ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அவுட்டான விரக்தியில் புலம்பியபடி வெளியேறியது ரசிகர்களின் மனதை சுக்குநூறாக்கியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும் பெங்களூர் அணியும் மோதிய நிலையில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 209 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி படுதோல்வியடைந்தது.
இதில் விராட் கோலி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றார் போலவே முதல் பந்து முதலே பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்து நம்பிக்கையுடன் ஆடினார்.
ஆனால் ரபாடா வீசிய 3வது ஓவரில் விராட் கோலி 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷார்ட் லெந்த் பந்தை விராட் கோலி கட் ஷாட் ஆட முயன்றார். ஆனால் பந்து ராகுல் சஹாரிடம் கேட்ச் சென்றது.
இதற்கு களத்தில் இருந்த நடுவர் நாட் அவுட் கொடுத்தார். எனினும் அதனை எதிர்த்து பஞ்சாப் அணி DRS எடுத்தது. இதையடுத்து 3வது நடுவர் ரிவ்யூவ் செய்து பார்த்த போது, பந்து பேட்டில் எட்ஜானது தெரியவந்தது.
இதனால் அவுட் என மாற்றி கொடுக்கப்பட்டது. அவுட்டால் கடும் ஆத்திரமடைந்த விராட் கோலி, கைகளை தூக்கி வானத்தை பார்த்த அவர், கடவுளிடம் தனது அதிருப்தியை கூறினார். அதில் இதற்கு மேல் நான் என்னதான் செய்ய வேண்டும் என நீ நினைக்கிறாய், என்னை சோதிக்கிறாயே என மனம் கலங்கினார்.