ஆடம்பரமான ஆப்பிள் வாட்ச் அசத்த வருகிறது …

394

கடைசியில் அது வந்தே விட்டது. ஆப்பிள் விரைவில் கைகடிகார சந்தையில் ஐவாட்ச் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக இணையத்தில் வதந்திகள் உலாவின. கடைசியில் ஆப்பிள் வாட்ச் என்ற கலக்கலான சாதனத்தை மார்ச் 9 அன்று அறிமுகப்படுத்தியது ஆப்பிள். ஆப்பிளின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமான பின், புரட்சிகரமான எதுவும் இனி ஆப்பிளிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்ற கணிப்பை அதன் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் பொய்ப்பித்துவிட்டார். அடிப்படை மாடலுக்கு 349 டாலர்கள் முதல் அசத்தலான தங்க மாடலுக்கு 10 ஆயிரம் டாலர்களுக்கு மேல் வரை விலை நிர்ணயித்திருக்கிறது ஆப்பிள். ‘ஆப்பிள் இதுவரை இவ்வளவு பர்சனலான ஒரு சாதனத்தை வடிவமைத்ததில்லை’ என்கிறார் ஆப்பிளின் ஸ்டார் வடிவமைப்பாளர் ஜோனதன் ஐவி.
ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட் மற்றும் ஆப்பிள் வாட்ச் எடிசன் ஆகிய மூன்று முக்கிய ரகங்களில் ஆப்பிள் வாட்ச் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அலுமினியம், ஸ்டீல், தங்கம் ஆகிய மூன்று உலோக கடிகாரங்களுக்கு பல டிசைன்களில் வார்களையும் சேர்த்து மொத்தம், 38 மாடல்களில் ஆப்பிள் வாட்ச் விற்பனைக்கு வரும். ஐபோன், ஐபேட் போன்ற இதர ஆப்பிள் சாதனங்களுடன் இசைந்து செயல்படும் விதத்தில் ஆப்பிள் வாட்ச் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், மற்ற ஆப்பிள் சாதனங்களில் இல்லாத கூடுதல் ‘உணர்வான்கள்’ (சென்சார்) ஆப்பிள் வாட்சில் உண்டு. உதாரணமாக, குறுந்தகவல் வந்தாலோ, நினைவூட்டல்கள் தேவைப்பட்டாலோ, வாட்சின் அடிப்பகுதியில் இருக்கும் ‘டேப்டிக் இஞ்சின்’ உங்கள் மணிக்கட்டில் அழுத்தி உணர்த்தும். குவார்ட்ஸ் கடிகாரங்களில் முள்ளைத் திருப்பு வதற்கு இருக்கும் திருகாணி இதிலும் இருக்கிறது. ஆனால் அது மணியை சரி செய்ய அல்ல. படங்களை ஜூம் செய்ய, பட்டியல்களை ஸ்க்ரால் செய்ய அல்லது ஹோம் ஸ்க்ரீனுக்குச் செல்ல பயன்படுகிறது. இதில் உடல் நலம் சார்ந்த சில ‘ஆப்’களை ஆப்பிளே லோட் செய்து விற்கிறது. இதயத்துடிப்பை கண்காணிப்பது முதல் நீங்கள் நிற்பது, நடப்பது போன்ற செய்கைகளில் ஈடுபடுவதையும் கணக்கிட்டு இந்த ஆப்கள் உங்களுக்குத் தெரிவிக்கும். திரை சின்னதாக இருந்தாலும், போர்ஸ் டச் என்ற வசதியை இதில் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். விரலால் தொடுதலையும் சற்று பலமாக அழுத்துதலையும் வேறு படுத்தி உணரும் திறன் ஆப்பிள் வாட்சுக்கு உண்டு. ஆப்பிள் வாட்ச், இரண்டரை மணி நேரம் ரீசார்ஜ் செய்தால், 18 மணி நேரம் இயங்கும் என்கிறது ஆப்பிள். இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் ஜூன் அல்லது ஜூலையில் விற்பனைக்கு வரலாம்.

SHARE