ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மும்முரமாக அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்க, அலரிமாளிகையில் தங்கியிருந்த மஹிந்த ராஜபக்ஷ எப்படியாவது ஒரு இராணுவ புரட்சியையோ அல்லது தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் பேசி முடிவுகளை மாற்றிக்கூறுமாறு பலமுறை பணித்திருந்தார். ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால வெற்றிபெற்றதும், எப்படி அவர் வெற்றிபெற்றார் என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட முன்னரே முன்னாள் ஜனாதிபதி தனது மூட்டைமுடிச்சுகளுடன் அலரிமாளிகையைவிட்டு வெளியேறினார். இது அவருடை இராஜதந்திர அணுகுமுறை என்றும் பெருந்தன்மை என்றும் காட்டுவதற்காக நடந்துகொண்ட முறையாகும். ஆனால் உண்மை அதுவல்ல.
இதற்குப் பின்னணியில் நிறைவிடயங்கள் அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் நேரடித் தலையீடும், சந்திரிக்காவினுடைய இராஜதந்திர காய்நகர்த்தலுமே காரமாகின்றது. அலரிமாளிகையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த மஹிந்த ராஜபக்ஷ (நேரம் காலை 6.30) அதேசமயம், அவர் மைத்திரியை விடவும் ஒரு இலட்சம் வாக்குகள் தான் பின்தங்கியிருந்தார். இத்தருணத்தில் வாக்குகள் அறிவிக்கப்பட்டதெல்லாம் மஹிந்தவிற்கு எதிரான மாவட்டங்களே.
முக்கியமாக வடகிழக்கு. மஹிந்தவின் கோட்டைகளும், பெரிய மாவட்டங்களும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இவ்வாறான நிலையில் ஒரு இலட்சம் வாக்குகள் வித்தியாசம் என்பது அவர் ஹம்பாந்தோட்டையால் மட்டுமே ஈடுசெய்யக்கூடிய வித்தியாசம். அதுதவிர அவரது கோட்டைகளான மொனராகலை, கேகாலை, குருநாகல், இரத்தினபுரி, மாத்தறை என பெரிய மாவட்டங்கள் இருந்தன. அப்படியிருக்க அவர் ஏன் வெளியேறினார்.
இங்கே தான் விஷயம் இருக்கின்றது. தேர்தல் திணைக்கள அதிகாரிகள், ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள், கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் என அனைவரும் பேசியதில் சில தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டதொன்றாகும். அதிகாலைக்கு முன்னரே பெரும்பாலான முடிவுகள் எண்ணப்பட்டுவிட்டன. அப்பொழுது ஆட்சிமாற்றம் உறுதியாகிவிட்டது. எனினும் இந்தத் தேர்தல் அந்தரத்தில் நடக்கும் வித்தைக்காரனின் அலுவல் என்பதை தேர்தல் ஆணையாளர் தெரிந்தே வைத்திருந்தார். ஆனால் அவர் மிக நிதானமாக காரியங்களை செயற்படுத்தினார். முடிவுகளை விடியும் வரை தாமதப்படுத்தினால் கலவரங்களை தடுக்கலாம் என்பதை விளங்கிக்கொண்டார்.
இந்த நேரத்தில் ஜனாதிபதிச ; செயலகத்தில் இருந்து தேர்தல் ஆணையாளருக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்பு வந்துகொண்டிருந்தது. ஆரம்ப கட்டத்தில் சற்றுப்பொறுங்கள் என தேர்தல் ஆணையாளர் கூறிக்கொண்டிருந்தார். எப்படி இவர்களை சமாளிப்பது என யோசிக்கத்தொடங்கினார். நிலைமை கட்டுக்கடங்காமல் போக தேர்தல் ஆணையாளர் நள்ளிரவுக்கு சற்று முன்னதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவை தொடர்புகொண்டிருந்தார். அப்போது ஜனாதிபதியின் நிலைமை விபரீதமாக உள்ளதை தேர்தல் ஆணையாளர் கூறினார். ஏதாவது செய்யமுடியுமா? என ஜனாதிபதியின் செயலாளர் கேட்டிருந்தார். ஏதாவது என எதைக் கூறுகின்றீர்கள் என தேர்தல் ஆணையாளர் பதிலுக்குக் கேட்டார்.
அதற்கு லலித் வீரதுங்க, நான் உங்களிடம் நேரடியாக கேட்கின்றேன். உங்களால் ஜனாதிபதியை வெற்றியடைய வைக்கமுடியுமா? என்றார். சற்றுயோசித்த மஹிந்த தேசப்பிரிய, எதையாவது செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். தேர்தல் ஆணையாளர் சுயாதீனமாக செயற்படவேண்டிய நிலையைக் கூறிவிட்டு, அவரை சிறிதுநேரத்தில் தொடர்புகொள்வதாக தெரிவித்தார். இந்த இழுபறியினை அடுத்து தேர்தல் ஆணையாளர் அவசர அவசரமாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அவசரமாக எந்த முடிவும் எடுக்காமல் எதிர்க்கட்சிகளிடமும் விடயத்தினை கலந்துரையாட அவர் முடிவுசெய்தார்.
நள்ளிரவிலேயே தேர்தல் அதிகாரி ஒருவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடயத்தினை தெரிவித்திருந்தார். தேர்தல் களத்தில் கொழும்பில் ரணிலுடன் ஒன்றுகூடியிருந்த எதிரணித் தலைவர்கள் சிலர், உடனடியாக சந்திரிக்காவை தம்மிடம் வருமாறு அவசர அழைப்பினை விடுத்திருந்தனர். அடுத்த ஒருசில நேரங்களில் அங்கு வந்த சந்திரிக்கா, அவர்கள் கலந்துரையாடிய ஆலோசணையின் முடிவில் மேற்குல நாடுகளின் உதவியினை நாடுவது என முடிவுசெய்தார். இலங்கையின் ஆட்சிமாற்றத்தில் மேற்குலக நாடுகள் காட்டிவரும் அக்கறை அனைவருக்கும் தெரிந்த விடயம்தான்.
இப்போது எதிரணியின் வெற்றிக்காக அவர்கள் காத்திருக்கின்றார்கள். இவர்களுடன் இன்னொரு தரப்பாக இந்தியாவும் காத்திருக்கின்றது. சந்திரிக்கா மற்றும் ரணில் இந்தியா, அமெரிக்காவுடனான தொடர்புகளை ஏற்படுத்தி அதேநேரம் மற்றைய தலைவர்கள் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தனர். மேற்குலக நாடுகளுடன் மல்லுக்கட்டி நிற்கின்றோம் என்பதை மஹிந்த ராஜபக்ஷ மிகத் தெளிவாக அறிந்துகொண்டார். சந்திரிக்காவின் அழைப்பின் தாக்கம் அடுத்த சில நிமிடங்களில் மஹிந்தவை அதிரவைத்தது. அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஜோன் ஹெரி மஹிந்தவிடம் நேரடியாகத் தொடர்பினை மேற்கொண்டு பேசினார். அவர் பல்வேறு எச்சரிப்புக்களையும் விடுத்திருந்தார்.
எனினும் எதிரணித் தலைவரின் கருத்தின்படி ஜனநாயக தீர்ப்பினை ஏற்று ஆட்சியில் இருந்து இறங்க மறுத்தால் தாம் நேரடியாக தலையிடுவோம். இது போர்க்குற்ற விசாரணை போன்றதான சமாச்சாரமல்ல. இதனைக்கொண்டே நாம் நேரடியாக களமிறங்குவோம் என்பதே ஹெரியின் கருத்தின் சாராம்சமாகவிருந்தது.
அண்டைய நாடான இந்தியாவும் பல அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தது. உயரதிகாரியொருவர் லலித் வீரதுங்கவிடம் தொடர்பினை மேற்கொண்டு, மக்களின் தீர்ப்பினை மறுத்தால் நாம் நேரடியாக களமிறங்கலாம். யாரும் சுயமாக களமிறங்கி தமிழர் விவகாரத்தினை கையில் எடுத்து பிரச்சினையை பெரிதுபடுத்தலாம். அதேவேளை அமெரிக்கா ஒரு மிரட்டலுடன் இருந்துவிடவில்லை. எங்கே செக் அடிக்க வேண்டுமோ அங்கே அடித்துவிட்டது. கொழும்பில் உள்ள அமெரிக்கத்தூதுவர் உடனடியாக தேர்தல் ஆணையாளரை தொடர்புகொண்டார். தன்னை தொலைபேசியில் மிரட்டியதாக அமெரிக்க உயரதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். ஆட்சிமாற்றத்திற்கு தேர்தல் முடிவுகள் வழிகோலுமாகவிருந்தால் அதனை தயக்கமில்லாமல் வெளியிடுமாறும், அதன் பின்னரான பிரச்சினைகளுக்கு அமெரிக்கா பொறுப்பு என உறுதியளித்தனர்.
மக்கள் தீர்ப்பு ஆட்சிமாற்றம் எனில் அதனை மஹிந்த ராஜபக்ஷவை செவிமடுக்கவைக்க தம்மால் முடியும். ஆகவே தயக்கம் வேண்டாம். மக்களின் முடிவை துஷ்பிரயோகம் செய்தால் நீங்களும் பொறுப்புக்கூறவேண்டிய நிலை வரலாம் என அமெரிக்க உயரதிகாரி மஹிந்த தேசப்பிரியவிடம் மிரட்டலும் விடுத்திருந்தார். இதற்குள் ஜனாதிபதி தரப்பில் மந்திர ஆலோசணை நடந்தது. அவர்களால் எந்த முடிவும் எடுக்கமுடியாமல் இருந்தது. ஜனாதிபதியின் சகோதரர் கோத்தபாய இந்தக் கூட்டத்தில் எதனையும் பேசாமல் கடுமையான முகத்துடன் இருந்தார். அவருடைய நிலைப்பாட்டினை எவராலும் புரிந்துகொள்ளமுடியாமல்இருந்தது.
எப்பொழுதும் மேற்குலகத்துடன் எதிராகவிருக்கும் கோத்தபாய அலரிமாளிகையைவிட்டு வெளியில் வந்ததும் ஒரு அதிர்ச்சிகரமான முடிவினை எடுத்தார். குறிப்பிட்ட இராணுவ தொகுதியினரை கொழும்பில் தயார் நிலையில் வைக்குமாறும் அதாவது, எதிரணித்தலைவர்களை கைதுசெய்து அவர்களுக்கு சர்வதேசத்துடன் பங்குஎனக்கூறி, தேர்தல் செயலகத்தினை சுற்றிவளைத்து, மஹிந்த தேசப்பிரியவையும் கைதுசெய்ய திட்டமிட்டிருந்தார். நள்ளிரவில் தேர்தல் ஆணையாளரை தொடர்புகொண்டு முடிவினை மாற்றுமாறும் அல்லது இராணுவத்தினைக் கொண்டு ஆட்சியினைத் தொடர்வோம். நீங்களும் விபரீதங்களை சந்திக்கவேண்டிய நிலையேற்படும் என்று எச்சரிக்கையினையும் விடுத்தார்.
அப்பொழுது தேர்தல் ஆணையாளர் ஒரு முடிவிற்கு வந்தார். அதேநேரம் தேர்தல் ஆணையாளர் ஒரு முடிவிற்கு வந்தார். மீண்டும் அவர் எதிரணியுடன் தொடர்புகொண்டு, அதேசமயத்தில் எதிரணியுடன் கூடியிருந்த சில தமிழ் முக்கிய தலைவர்களும் உடனிருந்தனர். கோத்தபாயவின் மிரட்டலைக்கூறிய ஆணையாளர் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். எதற்கும் அஞ்சவேண்டிய தேவை இல்லை என எதிரணியினர் வாக்குறுதியளித்ததுடன், நிலைமைகளை சீர்செய்யும் நோக்குடன் சர்வதேசம் உள்ளது. சர்வதேச சமுகம் உங்களுடைய பாதுகாப்பினை வழங்கும் என்று கூறினர்.
உடனடியாக லலித் வீரதுங்கவை தொடர்புகொண்ட தேர்தல் ஆணையாளர் என்னுடன் நீங்கள் தொலைபேசியில் எந்தவிதமான தொடர்புகளையும் ஏற்படுத்தவேண்டாம். நான் எனது கடமைகளைச் செய்ய சுதந்திரமாகச் வழிவிடுங்கள். நான் எனது கடமைகளை சுதந்திரமாகச் செய்யப்போகிறேன் எனக்கூறி தொடர்பினை துண்டித்தார். இதேசமயத்தில் நிலைமைகள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட மஹிந்த ராஜபக்ஷ திட்டத்தினை நிறைவேற்றவேண்டாம் என கோத்தாவிடம் கூறியிருந்தார். இதனையடுத்து முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரே கோத்தபாய மாலைதீவிற்கு தப்பிச்சென்றார்.
இந்நிலையில் இந்த விடயம் ஓரளவில் தெரியப்படுத்தப்பட்டுவிட்டது. பாராளுமன்ற உறுப்பினரும், பொதுஎதிரணி தொடர்பில் முன்னின்று உழைத்தவர்களில் ஒருவரான அத்துரலிய ரத்தின தேரர், தொலைக்காட்சியொன்றில் இதனை அம்பலப்படுத்தியுள்ளார். எப்படியாவது அதிகாரத்தினை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் மஹிந்தவைவிட மும்முரமாக இருந்தவர் பாதுகாப்புச்செயலரும், அவரின் சகோதரருமாகிய கோத்தபாயவேயாகும். இவர் இராணுவப் பலத்தினை பிரயோகித்து ஆட்சியில் நீடிக்க முயற்சிகளை மேற்கொண்டார்.
இவ்விடயங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு நன்கு தெரியும். மிரட்டப்பட்ட விடயங்கள் தொடர்பாக யார் யார் என்பது பற்றி பகிரங்கமாக வெளியிடப்போவதாக அவர் தெரிவித்திருக்கின்றார். இதேவேளை லங்கா வைத்தியசாலையின் தலைமைப்பதவியில் இருந்து கோத்தபாய பதவி விலகுவதாக அறிவித்து, தனது இராஜிநாமாக் கடிதத்தினை ஒப்படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். நல்ல மனம் கொண்டு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விலகியதாகவே செய்திகள் கூறுகின்றன. அரசியலில் மஹிந்த ராஜபக்ஷ எடுத்துக்கொண்ட இறுதிமுடிவு இதுவாகும். ஆனால் இதற்கிடையில் பல்வேறான சதிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதனை முறியடிப்பதற்கு சந்திரிக்கா மற்றும் சம்பந்தனின் சிறந்த திட்டமே இறுதியில் கைகொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ERANEYAN (TPNNEWS)