இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க நாங்களும் தயார்: பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி

388
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பொதுமக்கள் வாழும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்படும் இந்த தாக்குதல்களுக்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி அருண் ஜெட்லி கடும் கண்டனம் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தனது அத்துமீறலை நிறுத்தவில்லை என்றால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என்றும், இனியும் இந்நிலை தொடர்ந்தால் நமது படைகளும் தங்களின் பலத்தை காட்டும் என்றும் ஜெட்லி எச்சரிக்கை விடுத்தார். இதுபற்றி பாகிஸ்தான் துணை தூதருக்கும் இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரியோ இந்தியாவுக்கு எதிர்சவால் விட்டுள்ளார்.

அருண் ஜெட்லியின் எச்சரிக்கை பேட்டி வெளியான சில மணி நேரத்தில் கவாஜா ஆசிப் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவின் எந்த தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுக்கும் திறமை பாகிஸ்தானிடம் உள்ளது. ஆனால், அணுசக்தி கொண்ட அண்டை நாடுகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு எல்லையில் பதட்டத்தை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து ராணுவ மற்றும் அரசியல் தலைவர்களுடன் விவாதிப்பதற்காக நாளை தேசிய பாதுகாப்பு கமிட்டிக் கூட்டம் நடத்த பிரதமர் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார்.

SHARE