“இந்தியாவுக்கு எதிராக இலங்கை முஸ்லீம்கள் செயற்படமாட்டார்கள்”=

498

“இந்தியாவுக்கு எதிராக இலங்கை முஸ்லீம்கள் செயற்படமாட்டார்கள்”

இலங்கை அமைச்சர் ரவுப் ஹக்கீம்

இலங்கை அமைச்சர் ரவுப் ஹக்கீம்

இலங்கை முஸ்லீம்கள் இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டுக்கு எதிராகவோ, அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கு எதிராகவோ பயங்கரவாத தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதை ஒருநாளும் ஆதரிக்கவோ, அனுமதிக்கவோ மாட்டார்கள் என்று இலங்கையைச் சேர்ந்த ஐந்து முஸ்லீம் அமைச்சர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசில் இருக்கும் ஐந்து முஸ்லிம் அமைச்சர்கள் (ரவுப் ஹக்கீம், ஏ எச் எம் ஃபௌசி, ரிஷாத்பதியுதீன், பஷீர் ஷேகு தாவூத், ஏ எல் எம் அதாவுல்லா) இணைந்து கையெழுத்திட்டு வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில், இலங்கை முஸ்லீம்கள் மத்தில் பயங்கரவாதிகளும், தீவிரவாத குழுக்களும் இருப்பதாக சிலதரப்பாரால் திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லீம் ஒருவர் வேவுபார்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஒரு சம்பவத்தை வைத்து, இலங்கை முஸ்லீம்கள் பயங்கரவாதிகளையும் தீவிரவாதிகளையும் ஊக்குவிப்பதாக ஒரு பகுதி ஊடகங்களும் வேறு சில குழுக்களும் செய்யும் பொய்யான பிரச்சாரத்தை தாங்கள் கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்திருக்கும் இந்த கூட்டறிக்கை, இந்த ஊடகங்களும், குழுக்களும் இலங்கை முஸ்லீம்களை இப்படியெல்லாம் பொத்தாம் பொதுவில் மோசமானவர்களாக சித்தரிப்பதன் மூலம் இனவாத குழுக்கள் முன்னெடுக்கும் வன்முறைகளை தெரிந்தோ தெரியாமலோ ஆதரிப்பதாகவே அர்த்தம் கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.

இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை இந்திய அதிகாரிகள் உரிய சட்டங்களின் கீழ் கையாள்வார்கள் என்று நம்புவதாகவும் அந்த ஒரு குறிப்பிட்ட சமபவத்தை மட்டும் வைத்து இலங்கை முஸ்லீம்களை மோசமானவர்களாக சித்தரிக்க மாட்டார்கள் என்றும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

முஸ்லீம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் என்கிற முறையில், தாங்களோ, இலங்கை முஸ்லீம்களோ எந்த சந்தர்ப்பத்திலும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ, சகித்துக்கொள்ளவோ மாட்டோம் என்றும், இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டுக்கு எதிராகவோ, அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதை தாங்கள் ஒருநாளும் ஆதரிக்கவோ, அனுமதிக்கவோ மாட்டோம் என்றும் இந்த ஐந்து முஸ்லீம் அமைச்சர்களின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் பயங்கரவாதிகளோ தீவிரவாத குழுக்களோ இல்லை

இலங்கையில் இருக்கும் முஸ்லீம்கள் மத்தியில் பயங்கரவாதிகளும், தீவிரவாத குழுக்களும் இருப்பதாக செய்யப்படும் உள்நோக்கத்துடனான பொய்பிரச்சாரத்தை மறுப்பதாகவும் கண்டிப்பதாகவும் இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் ஐந்து முஸ்லீம் அமைச்சர்கள் கூட்டறிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இலங்கையில் நடந்த முஸ்லீம்கள் மீதான தாக்குதல் (ஆவணப்படம்)

இலங்கையில் நடந்த முஸ்லீம்கள் மீதான தாக்குதல் (ஆவணப்படம்)

 

இலங்கை முஸ்லீம்கள் பல நூற்றாண்டுகளாக தமது தாய்நாடான இலங்கையில் அமைதியாகயும் சமூக நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருவதாகவும், இலங்கை என்கிற தம் தாய்நாட்டின் நில அடிப்படையிலான ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் காக்கும் பணியில் தமது பங்கை தொடர்ந்து ஆற்றிவந்திருப்பதாகவும் அவர்களின் கூட்டறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கை முஸ்லீம்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட இனத்துவேஷத்துடனான திட்டமிட்ட தாக்குதல்களில் இருந்து இலங்கை முஸ்லீம் சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வெளியே வரத்துவங்கியிருக்கும் சூழலில், இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் பயங்கரவாதிகளும், தீவிரவாத குழுக்களும் இருப்பதாக சிலதரப்பாரால் திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ஒன்றாக இருப்பதாகவும், இலங்கை முஸ்லீம் சமூகத்துக்கு எதிரான இத்தகைய பொய்ப்பிரச்சாரத்தை தாம் கடுமையாக மறுப்பதுடன், வன்மையாக கண்டிப்பதாகவும் இவர்கள் தெரிவித்திருக்கிறாரகள்.

இலங்கையில் பயங்கரவாதம் உருவாகவேண்டும் என்று நினைக்கும் சக்திகள் தான் முஸ்லீம்களுக்கு எதிரான இத்தகைய உள்நோக்கத்துடனான, சுயநலன் சார்ந்த பிரச்சாரத்தை செய்வதாகவும், பயங்கரவாதத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் இந்த கூட்டறிக்கை தெரிவித்திருக்கிறது.

BBC NEWS

SHARE