ஆட்சி மாற்றம் தமிழ்த் தேசியத்தை ‘ஸ்ரீ லங்கா’ என்ற அடையாளத்துக்குள் சாதுரியமாக நகர்த்திச்செல்கிறது

389

 

ஆட்சி மாற்றம்  தமிழ்த் தேசியத்தை ‘ஸ்ரீ லங்கா’ என்ற  அடையாளத்துக்குள் சாதுரியமாக நகர்த்திச்செல்கிறது

லோ. விஜயநாதன்

இலங்கையின் அரசியல் களம் 19ஆம் திருத்த சட்டத்துடன் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே முன்னைய கட்டுரைகளில் பதிவு செய்திருந்தபடி சிங்கள தேசம் பல பிரிவுகளாக பிரிந்து நின்று அரசியல் கதிரைக்காண சண்டையில் இறங்கியுள்ளது. பலவாக்குறுதிகளை வழங்கி அவற்றை நூறு நாட்களில் நிறைவேற்றப்போவதாகக் கூறி ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் வெறுமனே 19 வது திருத்தம் எனும் உப்புச் சப்பற்ற திருத்தச் சட்டத்தை நூறு நாட்கள் கழிந்த நிலையில் நிறைவேற்றிவிட்டு மக்களையும் உலகையும் ஏமாற்றியபடி பாராளுமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து வருகிறார்கள்.

10404888_811936708855435_4900634886356858016_n118அதேநேரம் ராஜபக்சக்கள் எங்கே மீண்டும் எழுச்சி பெற்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்களுக்கெதிரான இலஞ்ச, ஊழல் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால், இதுவே எதிர்மறையான விளைவை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அதுவே அவர்களின் மீள் எழுச்சிக்கு வழிவகுத்துவிடுமோ என்ற இக்கட்டான நிலையிலும் ஆளும் தரப்பினர் உள்ளனர். இதனாலேயே மக்கள் செல்வாக்கு குறைந்தவரும் மகிந்த ராஜபக்சவின் அதிருப்திக்குள்ளானவருமான பஸில் ராஜபக்சவின் கைது முதலில் இடம்பெற்றது. அடுத்ததாக கோத்தபாயவின் கைதைநோக்கிய செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றபோதிலும் அதற்கான தகுந்த தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அனேகமாக அவர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கைது செய்யப்படக்கூடும்.

mahinda-maithri-970x623இதேவேளை ராஜபக்சவினரும் தாங்கள் கட்டிய பெரும் சாம்ராஜ்யம் தமது கண்முன்னே நிர்மூலமாகிவரும் அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளமுடியாதவர்களாகவும் எங்கே ஒரு சிறு துருப்புச் சீட்டேனும் தமது மீள் அரசியல் பிரவேசத்துக்குக் கிடைக்காதா என்றும் வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இங்கே வெளிப்படையான ஒரு உண்மை யாதெனில், விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு காரணகர்த்தாக்களாக இருந்த அதே சர்வதேசமே ராஜபக்சக்களின் வீழ்ச்சிக்கும் காரணகர்த்தாக்களாக இருந்துள்ளனர். எப்படி தமிழ் ஆயுதக் குழுக்கள் உருவாக்கப்பட்டு பின்னர் இந்திய வல்லரசின் தேவைகள் நிறைவேறிய நிலையில் அவை அழிக்கப்பட்டனவோ, அதேபோலவே பூகோள அரசியல் நலன்களுக்கான காய் நகர்த்தர்களுக்காக கொண்டுவரப்பட்ட இலங்கைக்கெதிரான யுத்த குற்ற விசாரணையும் இதே ராஜபக்சக்களின் முற்றுமுழுதான வீழ்ச்சியினூடே நீர்த்துப் போகச் செய்யப்பட முடியும். அதற்காக ராஜபக்சக்கள் நேரடியாக யுத்தக் குற்றத்துக்காக தண்டிக்கப்படுவார்கள் என்பதல்ல. மாற்றீடாக, அவர்களது செல்வாக்கு படிப்படியாக மக்கள் மத்தியிலிருந்து அகற்றப்பட்டு லஞ்ச, ஊழல் அதிகார துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தண்டிக்கப்படக்கூடும். இதையே அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கேரி போன்றவர்களின் அண்மைய விஜயங்களும் உரையடல்களும் மேலும்  உறுதிபடுத்துகின்றன.

என்னதான் சிங்கள தேசம் தனது அரசியல் அதிகார போட்டிக்காக பிரிந்து நின்று மோதிக்கொண்டாலும், தமிழ்தேசம் மீள் எழுச்சி பெற்றுவிடுவதை தடுப்பதில் ஒன்றுபட்டு கண்ணும் கருத்துமாகவே இருந்து வருகின்றனர். வெளியுலகுக்கு நல்லாட்சி, உள்ளக யுத்தக் குற்ற விசாரணை, மகிந்த ஆட்சிக்காலத்தில் விடுவிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்ட வடக்கின் உயர் பாதுகாப்பு வலய ஆக்கிரமிப்பு பகுதியில் சிறு துண்டை விடுவித்தல், 19 வது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகார குறைப்பு போன்றவற்றை காட்டிக் கொண்டு தன்மீதுள்ள சர்வதேச அளவிலான அதிருப்தியையும் நெருக்குவாரங்களையும் மெதுமெதுவாக குறைத்து வருகின்றனர்.

article-doc-227cx-6YDesczaLHSK2-664_634x422ஒருபுறம் சர்வதேசத்தை தம்பால் வளைக்கும் அதேநேரம் மறுபுறத்தில் இதையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமக்கு சவாலாக உள்ள புலம்பெயர் தமிழர்களின் செயற்பாட்டை சர்வதேச அளவில் முடக்குவதற்கான முன்முயற்சிகளும் கூட தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கு மேலதிகமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்பும் போது கைது செய்யப்படுவதும், எந்தவொரு தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்தும் சிறைகளில் வைக்கப்பட்டிருப்பதும், தமிழர் தாயகம் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளும் புலண்ணாய்வாலர்களினது தொடர் கண்காணிப்புக்குள்ளும் வைக்கப்பட்டிருப்பதும், தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுவதும் தொடர் கதையாக காணப்படுகின்றன.

மறுபுறத்தில் தமிழ் தேசியத்தின்பால் பற்றுள்ளவர்களினால் கைப்பற்றப்பட்ட அதிகாரமற்ற வடமாகாண சபையை உடைக்கவும் தமிழ் அரசியல் தலைவர்கள் மத்தியில் விரிசல்களையும் ஏற்ப்படுத்துவதற்கானதுமான முயற்சிகள் திரைமறைவில் நடைபெற்று வருகின்றன. ஒரு உதாரணமாக, அப்பாவி மக்களின் ஜீவநோபாய விடயமான தண்ணீர் பிரச்சினை பயன்படுத்தப்பட்டமையை குறிப்பிடலாம். இவ்வாறு பல விடயங்கள் நடைபெறுகின்றன.

விடுதலை வேண்டிப் போராடிய சமூகத்தின் ஜீவநோபாய பிரச்சினைகளுக்கு தமிழ் தலைமகள் தலைமையேற்று முன்னின்று போராட முன்வராமல் அசமந்தமாக சில சமயங்களில் இருந்து வருகின்றமையே, புல்லுருவிகள் அவற்றை சந்தர்ப்பமாக பயன்படுத்துவதற்கு காரணமாக இருந்து வந்திருக்கிறது.

z_page-06-tamilஇதன் ஒரு தொடர்ச்சியாகவே வடகிழக்கு மாகாணத்தின் பொம்மையாட்சியின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் வடக்கின் விஜயமும் அவரது ஊடக அறிக்கைகளும் அமைந்துள்ளன. இவரே இன்றிருக்கிற மாகாண அதிகாரத்திலும் பார்க்க சிறிதளவு கூடிய அதிகாரங்களை கொண்டிருந்த அன்றைய வடகிழக்கு இணைந்த மாகாண சபையை எதுவித அதிகாரமற்றது என்று கூறி வடகிழக்கு மாகாணத்தை தனித்தமிழீழமாக சுதந்திர பிரகடனப்படுத்திவிட்டு இந்தியாவிற்கு தப்பியோடியவர். இன்று இவர் இலங்கைக்கு வந்து, வடமாகாண சபை அதிகாரங்களை வைத்திருந்தும் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லையென்றும் தேவையற்ற தீர்மானங்களை நிறைவேற்றி மத்தியுடன் முரண்பட்டுக்கொள்வதாகவும் கூறிவருகின்றார்.

இந்திய அரசின் பின்னணியில் ஒரு சதி வலை பின்னப்படுவதனையே வரதராஜப் பெருமாளின் வருகையையும் இந்திய ஊடகங்களின் அண்மைக்கால செயற்பாடுகளும் காட்டுகின்றன. தெரிந்தோ தெரியாமலோ எமது அரசியல்வாதிகள் இந்த சதி வலைக்குள் சிக்குப்படும் அபாயம் இருக்கிறது.

இலங்கைக்கு வந்த வரதராஜபெருமாள், வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தவராசாவின் உதவியுடன் வடக்கு முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனை சந்தித்திருக்கிறார். இலங்கையில் பெருமாளின் தமிழ் தலைவர்களுடனான சந்திப்புக்களுக்கு தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உதவி வழங்கி வருவதாக தமிழ் ஊடகத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது. சேனாதிராசாவே, கொழும்பிலுள்ள சுமந்திரனின் வீட்டுக்கு பெருமாளை கூட்டிச்சென்றதாகவும் தெரியவருகிறது.

samanthan-1தமிழரசுக்கட்சியின் அண்மைக்கால சில செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் கண்டனத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக, எந்த சிங்கள தேசத்தை எதிர்த்து தமிழ்த் தேசியத்தை காப்பதற்காக தனது பதவிகளை துறந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து விலகி தமிழரசுக் கட்சியை தந்தை செல்வா ஸ்தாபித்தாரோ, அதே ஸ்தாபகரின் நினைவு தினத்துக்கு தமிழ் இனத்துக்கெதிரான சிங்கள தேசத்தின் இனப்படுகொலையின் முக்கிய பங்காளியான முன்னாள் ஜனாதிபதியான திருமதி.சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை அழைத்து அவரின் சிங்கள தேசியவாத உரைக்கு கைதட்டி மாலை போட்டு மகிழ்ந்துள்ளனர். இத்தகைய செயற்பாடுகளை எல்லாம் அரசியல் சாணக்கியம் என்று வேறு கூறிக்கொள்கின்றனர்.

mass sit down wide shotஇவர்களது இந்த சாணக்கியத்துக்குக் கிடைத்த பரிசே 19 ஆவது திருத்தச் சட்டமாகும். இந்த திருத்தத்தின் மூலம் புதிதாக ஒரே ஒரு சரத்து சேர்க்கப்பட்டுள்ளது. இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கவோ போட்டியிடவோ முடியாது என்பதே அது. இதனை கோதபாய ராஜபக்ஸ வின்வின் அரசியல் பிரவேசத்துக்கு எதிரான ஒரு ஆப்பாக காண்பித்து உண்மையில் தமிழ்தேசியத்தின் மிகமுக்கிய வலுவை எமது சாணக்கியர்களை வைத்து சிங்கள தேசம் உடைத்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் தமிழ் மக்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் தேர்தல்களை சந்திக்கும் போது இரட்டை குடியுரிமை உள்ள புலம் பெயர் தமிழ் மக்கள் வாக்களிக்க முடியாது. ஒட்டுமொத்தத்தில் புலம் பெயர் தமிழ் மக்கள் இதன் மூலம் வாக்குரிமை அற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். அத்துடன், தமது தாய் நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்ற கனவுடன் செயற்பட்டுவரும் அறிவும் ஆற்றலும் உள்ள புலம்பெயர் தமிழ் இளைஞர் யுவதிகள் எதிர்காலத்தில் அரசியல் மூலம் தமிழ் தேசத்துக்கு பணியாற்றமுடியாது. இது அன்று ஜி. ஜி.பொன்னம்பலம் மலையகத் தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகத்துக்கு ஈடான ஒரு செயலாகும். எத்தனை புலம் பெயர் தமிழ் மக்கள் இரட்டை பிரஜாவுரிமை கொண்டிருக்கிறார்கள் என்பது தற்போது முக்கியமில்லை. இது அரசியல் பிரசாரம் மூலம் இலகுவில் சாதிக்கப்படக்கூடிய ஒன்று. யதார்த்தம் என்வென்றால், தமிழ் தேசிய கூட்டமைப்பு 19ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவளித்து புலம்பெயர் தமிழ் மக்களின் தாய்நாட்டு வாக்குரிமை பறிக்கப்படுவதற்கு துணை நின்றிருக்கிறது என்பதே ஆகும்.

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் அண்மைக்காலமாக ஊக்கமளித்துவரும் அரசாங்கம், அரசியல் ரீதியாக எந்த தெளிவூட்டலையும் செய்யவில்லை. தமிழ் மக்களிடமிருந்து வெறுமனே அந்நிய செலவாணியை மட்டும் ஈட்டும் ஊக்கியாகவே இந்த இரட்டை குடியுரிமையை பயன்படுத்த அரசு முனைந்துள்ளது .

இதேசமயம், சிங்கள தேசமானது தேர்தல் மறுசீரமைப்பு (20வது திருத்தம்) என்று கூறி பாராளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கைய அதிகரிக்க முற்பட்டுள்ளதுடன் தொகுதிவாரி கலப்புத் தேர்தல் முறையினூடாக மேலும் தமிழர்களின் எண்ணிக்கையை குறைக்க முனைந்துள்ளது. இப்பொழுதுதான், நல்லாட்சியின் அர்த்தம் மேல்மாகண மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கு புரியத் தொடங்கியுள்ளது போல் தெரிகிறது.

Maithri-Ranil-Chandrikaமகிந்த ராஜபக்ச சிங்கள ‘பௌத்தம்’ எனும் அடையாளத்துக்குள் எல்லோரையும் முடக்க முற்பட்டதே அவரது கோட்பாடு தோற்பதற்கு காரணமாக அமைந்தது. ஆனால், மைத்திரி, ரணில், சந்திரிகாவின் ‘ஸ்ரீ லங்கா’ எனும் அடையாளத்தை மையப்படுத்தி மேற்கொள்ளும் நகர்த்தல்கள் அவர்களுக்கு மிகக் கூடிய அனுகூலத்தைப் பெற்றுக்கொடுப்பதுடன் தமிழ் தேசியத்தின் இருப்பையும் என்றும் இல்லாதவாறு கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இதற்கு அரசியல் சாணக்கியர்கள் என்று கூறப்படும் எமது முக்கிய அரசியல் தலைவர்கள் துணை நிற்கிறார்கள்.

அன்று அல்பிரட் துரையப்பா இத்தகைய செயற்பாடுகளை செய்தபோது இன்று இருக்கின்றவர்களும் அவர்களுடைய தளபதிகளும் அவரை தமிழினத் துரோகி என்று அடையாளப்படுத்தி இளைஞர்களை உசுப்பி விட்டமையே அவரின் படுகொலைக்கு காரணமாயிற்று. ஆனால், இன்று இவர்கள் சர்வதேச மட்டத்தில் சிறிலங்காவுக்கெதிராக கட்டியெழுப்பப்பட்டுள்ள பொறிமுறைகளை அடைவு வைத்துவிட்டு அதே சகவாழ்வு அரசியலை எந்த உத்தரவாதமும் இன்றி மேற்கொள்கிறார்கள்.

சிங்களத் தலைவர்களுடன் கூடிக் குலாவுவதும் அவர்களை தமிழ் மக்களின் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு அதிதிகளாக அழைத்து கௌரவிப்பதுவும் ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் ‘ஸ்ரீ லங்கா’ என்ற அடையாளத்தை மையப்படுத்திய மூலோபாயத்துக்கு சமாந்திரம் வரைவதாகவே இருக்கிறது.

Ducki-Jayarajahதமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அரசியல் வாடையே வேண்டாம் எமக்கு என்று ஒருகாலத்தில் கூறி கம்பன் புகழ்பாடி வயிறு வளர்ப்பவர்களும் இன்று இந்த கைங்கரியத்தை கச்சிதமாக செய்யத் தொடங்கியுள்ளனர். இவர்கள், 2000 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்திய கம்பன் விழாவுக்கு அன்று அமெரிக்க உளவாளி என்று கருதப்பட்ட தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக Sunday Times பத்திரிகையில் எழுதிவந்த பாதுகாப்பு ஆய்வாளரான இக்பால் அத்தாஸுக்கு விருது வழங்குவதற்கு முற்பட்டிருந்தனர். இது அப்போது கொழும்பில் இடம்பெயர்ந்து வாழ்ந்த தமிழ் இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்ப்படுத்தி இருந்தது. இக்பால் அத்தாஸுக்கு விருது வழங்குவதை ஆட்சேபித்து வெள்ளவத்தை பகுதிகளில் அவர்கள் சுவரொட்டிகளை ஒட்டினார்கள். இதனை, அப்போது, பலமாக இருந்த விடுதலைப்புலிகளின் பின்னணியுடனான செயற்பாடாக இருக்கலாம் என்று கருதி அச்சம் காரணமாக, இக்பால் அத்தாசுக்கு விருது கொடுப்பதை நிறுத்தி இருந்தார்கள்.

maithree[3]கம்பன் கழகத்தவர்கள் எப்பொழுது யாழ்ப்பாணத்தை விட்டு கொழும்புக்கு இடம்பெயர்ந்தார்களோ அன்றே அவர்கள் மொத்தவியாபாரிகளாக மாறிவிட்டார்கள். இன்று, கம்பனுக்கும் மைத்திரிக்கும் என்ன உறவு என்பதே தெரியாமல் கம்பன் விழாவில் தமிழர் தாயக ஆக்கிரமிப்பு படைகளின் சேனாதிபதியான மைத்திரிக்கு முடிசூடி மகிழ்ந்துள்ளார்கள்.

இவர்களின் இத்தகைய செயற்பாடுகளே சர்வதேச மட்டத்தில் இலங்கையில் சிங்கள- தமிழ் மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுவது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திவருகின்றது. ஜனவரி தேர்தல் மூலமான மாற்றத்தினூடாக தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கான களம் ஒன்று திறக்கப்பட்டுள்ளபோதும் எமது சாணக்கியர்களின் செயற்பாடுகளால் போராட்டம் முடக்கப்படும் நிலைமை ஏற்பட்டுவருகிறது.

SHARE