கடந்தவாரம் போராட்ட வழியில் வந்த கட்சிகளுடனான சந்திப்பின்பொழுது முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்த கருத்துக்களானது ஒட்டுமொத்த போராட்ட வரலாற்றினையும் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு நடவடிக்கையாகவே அமைகின்றது. அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகவிருந்தாலும் கூட இக் கட்சிகளுடன் இணைந்து தன்னால் செயற்பட முடியாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று.
தமிழீழ விடுதலைப்புலிகளினால் தான் இந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. வன்முறைக் குழுக்கள் என்பது வேண்டுமென்று உருவானதொன்றல்ல. தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகின்றபொழுது அதற்கெதிராக குரல்கொடுத்து வந்தவர்கள்தான் இந்த ஆயுதக்குழுக்கள்.
வன்முறைக்கான வலிகளை தூபமிட்டது மாறிமாறி வந்த இலங்கையரசாங்கங்களே. அஹிம்சை ரீதியிலான போராட்டம் ஆயுத ரீதியாக மாறியது காலத்தின் தேவைகருதி என்று கருதப்படுகின்றது. அதனைப் பிரித்துப் பார்ப்பதையோ, அதனை கொச்சைப்படுத்துவதையோ நான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்த கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்குள்ளே இருக்கக்கூடிய தமிழரசுக்கட்சியைத்தான் நான் ஆதரிக்கின்றேன். ஆயுதக்குழுக்களை அல்ல என்ற பொருள்பட முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்தே. முதலில் மூன்று கட்சிகள் இருந்தன. தற்பொழுது ஐந்து கட்சிகள் எனக் கூறப்படுகின்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியாகவிருந்த இலங்கை தமிழரசுக்கட்சியும், ஈ.பி.ஆர்.எல்.எப், தற்பொழுது இருக்கும் ரெலோவும் 2001 ஆம் ஆண்டு இணைத்துக்கொள்ளப்பட்ட கட்சிகள். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினுடைய கட்சி கூட 2010ம் ஆண்டுடன் விலகிக்கொண்டுவிட்டது. ஆனந்தசங்கரியும், புளொட்டும் இணைந்தது 2011ம் ஆண்டுதான். இணைந்துகொண்ட இக்கட்சிகளை முதலமைச்சர் ஒதுக்கிப்பேசினாலும் நான் ஒதுக்கிப்பேசுவதற்குத் தயாராகவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருக்கக்கூடிய ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. அதனை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அவர் தமிழரசுக்கட்சியில் இருக்கிறார் என்பதற்காக வேறு காரணங்களைக் கூறியிருக்கலாம். இக்கட்சியில் இருந்துகொண்டு ஆயுதக்குழுக்களை ஓரங்கட்டிப் பார்ப்பதான கருத்து என்பது உண்மையில் ஏற்றுக்கொள்ளமுடியாததொன்று. அவர் ஒரு விடயத்தினைக் கூறியிருக்கலாம். அது எவ்வாறெனில் ஆயுதக்குழுக்களாகவிருக்கக்கூடிய ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இவர்கள் தோற்றம் பெற அடிப்படைக்காரணமே தமிழரசுக்சட்சிதான். இதனை அவர் புரிந்துகொள்ளவேண்டும். இதை அவர் புரிந்துகொண்டு கூறியிருப்பாராகவிருந்தால் அவரது தனிப்பட்ட ரீதியான கருத்து இதிலிருந்து புலப்படும். நான் தமிழரசுக் கட்சி சார்ந்தவன் தான் என்று இழுத்துப்பேசியதனால் தான் அது தவறு.
இன்னொரு வகையில் கூறப்போனால் அரசு இக்கட்சிகளை சின்னாபின்னமாக்குவதற்கு அக்காலந்தொட்டு இக்காலம் வரை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இக்கட்சிகளை பிளவுபடுத்துவதற்காகவே அரசு ஆனந்தசங்கரியினை பயன்படுத்திவருகின்றது. ஆனாலும் அவர் தற்பொழுது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்குள் தான் இருக்கின்றார். அவர் தமிழரசுக்கட்சிக்கு ஆதரவாக கருத்துக்களைக் கூறுகின்றாரா? இல்லையே. நான் கூறவருகின்ற விடயம் என்னவென்றால், விக்னேஸ்வரன் அவர்கள் கூறிய விடயம் பிழைதான். ஆனால் அதனைவிட ஆனந்தசங்கரியின் கருத்துக்கள் பிழையானது. நேரடியாகவே விடுதலைப்புலிகளையும், ஆயுதக்குழுக்களையும் தாக்கிக் கூறுகின்றார் ஆனந்தசங்கரி. விக்னேஸ்வரன் அவர்கள் மறைமுகமாக தாக்கிக் கூறுகின்றார். அவ்வாறு கூறியவர்களும் தமிழத்தேசியக்கூட்டமைப்பில் தான் இருக்கின்றார்கள். பிழையென்றால் யார் கூறினாலும் பிழைதான்.