களில் வாழக்கூடிய மலையக மக்கள் இன்னமும் இவ்வரசியல்வாதிகளுக்கு கட்டுப்பட்டே தமது வாழ்க்கையினை நடாத்திவருகின்றனர். ஆறுமுகம் தொண்டமான் மாத்திரமல்ல. ஏனைய அரசியல்வாதிகளையும் இவ்வனர்த்தம் கோடிட்டுக்காட்டியுள்ளது. தொடர்ந்துவந்த அரசாங்கங்கள் இம்மக்களை ஓரங்கட்டி வந்ததன் காரணமாகவே இன்றும் கூட ஒழுங்கான அடிப்படைவசதிகளின்றி இம்மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இதற்கொரு காரணம் இருக்கின்றது. அங்குள்ள தனியார் தேயிலைத் தொழிற்சாலைகளில் அப்பிரதேசத்தில் வாழக்கூடிய மக்கள் தொழில் புரியாது வேறுவேறு தொழில்களுக்கு சென்றுவிடுவார்கள் என்ற காரணத்தின் அடிப்படையில் தொடர்ந்துவந்த அரசாங்கங்களும், அரசியல்வாதிகளும் இம்மக்களை இருந்த தராதரத்திலிருந்தே இன்னமும் வைத்துக் கொண்டிருக்கப்பார்க்கின்றார்கள்.
குறிப்பாக சொல்லப்போனால் இம்மலையக மக்களின் வியர்வை, இரத்தமே இத்தொழிற்சாலைகளின் முன்னேற்றத்திற்கும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்துள்ளது. தொழிற்சாலைகளும் இம்மக்களுடைய வாழ்வாதாரத்தினை அல்லது அவர்களது வளர்ச்சியை அபிவிருத்திசெய்யவேண்டும் என்று இதுவரை சிந்திக்கவில்லை. இவ்வனர்த்தத்தினை தொடர்ந்து அப்பிரதேச மக்கள் சிந்திப்பதன் ஊடாகவே இப்பிரதேசத்தில் ஒரு மாற்றத்தினை கொண்டுவர முடியும். இதனைத் தவிர எந்தவொரு அரசியற்கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் கூட மாற்றத்தினைக் கொண்டுவரமுடியாது. அதாவது மக்கள் அங்கு ஒரு புரட்சியினை உருவாக்கவேண்டும். அப்பொழுதுதான் அப்பிரதேசத்தில் வாழக்கூடிய மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான வழிகள் அமையும். அதன் ஒரு விழிப்புணர்வின் காரணமாகவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் இப்பிரதேசத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டனர். எதிர்காலத்தில் மக்கள் விழித்தெழவேண்டும். எனவே இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் அடிமைத்தனத்திலிருந்துவிடுபடுவதற்கு மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டார் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள்.