தமிழர்களின் புராதன நீர்ப்பாசன சின்னமான அலைகல்லுப்போட்ட குளம் (பண்டாரக்குளம்) முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில்,சுமார் 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். பண்டாரவன்னியனாரின் விவசாய பூமியாக திகழ்ந்த இப்பகுதியில், இன்று சுமார் 150 க்கு மேற்பட்டோரின் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தொடர்ந்தார்.
இது குறித்து மேலும் அறியவருவதாவது
முல்லைத்தீவு தண்டுவான் மக்களின் அழைப்பை ஏற்று சமீபத்தில் அங்கு சென்ற ரவிகரன் மக்களுடன் குறைகேள் சந்திப்புக்களை நடாத்தினார். இதன்போது தண்டுவான், பழம்பாசி உள்ளிட்ட இடங்களில் உள்ள குறைகளை மக்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார். இதன் ஒருகட்டமாக மக்கள் அலைகல்லுப் போட்ட குளத்தின் தற்போதைய நிலையை ரவிகரனுக்கு நேரில் தெரியப்படுத்தினர்.
இது குறித்து ரவிகரன் மேலும் தெரிவிக்கையில்,
புராதன கட்டுக்களுடனேயே இக்குளம் இன்னும் காட்சியளிக்கிறது. இங்கு வான்பாயும் அணைக்கட்டுக்கள் உடைந்த நிலையில் நீர் தேங்கி நிற்காமல் உடனேயே வெளியேறிவிடுகிறது. இதனால் இங்குள்ள நீர்வளம் ,விவசாயத்திற்கு முற்றிலும் பயன்படாமல் வீணாகிறது. மக்களுடன் இப்பகுதிக்கு நேரில் சென்று இந்நிலைமைகளை உறுதிப்படுத்தினேன்.
இக்குளத்தை புனரமைத்தால் இருபோகமும் செய்யக்கூடிய வகையில் சுமார் 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.இதன்மூலம் 150 க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் பயன்பெறுவர்.
கடந்த ஆண்டு விவசாயிகள் தமக்கிடையே திரட்டிய நிதியின் மூலம் தான் குளத்தின் பாதைகள் ஓரளவு சீரமைக்கப்பட்டதாகவும் பல வகையில் கோரிக்கைகள் வைத்தும் இது குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் என்னிடம் தெரிவித்தனர் .இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பிடம் அறியத்தருகிறேன் என்று கூறினேன். மறுநாளே இது குறித்து அமைச்சர் ஐங்கர நேசனிடம் நேரில் அறிக்கையுடன் தெரிவித்துள்ளேன்.. என்றார்.
மழை பெய்து கொண்டிருந்த சூழ்நிலையிலும், பற்றைகள், சீரற்ற பாதைகள் ஊடாக குளத்தை நேரில் வந்து பார்வையிட்டதற்கு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.
காணொளி இணைக்கப்பட்டுள்ளது
அலைகல்லுப் போட்ட குளம் – காணொளி இணைப்பு