இங்கிலாந்து ஓவியரின் படைப்பு ஏல விற்பனையில் சாதனை

482
இங்கிலாந்தைச் சேர்ந்த ஓவியரான ட்ரேசி எமின் கடந்த 1998ஆம் ஆண்டில் வரைந்த ‘மை பெட்’ என்ற ஓவியத்தை அங்குள்ள தொழிலதிபரான சார்லஸ் சாட்சி என்பவர் கடந்த 2000ஆவது ஆண்டில் 1,50,000 பவுண்டிற்கு வாங்கினார். நவீனகால பாணியாகக் கருதப்படும் இந்த ஓவியத்தில் கசங்கிய படுக்கை உறை, வீசி எறியப்பட்டிருந்த சிகரெட் துண்டுகள், உள்ளாடைகள் போன்றவை வரையப்பட்டிருந்தன.

போருக்கு பிந்தைய மற்றும் சமகாலப் படைப்புகள் என்ற பிரிவில் நேற்று இந்த ஓவியத்துடன் சேர்த்து மொத்தம் 75 படைப்புகள் லண்டனில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. எப்போதும் இல்லாத வழக்கமாக எமினும் நேற்றைய ஏலத்தில் பார்வையாளராகக் கலந்துகொண்டார். ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகள் உள்ளிட்ட மொத்தம் 28 நாடுகளைச் சேர்ந்த 190 ஏலதாரர்கள் அங்கு கூடினர்.

இந்த ஏலத்தில் எமினின் ஓவியம் அதிகபட்ச விலையாக 2.5 மில்லியன் பவுண்டிற்கு (4.25 மில்லியன் டாலர்) விற்பனை ஆனது. இது அவரது முந்தைய ஓவியத்தைவிட நான்கு மடங்கு உயர்ந்த விற்பனையாகும் அதுபோல் பிரான்ஸ் ஓவியர் பெக்கானின் படைப்பு 11.5 மில்லியன் பவுண்டினை அந்நிறுவனத்திற்குப் பெற்றுத்தந்தது. இவர்களின் ஓவியங்களுடன் ஆன்டி வர்ஹோல், டேமியன் ஹிர்ச்ட், பீட்டர் டாய்க், ஜாக்சன் பொல்லோக் போன்றோரின் ஓவியங்களும் இடம் பெற்றிருந்த இந்த ஏலத்தில் நேற்றைய மொத்த விற்பனைத்தொகை 99 மில்லியன் பவுண்டாகும்.

எமினின் ஓவியத்துடன் மொத்தம் 50 நவீன ஓவியங்கள் இந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் சாட்சி தன்னிடமிருந்த சேகரிப்புகளில் பெரும்பாலானவற்றை விற்றுவிட்டதாகத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஏல விற்பனைக்கு ஒரு ஓவியர் நேரில் வருவதென்பதும் ஒரு அரிய நிகழ்வாகும் என்று கிறிஸ்டி ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE