யுத்த வலயங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் லண்டன் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
யுத்த வலயங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் நோக்கிலான பிரகடனமொன்றை அமுல்படுத்தும் பிரித்தானியாவின் திட்டம் வரவேற்கப்பட வேண்டியது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.எனினும், இந்த மாநாடு கூட இலங்கைக்கு எதிராக பயன்படுத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அரச படையினர் ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு பாலாரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என விடுதலைப் புலி ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தி வரவதாகத் தெரிவித்துள்ளனர்
.யுத்த வலயத்தில் இடம்பெறக் கூடிய பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் நோக்கில் லண்டனில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வார், இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.
பிரித்தானியாவின் இந்த உத்தேச திட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது என அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் லண்டனில் இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்கவோ அல்லது பிரகடனத்திற்கு ஆதரவளிக்கவோ முடியாத நிலைமை இலங்கைக்கு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சமூகத்தின் ஒரு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளினால் இவ்வாறான ஓர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமர்வுகளில் பங்கேற்கும் நாடுகள் மட்டுமே பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பதாக பிரித்தானியா அர்த்தப்படுத்திவிடக் கூடாது என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரம் பிரதிநிதிகள் இந்த அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவில் அங்கம் வகிக்த்த யாஸ்மீன் சூகா, இந்த அமர்வுகளில் விசேட உரையாற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.