ஆதரவு யாருக்கு? முடிவெடுக்கவில்லையென்கிறார் ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடமே அதனை தீர்மானிக்கும்

431

 

ஆதரவு யாருக்கு? முடிவெடுக்கவில்லையென்கிறார் ரவூப் ஹக்கீம்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடமே அதனை தீர்மானிக்கும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தீர்மானிப்பதற்காக நடத்திய கலந்துரையாடலில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

அமைச்சர் ரவூப் ஹகீம் தலைமையில் இன்று கண்டியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளின் ஒன்று கூடல் இடம் பெற்றது.

இந்த ஓன்றுக் கூடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிதிபடுத்தும் அமைச்சர்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

கட்சியின் பிரதிநிதிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என ஒரு குழுவும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என ஒரு குழுவும் நிலைப்பாடுகளை வெளியிட்டன.

இதன் காரணமாக ஒரு முடிவுக்கு வரமுடியாமல் கலந்துரையாடல் நிறைவு பெற்றது.

இதனால், அடுத்த சில தினங்களில் யாருக்கு ஆதரவளிப்பதென்று தெரிய படுத்துவதாக அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.

எஸ்.பி. திஸாநாயக்கவின் அறிவிப்பை மறுத்தது முஸ்லிம் காங்கிரஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளதை, அந்த கட்சி நிராகரித்துள்ளது.

யாரை ஆதரவளிப்பது என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடமே அதனை தீர்மானிக்கும் எனவும் அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.

கண்டி, நாவலப்பிட்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இன்று பேசிய அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பேச்சாளர் நிஷாம் காரியப்பர். கட்சியின் அதியுயர் பீடத்தின் கூட்டம் நடைபெறும் தினம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

கடந்த சனிக்கிழமை அதியுயர் பீடம் கூடவிருந்த போதிலும் கூட்டம் நடைபெறவில்லை. புதிய திகதியும் முடிவு செய்யப்படவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இந்த விடயம் குறித்து கட்சியின் பல்வேறு மட்டத்திலான பிரதிநிதிகளிடம் தற்போது கலந்துரையாடி வருகிறது. கட்சியின் அனைத்து பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்மானம் அமையும்.

இறுதி தீர்மானத்தை எடுக்க குறைந்தது இரண்டு வாரங்களாவது செல்லும் எனவும் நிஷாம் காரியப்பர் கூறியுள்ளார்.

 

SHARE