இது ஒரு வரலாற்று திருப்புமுனை: ரஷ்யாவில் இருந்து வெளியேறிய நிறுவனம்!

17

 

உக்ரைன் நாட்டுக்கு எதிரான போர் காரணமாக ரஷ்யாவை விட்டு சீமென்ஸ் நிறுவனம் (Siemens) வெளியேறியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் குறித்த போரில் இதுவரை அப்பாவி பொதுமக்கள் 3,381 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 3,680 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் வேலையில் ரஷ்யாவில் இருந்து பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன.

பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உருவாக்கிய சந்தையை போர் காரணமாக ரஷ்யாவை விட்டு வெளியேற பல நிறுவனங்கள் முடிவெடுத்திருக்கின்றன. நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பல முதலீட்டாளர்களும் வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்ததைக் கண்டித்து ஜெர்மனியின் சீமென்ஸ் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து வெளியேறி உள்ளது.

முன்னதாக 1851 ஆம் ஆண்டு மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரங்கள் இடையே தந்தித் தொடர்பை ஏற்படுத்திக்கொடுக்கச் சென்ற சீமென்ஸ் நிறுவனம் கடந்த 170 ஆண்டுகளாக ரஷ்யாவில் செயல்பட்டு வந்தது.

தொழில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான சீமென்சின் மொத்த வருவாயில் ஒரு விழுக்காடு ரஷ்யாவில் இருந்து கிடைத்து வந்தது. ரஷ்யாவில் சீமென்சின் அதிவிரைவு ரெயில் தயாரிப்பு மற்றும் பராமரிப்புப் பணியில் மூவாயிரம் பேர் பணியாற்றி வந்தனர்.

இதுதொடர்பாக சீமென்ஸ் தலைமை நிர்வாகி ரோலண்ட் புஷ் கூறுகையில்,

இது ஒரு வரலாற்று திருப்புமுனை. நாங்கள் ஒரு நிறுவனமாக இந்த போரை தெளிவாகவும் கடுமையாகவும் கண்டித்துள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

SHARE