ஆட்சி மாற்றம் ஏற்படுவதை தமிழ் மக்கள் விரும்புகின்றனர். அதற்கேற்ற வகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானத்தை மேற்கொண்டது . இவ்வாறு தெரிவித்துள்ளார் வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம். சமகால அரசியல் நிலைப்பாடும் அபிவிருத்தியும் தொடர்பான கலந்துரையாடல் வலி. கிழக்கு பிரதேச சபை மண்டபத்தில் பிரதேச சபை உபதவிசாளர் க. தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் – தமிழத் தேசியக் கூட்டமைப்போ, தமிழரசுக் கட்சியோ தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் இருந்து சிறிதளவும் விலகமாட்டாது. உறுதியான தலைமைத்துவத்துடன் உள்ளது
. இதில் யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் தமிழர்களின் வாழ்க்கையிலோ அரசியல் உரிமையிலோ மாற்றம் ஏற்படும் என் பது அர்த்தமல்ல. ஏன் வாக்களிக்க வேண்டும் என கேட்பது நியாயமல்ல. வாக்களிப்பை பகிஷ்கரிப்பதன் மூலமும் மாற்றம் ஏற்படமாட்டாது. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக சர்வதேசம் மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்த வெளிநாட்டு தூதுவர்கள் பல்வேறு கருத்துக்களையும் முன் வைத்தனர். அதேநேரம் எமது கோரிக்கைகளை நியாயமானது எனவும் ஏற்றுக்கொண்டனர்.
தமிழ் மக்களின் வாழ்வியலில் அரசியலில் மிக மிக துன்பகரமான காலம் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலம். அதில் மாற்றம் ஏற்பட வேண்டும் என தமிழ் மக்கள் விரும்புகின்றனர். அதற்கு அமையவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் சபை நிதானமாக ஆலோசித்து தனது முடிவை அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் வாக்களிக்காமல் தேர்தலை பகிஷ்கரித்தமையினால்தான் மஹிந்த பதவிக்கு வந்தார். அன்று தமிழ் தரப்பு உறுதியான நிலையில் இருந்தது. ஆயுதபலம் கொண்டிருந்தமையினால் உறுதியான தீர்மானத்தை மேற்கொள்ள முடிந்தது. இன்று நிலைமை மாறிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு காலச்சுழலுக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட்டது. இலங்கை அரசியலில் ஒரு கட்சி ஆட்சியில் இருந்த வேளையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடியதாக இருந்த போதிலும் தீர்வு காணப்படவில்லை. ஆனால், தற்பொழுது பொது வேட்பாளர் மைத்திரியை எல்லோரும் ஆதரிக்கின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் ஆதரிக்கின்றன. இந்த வகையில் ஏற்படும் அரசியல் மாற்றம் மற்றும் சர்வதேச அழுத்தம் என்பன இலங்கை அரசியலில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம். இந்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். எமது வாக்கு பலத்தை உரிய முறையில் கையாள வேண்டும்