இந்தியாவின் புது டெல்லி சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா, இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைக்கு பயனிக்குமாறு அவர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
இலங்கையில் புதிய அரசு பதவியேறுள்ள நிலையில் அங்கிருந்து முதல் தலைவராக மங்கள சமரவீர டெல்லி சென்றுள்ளார். அவர் டெல்லி சென்றதும் முதலில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜைச் சந்தித்துப் பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து முக்கியமாக விவாதித்தார்.
3 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகள் தவிர இலங்கையில் அரசியல் மறு சீரமைப்பு குறித்தும் இரு தரப்பும் பேசியதாக கூறப்படுகிறது. தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து சுஷ்மாவுடன், சமரவீர பேசினார். இரு தரப்பு கூட்டுத் திட்டங்கள் குறித்தும் பேசினார். இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார் மங்கள இலங்கைக்கு பயனிக்குமாறு இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விடுத்த அழைப்பை பிரதமரிடம் கொடுத்தார்.
இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதி பூணப்பட்டது. இலங்கை அமைச்சரிடம், தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக மோடி பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.