ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடியவர்களை உடன் விடுதலைசெய் – முல்லையில் திரண்ட மக்கள்!

93

 

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு தமிழர் நிலங்கள் மீதான பேரினவாத ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடியவர்களை, கைது செய்த அசர பயங்கரவாத செயலை கண்டிப்பதாகத் தெரிவித்தே இன்று காலை முல்லைத்தீவில் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்கின்றது.

பாரிய மக்கள் ஆர்ப்பாட்டம்
மேலும் நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் நேற்றைய தினம் குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் மக்களோடு, வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், சமூகசெயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

கைது செய்தவர்களை விடுக்கக்கோரி போராட்டம்
இவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டமைதொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக து.ரவிகரன் மற்றும், இ.மயூரன் ஆகியோரை முல்லைத்தீவு காவல்துறையினர், காவல்நிலையம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

அதனையடுத்து காவல் நிலையம் சென்ற இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியே இன்று மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்மையும் குறிப்பிடத்தக்கது.

SHARE