இந்தியா – இலங்கை மீனவர்கள் கொழும்பில் நாளை பேச்சு

481
இந்தியா – இலங்கை மீனவர்கள் பிரச்னை தொடர்பாக, கொழும்பில் நாளை பேச்சு நடைபெற உள்ளது. இந்தியா – இலங்கை மீனவர்கள் பிரச்னை தொடர்பான பேச்சு, மார்ச் மாதம், இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், பேச்சு துவங்குவதற்கு முன், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என, தமிழக அரசு நிபந்தனை விதித்தது. அதனால், பேச்சு நடைபெறுவதில் தடை ஏற்பட்டது.

                                    இதன் பின், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா., மனித உரிமை கமிஷனில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த போது, அது தொடர்பான ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல், இந்திய அரசு புறக்கணித்தது. இதனால், மகிழ்ச்சி அடைந்த, இலங்கை அதிபர் ராஜ பக்ஷே இந்திய அரசின் செயலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிக்கும்படி உத்தரவிட்டார். இந்நிலையில், கொழும்பில் நேற்று நிருபர் களிடம் பேசிய, இலங்கை மீன்வளத் துறை அமைச்சக தகவல் தொடர்பாளர், நரேந்திர
ராஜ பக்?ஷே கூறியதாவது: இந்தியா – இலங்கை மீனவர்கள் பிரச்னை தொடர்பாக, திட்டமிட்டபடி கொழும்பில் நாளை பேச்சு நடைபெற உள்ளது. பேச்சு நடத்தும் குழுவினருக்காக, நாங்கள் காத்திருக்கிறோம். இலங்கை மீனவர்கள், 25 பேர், சமீபத்தில் ஆந்திர மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டதோடு, அவர்களின் ஐந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பிரச்னையால், இரு நாட்டு மீனவர்கள் இடையேயான பேச்சில், எந்த பாதிப்பும் ஏற்படாது. இலங்கை மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக, ஏற்கனவே சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் மூலமாக பேச்சு நடத்தி வருகிறோம். ஆந்திர மாநில நடைமுறைகள் கொஞ்சம் கடினமானவை என்பதால், இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்படுவதில், காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

SHARE