அரச ஊழியர்களுக்கு இம்மாத வேதனம் கிடைக்குமா?

193

 

அரச ஊழியர்களுக்குரிய வேதனத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்றைய தினம் அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் கூறியமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.

கேள்வி எழுப்பிய உறுப்பினர்
அரச ஊழியர்களுக்கு பணம் செலுத்தமுடியாத நிலை ஏற்பாட்டுள்ளதாக அறிவித்தீர்கள். எதிர்வரும் 25 ஆம் திகதி அரச ஊழியர்களுக்கு வேதனம் வழங்கப்பட வேண்டும்.

எனவே இந்த மாதத்துக்குரிய வேதனம் கிடைக்குமா என்பதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட கோரினார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்பட்ட இணக்கத்தின் பிரகாரம் பணத்தை அச்சிடமுடியாது என்று தெரிவித்திருந்தீர்கள். நாம் வினவியபோது, சர்வதேச நாணய நிதியத்துடன் எந்த உடன்படிக்கையும் இல்லை. வெளிப்படுத்த ஒன்றும் இல்லை என்றீர்கள். இந்த முன்னுக்குபின் முரணான விடயம் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அமைச்சர் பந்துல குணவர்தன பதில்
அவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன, இலங்கை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 16 தடவைகள் கடன் பெற்றுள்ளது.

கடந்த அரசாங்கமும் 1.5 பில்லியன் டொலரை கடனாக பெற்றது. அவ்வாறான எந்த சந்தர்ப்பத்திலும், ஒப்பந்தம் குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவில்லை.

அத்துடன், அரசாங்கம் ஒரு போதும் அரச ஊழியர்களுக்கு வேதனம் வழங்குவதை தவிர்க்காது. இக்கட்டான சந்தர்ப்பங்களில் வேறு செலவுகளை குறைத்து, அதனூடாக வேதனங்கள் வழங்கப்படும்.

தற்போது, பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அதற்குரிய கொடுப்பனவுகள், ஊடாகவும் மூலதன செலவுகளை குறைத்தும் அரச பணியாளர்களுக்கு வேதனம் வழங்கப்படுகிறது.

இவ்வாறே நிதி முகாமைத்துவம் செய்யப்படுகிறது. இது நாட்டின் தற்போதைய நெருக்கடிநிலை என அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

SHARE