ஆயுதப் போராட்டத்தை நோக்கி தமிழர்களை வலிந்துதள்ளும் சிங்களம் சர்வதேசம் தடுத்து நிறுத்துமா..?

568

 

ஆயுதப் போராட்டத்தை நோக்கி தமிழர்களை வலிந்துதள்ளும் சிங்களம் சர்வதேசம் தடுத்து நிறுத்துமா

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இராணுவ ஆட்சியே நிலவுகின்றது என்பதை ஈழத்தமிழர்கள் பல தடவைகள் எடுத்துக் கூறி வருகின்ற போதிலும் சர்வதேசம் இதனை நம்ப மறுத்து வருகின்றது. ஆனால், தமிழர் தாயகப் பகுதியில் இராணுவ ஆட்சிக்கான இறுதி உதாரணமாக கடந்த சனிக்கிழமை கிளிநொச்சியில் அரச படைகளின் காட்டுமிராண்டித்தனம் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தை நோக்கி படையெடுத்து வந்த இராணுவப் புலனாய்வாளர்களும் அவர்களின் கையாட்களான சில குண்டர்களும் அங்கிருந்த கூட்டமைப்பு உறுப்பினர்களை நோக்கி கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டமையானது வடக்கு, கிழக்கில் அரசாங்கத்தின் சிவில் நிர்வாகத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும் தற்போது வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசாங்கம் சர்வதேச ரீதியாகப் பிரச்சாரம் செய்து வருகின்றது. ஆனால், வடக்கு கிழக்கு இராணுவத்தால் சூழப்பட்ட நிலையில் இங்கு இராணுவ ஆட்சியே நிலவுகின்றது என்பதே முற்று முழுதான உண்மையாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கிலுள்ள மக்களை அடக்கியாள்கின்றார்கள் என்றும் அவர்கள் இங்குள்ள மக்களை அடிமைகள் போன்று நடத்தி அவர்களின் சுதந்திரத்தை பறித்துள்ளார்கள் என்றும் உலக நாடுகளுக்கு பிரச்சாரப்படுத்திய மகிந்த அரசு அந்த நாடுகளின் உதவியைப் பெற்று புலிகள் என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்தது.

இந்த யுத்தம் மூலமாக இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றொழித்ததுடன் புலிகளின் கட்டமைப்புகளையும் அரசும் அரச படைகளும் தகர்த்தழித்தன. ஆனால், புலிகள் தமிழ் மக்கள் மீது சர்வாதிகாரம் நடத்தினார்கள் என்று கருத்து வெளியிட்ட மகிந்த அரசாங்கம் இன்று தனது படைகள் சர்வாதிகாரம் நடத்துகின்றபோது அதனை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? புலிகளின் ஆட்சியில் மக்கள் இருந்த நிலைமைக்கும் தற்போது மக்கள் இருக்கின்ற நிலைமைக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. புலிகளின் காலத்தில் வடக்கு, கிழக்கில் நேர்மையான ஆட்சியே நடைபெற்றது, சிங்கள அரசு சொல்வது போன்று தமிழ் மக்கள் புலிகளால் அடக்கியாளப்பட்டார்கள் என்றால், இன்று வடக்கு, கிழக்கு மக்களிடையே சிறீலங்கா அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

இங்கே தற்போது நடைபெறும் சிறீலங்கா அரசின் ஆட்சியையா, புலிகளின் ஆட்சியையா மக்கள் விரும்புகிறார்கள் என்று சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினால் புலிகள் தான் தமிழர்களின் காவலர்கள் என்பது சிறீலங்கா அரசாங்கத்திற்கு மட்டுமல்ல முழு உலகத்திற்கும் புரியும். புலிகளின் ஆட்சியில் தமிழர் தாயகப் பகுதியில் நேர்மை, நியாயம், நீதி வழுவா நெறிமுறை கடைப்பிடிக்கப்பட்டது. தமிழீழ தேசியத் தலைவரின் வழி நடத்தலில் செயற்பட்ட காவல்துறையும் நீதித்துறையும் இந்த நீதி பரிபாலிப்பை செவ்வனே நிறைவேற்றின. ஆனால், இப்போது இங்கே நடைபெறுகின்ற சிறீலங்கா அரசினதும் படைகளினதும் செயற்பாடுகளை நோக்கினால் உலகத்திலேயே கிட்லர், முசோலினி, இடி அமீன் போன்ற கொடூர ஆட்சியாளர்கள் வரிசையில் மகிந்த ராஜபக்சவும் சிறப்பிடம் பிடித்துள்ளார்.

மகிந்தவின் ஆட்சிக்காலம் ஈழத் தமிழ் மக்களுக்கு கொடிய காலமாக, இருண்ட காலமாக மாறியிருக்கின்றது. இதனாலேயே தமிழர் தாயகப் பகுதியில் அராஜகங்கள் இடம்பெற்று வருகின்றன. வடக்கு, கிழக்கெங்கும் இந்த படையினரினதும் படைப் புலனாய்வாளர்களதும் அராஜகங்கள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி அறிவகம் மீதான காடையர்களின் தாக்குதல் அமைந்துள்ளது.

இந்த தாக்குதலானது இராணுவ மற்றும் காவல்துறைப் புலனாய்வாளர்களால் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதலாகும். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற உதயன் பத்திரிகைக்கு எதிரான தாக்குதலாகவே இந்த தாக்குதல் சித்தரிக்கப்பட்டது. வன்னியில் கடந்த சில தினங்களாக உதயன் பத்திரிகைக்கு எதிரான போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் நடைபெற்று வருகின்ற ஆசிரிய இடமாற்றங்கள் தொடர்பாக அண்மையில் உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் ஒரு கவிதை பிரசுரமாகியது.

அந்தக் கவிதையில் ‘யாழ்ப்பாணத்திலிருந்து பல கஸ்டங்களைக் கடந்து வன்னிக்கு வந்து எப்படி நான் மாடு மேய்ப்பேன்?’ என்ற வரிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இதில் மாடுகள் என்ற பதம் மாணவர்களைக் குறிக்கின்றது என்றும் உதயன் பத்திரிகை வன்னி மாணவர்களை மாடுகள் என்று குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வன்னி மக்களால் கோரப்பட்டது. ஆனால், உதயன் அவ்வாறு செய்யவில்லை. இதனால் வன்னி மக்களில் சிலர் ஒன்று கூடி மாணவர்களையும் இணைத்து உதயனுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது சில தினங்கள் தொடர்ந்தது.

இந்த நிலையிலேயே கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னாலுள்ள கூட்டமைப்பு அலுவலகத்தில் கட்சியின் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக படைப் புலனாய்வாளர்கள் அறிந்து அந்தக் கலந்துரையாடல் மீது தாக்குதலை நடத்தவேண்டுமென்பதற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டனர். ஏற்கனவே, உதயன் பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடத்திய வேளை பயன்படுத்திய பதாகைகள் மற்றும் கோசங்கள் அடங்கிய அட்டைகள் போன்றவற்றைத் தேடியெடுத்த படைப் புலனாய்வாளர்கள் கிளிநொச்சியிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் வைத்து தாக்குதலுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

சுதந்திரக் கட்சியின் தொண்டர்களாகிய குண்டர்களும் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு நிறைந்த மதுபானம் வாங்கிக் கொடுத்து உதயன் பத்திரிகைக்கு எதிரான பேரணியாக சிங்கக் கொடிகளையும் தாங்கியதாக போராட்டம் நகர்ந்தது. அனைவருக்கும் போதை. தாங்கியிருந்த பதாகைகளிலோ தூக்கிப் பிடித்திருந்த அட்டைகளிலோ எழுதப்பட்ட கோசங்களை எழுப்பாமல் போகாதே போகாதே ஜெனிவாவிற்கு போகாதே என்று உரத்துக் கோசமிட்டனர். அந்த நேரத்தில் கிளிநொச்சியிலுள்ள அறிவகத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, சிறிதரன், சுமந்திரன் மற்றும் சரவணபவன் போன்றோர் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில், சுமார் 350 வரையான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் யுத்தத்தில் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியவர்கள். பத்து வரையானோர் அங்கவீனர்கள். நூற்றுக்கணக்கான விதவைகள். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலம் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டுக்கொண்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த இடத்திற்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்களான இராணுவ, காவல்துறைப் புலனாய்வாளர்களும் சிவில் உடையில் நின்ற இராணுவத்தினரும் முதலில் குறித்த அலுவலகத்தின் மீது கற்களால் தாக்கத் தொடங்கினர். பின்னர் மது போதையில் நின்ற ஏனையோர் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். அங்கு ஒரு யுத்தம் நடப்பது போன்றே சத்தங்கள் கேட்டன. கூட்டத்தில் கலந்துகொண்டோர் கல்வீச்சால் நிலைகுலைந்தனர்.

அறிவகத்தின் உள்ளேயும் வளாகத்திற்குள்ளேயும் ஓடி ஒதுங்கினர். இந்த நிலையில் திடீரென்று அலுவலகத்திற்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு நின்ற பொது மக்களை மரக்கட்டைகளால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். பின்னே கல்லெறித்தாக்குதலும் முன்னே மரக்கட்டைத் தாக்குதலும் நடைபெற்றதால் பத்திற்கு மேற்பட்ட பொது மக்களும் இரு ஊடகவியலாளர்களும் காயமடைந்தனர்.

இந்த அராஜகத் தாக்குதல் இடம்பெற்றவேளை அந்தக் கலந்துரையாடலுக்கு பாதுகாப்பு வழங்க வந்திருந்த ஆறு காவல்துறையினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் காவல்துறையினருமாக பத்து வரையான காவல்துறையினர் அங்கு நின்றுள்ளனர். அவர்கள் கைகளில் ஏ.கே 47 துப்பாக்கிகளை வைத்திருந்தனர். ஆனால் அந்தத் தாக்குதலை நிறுத்துவதற்கு இவர்கள் எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இதனால், மிக அண்மையிலேயே இருந்த கிளிநொச்சி காவல்துறையினருக்கு தொலை
பேசியூடாக அறிவித்த போதிலும் அவர்கள் உடனடியாக அங்கு வரவில்லை. தாக்குதலாளிகள் சென்று
விட்டார்களா என்பதை உறுதிப்படுத்திய பின்னர் தான் காவல்துறையினர் வந்தனர்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் எதனைக் காட்டுகின்றதென்றால் சிறீலங்கா படைகளின் ஆதிக்கம் தான் வடக்கு கிழக்கில் நிலைத்திருக்கின்றது என்பதை துல்லியமாக எடுத்து விளக்குகின்றது. மக்களை மந்தைகள் போன்று நினைத்து எப்படியும் தாக்கலாம். அவர்கள் எதிர்த்து குரல்கொடுத்தால் கைது செய்து நாலாம் மாடியில் கொண்டு சென்று உதைக்கலாம் என்ற நிலையே இன்று சிறீலங்காவில் இருக்கின்றது. இந்த நிலை நீடிக்குமாயின் தொடர்ந்து தமிழ் மக்கள் பொறுமையாக இருக்க மாட்டார்கள். பொறுமைக்கும் எதிர்பார்ப்பிற்கும் எல்லைக் கோடுகள் உள்ளன. அந்த எல்லைக் கோடுகளை அடையும் போது மீண்டும் இங்கே ஒரு யுத்தம் வெடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நாங்கள் எமது பிரதேசத்தில் நிம்மதியான வாழ்வையே விரும்புகிறோம். இதற்கு சிறீலங்காவும் சர்வதேசமும் தடையாக இருந்தால் நாம் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் மீண்டும் ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை.

தாயகத்தில் இருந்து வீரமணி
நன்றி : ஈழமுரசு

SHARE